செவ்வந்தியோ சூரியகாந்தியோ அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும் சாகச்செயல்களோ வீரச்செயல்களோ அல்ல.அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. இதில் என்ன சாகசம் இருக்கிறது? குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த போலீஸ் அதிகாரியை ஏன் ஒரு சாகச வீரனாகப் போற்றி,உயர்த்த வேண்டும்? அவர் தன்னுடைய தொழிலைத்தானே செய்தார்? ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் அதனை வீர தீரமான,ஆபத்துக்கள் மிகுந்த ஒரு சாகச நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றன. அதற்குத் தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரியை ஒரு கதாநாயகன் அளவுக்கு உயர்த்துகின்றன. இங்கே எந்த வீரமும் கிடையாது சாகசமும் கிடையாது.அரசியல் குற்ற மயப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், அரசியல்வாதிகள் பாதாள உலகங்களோடும் போதைப் பொருள் வலைப் பின்னலோடும் தொடர்புடையவர்களாகக் காணப்படும் ஒரு நாட்டில், பாதாள உலகக் குற்றவாளிகளால் விலைக்கு வாங்கப்பட முடியாத சில போலீஸ் அதிகாரிகள் வீரர்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் இங்குள்ள ஒப்பீடு. நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்த,ஊழல் மிகுந்தபத்து நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் நிறுவனம் காணப்படுகிறது.இந்த தகவலை சொன்னது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லஞ்சம் ஊழல் என்பவற்றை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் நீல் இடாவெல ஆகும். நாட்டின் காவல்துறை இவ்வாறு நாட்டில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்த பத்து நிறுவனங்களில் முதலாவதாக காணப்படும் ஒரு நாட்டில் அப்படி சில போலீஸ் அதிகாரிகள் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு சாகசச் செயலாகக் காட்ட வேண்டிய ஒரு நிலைமை. ஆனால் நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமையப்பட்டது அந்த கேள்விக்கு விடை தேடிப் போனால் அதற்கு ஜேவிபியும் ஒருவிதத்தில் பொறுப்பு.இன முரண்பாடுகள்தான் அதற்குக் காரணம். சிங்கள அரசியல்வாதிகள் எல்லாக் குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்துக்குள் பதுங்கிக் கொள்வார்கள்.செவ்வந்தி கைது செய்யப்பட்ட நடவடிக்கையை விமர்சித்த விமல் வீரவன்ச கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்த நடவடிக்கையோடு ஒப்பிட்டுத்தான் அரசாங்கத்தை அண்மையில் விமர்சித்திருந்தார்.எனவே இலங்கைத்தீவில் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தின் பின் பதுங்க முடியும் என்ற நிலைமை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு தீய அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது. இவ்வாறு அரசியல் குற்றமயப்பட்ட ஒரு நாட்டில் அரசியல்வாதிகள் பாதாள உலகத் தலைவர்களோடு உறவுகளை வைத்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மீதும், அவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இப்பொழுது அரசாங்கம் பாதாள உலகக் குற்றவாளிகளையும் போதைப்பொருள் வலை பின்னலையும் முடக்க முயற்சிக்கின்றது.இதில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கியது.”யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.அதில் சில என்கவுண்டர்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைகளின் கனிகளை இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது என்பதே உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் உயிர்ச் சேதம் குறைவு. இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு மக்கள் முன் காட்சி மயப்படுத்துகின்றது.அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணியானது கைது நடவடிக்கைகளை,போதைப்பொருள் கிடங்குகளை முற்றுகையிடும் நடவடிக்கைகளை, விலைக்கு வாங்கப்பட முடியாத போலீஸ் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளை பிரச்சார நோக்கத்தோடு உருப்பெருக்கி காட்டி வருகிறது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அனுர அரசாங்கம் கைது செய்தவர்களில் யார் மீதும் போர் குற்றச் சாட்டுக்களோ அல்லது இன அழிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் இப்பொழுது கட்டுப்படுத்த முயற்சிக்கும் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றம் எது? பேரினவாதம்தான்.தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்குமுன் நிறுத்தப்படவில்லை.