இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! – Global...

இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! – Global Tamil News

by ilankai

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடாரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதற்குப் பழிவாங்கும் விதமாக, தனிமைச் சிறைக்கு மாற்றி அதிகாரிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனா் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.நதியா, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளின் இன்ஹேலா்களைக்கூட சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவது இல்லை என்று வாதிட்டாா். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் சட்டத்தரணி ஏ.கோகுலகிருஷ்ணன், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க புழல் சிறைத் துறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா். மேலும், மனுவுக்கு வரும் நவம்பர் மாதம் 3-ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Related Posts