கைது செய்யப்பட்டிருக்கும் சில படை அதிகாரிகள் இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களோடும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு எதிராக இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை. எனவே இலங்கைத்தீவில் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றமாகக் காணப்படும் குற்றத்தில் கை வைக்காமல் குற்றமில்லாத இலங்கையை உருவாக்கப் போகின்றோம்; பாதாள உலகங்களை ஒடுக்கப் போகிறோம் என்று அரசாங்கக் கூறிவருகின்றது.உண்மையில் அரசாங்கம் செய்வது என்னவென்றால் எதன் மீது கவனத்தை குவிக்க வேண்டுமோ,எது தாய்க் காயமோ அதைச் சுகப்படுத்தாமல் அதன் விளைவுகளுக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டிருக்கிறது. நாட்டின் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினர் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள்,பாதாள உலகக் குழுக்களோடு தொடர்புடையவர்கள் என்பது பரவலான சந்தேகம்.இவ்வாறு சந்தேகப்படும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பாதாள உலகங்களில் தங்களுக்கென்று அடியாட்களை வைத்திருக்கிறார்.இந்த நிழல்களை இப்பொழுது அரசாங்கம் நசுக்கத் தொடங்கிவிட்டது.அதனால் நிஜங்கள் பதட்டமடைகின்றன.நாமல் ராஜபக்ச…… “எந்தவித குற்றங்களோடும் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே எமது பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படும்”என்று கூறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது.ராஜபக்சக்கள் அவ்வாறு கூறவேண்டிய அளவுக்கு தென்னிலங்கையில் நெருக்கடி வந்திருக்கிறது என்பது நல்ல முன்னேற்றம். ஆனால் அது ஒரு பாதியளவு முன்னேற்றம்தான். இந்த நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்தி தெற்கில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம். அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தலாம்.ஆனால் இந்த குற்றங்களுக்கு எல்லாம் தாய் குற்றமான இனவாதத்தை வெற்றிகொள்ளாத வரை இப்பொழுது கிடைக்கும் வெற்றிகள் யாவும் தற்காலிகமானவைதான். 2009 ஆம் ஆண்டு இலங்கை தீவில் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களின் ஆயுத போராட்டம்தான்.இனவாதம் அல்ல.ஆயுதப் போராட்டம் ஒரு விளைவு.அது மூலகாரணம் அல்ல.மூல காரணம் இனவாதம்தான்.ஆயுதப் போராட்டத்தில் வெற்றி பெற்ற இனவாதம் ராஜபக்சக்களின் தலைமையில் யுத்த வெற்றிவாதமாக தன்னை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துக் கொண்டது.ஆனால் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக யுத்த வெற்றி வாதம் தற்காலிகமாக பதுங்கியிருக்கிறது. அவ்வாறு இனவாதம் அப்படியே இருக்கத்தக்கதாக அந்த இனவாதத்தின் விளைவாக உருவாக்கிய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததை ஒரு நிலை மாற்றமாக கருதி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலைமாறு கால நீதியை ஐநா இலங்கைக்கு முன்மொழிந்தது.நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முடியாது என்பதை தான் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதி முயற்சி நிரூபித்தது. மைத்திரி யார்?நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர்.ஆனால் அவரே தன் குழந்தையைத் தோற்கடித்தார். இப்பொழுது சுமந்திரன் அவரை மேற்கோள் காட்டுகிறார்.அந்த மேற்கோள் யாப்புருவாக்க முயற்சியின்போது மைத்திரி சொன்னது.தமிழ் மக்களையும் பயமுறுத்தாத சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மைத்திரி சொல்லியிருக்கிறார்.அப்படி ஒரு வார்த்தைதான் “ஏக்கிய ராஜ்ய” என்று சுமந்திரன் இப்பொழுது விளக்கம் தருகிறார். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பயப்படும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? நாட்டில் இனமுரண்பாட்டு அரசியலில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதைத்தானே? சமாதானத்துக்கான கூட்டு உளவியல் சூழல் உருவாகவில்லை என்பதைத்தானே? தமிழ் மக்களைத் தோற்கடித்ததால் இனப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நம்புவதே இனவாதம்தான். தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக சமஸ்டி என்று கூறி ஒரு தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு நிலை நாட்டில் இப்பொழுதும் உண்டு என்றால் அது இனவாதம் தான்.வெளிப்படைத் தன்மையற்ற ஒரு சமஸ்டியைத்தான் தீர்வாக வைக்க முடியும் என்றால் அதுவும் இனவாதம்தான்.எனவே எக்கிய ராஜ்ய என்ற அந்த வார்த்தையே நாட்டில் நிலைமாற்றம் ஏற்படாததன் விளைவாக உபயோகிக்கப்பட்ட ஒன்றுதான். அதே நிலைமைதான் இப்பொழுதும் உண்டு.கடந்த ஓராண்டுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் கைது நடவடிக்கைகள் எவையும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் கைவைப்பவைகளாக இல்லை என்பதைச் சுமந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டதால்தான் அது தோற்கடிக்கப்பட்டது.அதைத் தோற்கடித்தது சிங்களத் தரப்புத்தான்.தமிழ்த்தரப்பு அல்ல.இப்பொழுது தோல்வியுற்ற நிலைமாறு கால நீதியின் குழந்தையாகிய எக்கிய ராஜ்யவை மீண்டும் மேசையில் வைக்கிறார்களா?. கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்து ஒழுங்குபடுத்திய சந்திப்பில் கலந்து கொண்ட அரச தரப்பு பிரதிநிதி எக்கிய ராஜ்யவை ஒரு தீர்வாக மேசையில் முன்வைத்ததாக கஜேந்திரக்குமார் குற்றம் சாட்டுகிறார்.அதாவது நிலைமாற்றம் ஏற்படாத ஓர் அரசியல்,ராணுவச் சூழலில் தயாரிக்கப்பட்ட புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அரசாங்கம் மேசையில் வைத்திருக்கிறது என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா? அல்லது மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமா?என்பது தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அரசாங்கத்திடம் உண்டு. மேலும் எக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனென்றால் யாப்புருவாக்க முயற்சியில் 2015 இலிருந்து 2018 வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது.ஜேவிபியும் சேர்ந்து உழைத்தது.எனவே அந்த இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் இப்பொழுது கூறமுடியும். அதுமட்டுமல்ல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கும் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதால் அவர்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்க முடியும் என்று கஜேந்திரகுமார் எச்சரிக்கிறார். ஆனால் கடந்த வாரம் வரையிலும் அவருடன் உறவாக இருந்த டிரிஎன்ஏ நம்புகின்றது, முதலில் மாகாண சபைத் தேர்தல்தான் நடக்கும் என்று. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி டிரிஎன்ஏ உழைத்துவருகிறது.காண சபைத்தேர்தலை நோக்கிக் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகிறது. அது காரணமாக டிரிஎன்ஏக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான நெருக்கம் பெருமளவுக்குக் குறைந்து வருகிறது.அதாவது தமிழ்த்தேசியப் பேரவை ஈடாடத் தொடங்கிவிட்டது. டிரிஎன்னே நம்புவதுபோல மாகாண சபைத் தேர்தல் முதலில் நடந்தால் அதில் முன்னணியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு புதிய சேர்க்கைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. டிரிஎன்ஏ மாகாண சபைத் தேர்தலில் யாரோடு நின்றால் வெல்லலாம் என்று சிந்திக்கும். அந்த அடிப்படையில் அவர்கள் வீட்டை நோக்கி நகரக்கூடும். மணிவண்ணன் அணியும் சுமந்திரனை நோக்கிச் சாயும் ஏதுநிலைகள் தெரிகின்றன. அதாவது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமாக இருந்தால் அது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வாக்கெடுப்பாக அமையும். தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் விகாரமடையக்கூடும்.அது வட,கிழக்கு மாகாண சபைகளில் அரசாங்கம் பலமாகக் காலூன்றுவதற்குத் தேவையான வழிகளை இலகுவாக்கிக் கொடுக்கும். மாறாக,அரசாங்கம் புதிய யாப்புருவாக்க முயற்சியை முதலில் தொடங்கினால், அங்கேயும் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன.ஏனென்றால் ஏற்கனவே கஜன் யாப்புருவாக்க நோக்கி முன்னெடுத்த ஐக்கிய முயற்சிகளை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தோற்கடித்து விட்டது.சுமந்திரன் எக்கிய ராஜ்யவை தன்னுடைய உழைப்பின் விளைவு என்று கருதுவதாகத் தெரிகிறது.எனவே யாப்புருவாக்க முயற்சிகளிலும் தமிழ்த்தரப்பு ஒருமுகமாக ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்? புதிய யாப்பின் முழுமைப்படுத்தப்பட்ட வரைவு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும்.அதன்பின் ஒரு வெகுசன வாக்கெடுப்புக்கு அது விடப்பட வேண்டும்.ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல வெளிப்படைத் தன்மைமிக்க ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவாக சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா? சிங்கள மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மை குறைந்த ஒரு புதிய யாப்பைத்தான் மேசையில் வைக்கும். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், மாகாண சபைத் தேர்தலோ அல்லது புதிய யாப்புருவாக்க முயற்சியோ எது முதலில் நடந்தாலும் இறுதியிலும் இறுதியாகத் தோற்கப்போவது தமிழ் மக்களா?
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? நிலாந்தன். – Global Tamil News
6