கொடிகாமத்தில் நின்ற உழவு இயந்திரத்தின் மீதே காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்! – Global Tamil News

by ilankai

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே காவற்துறையினர்  துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு இறந்ததாகவும் , இளைஞனே உழைத்து தனது குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு காவற்துறையினர்  மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , அப்பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகர் மதுசன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில், படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கையில், அப்பகுதியில் கிணறு ஒன்று தோண்டப்பட்டு வருவதாகவும், அங்கு சேர்ந்த மண்ணை, அருகில் உள்ள கடை ஒன்றின் முன்பாக வெள்ள நீர் தேங்கி நிற்பதனால், அவ்விடத்தில் அந்த அதனை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து அந்த மணலை பறித்துக்கொண்டு இருந்தவேளையே கடற்கரையில் நின்று காவற்துறையினர்  இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.  காவற்துறையினர் அவ்விடத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. சந்தேகம் எனில் அருகில் வந்து விசாரணை செய்திருக்கலாம். தற்போது காவற்துறையினர்  கூறுகின்றனர் உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தோம் என. உழவு இயந்திரம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய வாகனமா ? அதில் மணலை ஏற்றியவாறு தப்பியோட முடியுமா ? காவற்துறையினர் இலகுவாக துரத்தி பிடித்து விடுவார்கள். ஆனால் அதனை செய்யாது கிணறு வெட்டிய களிமண்ணை பறித்துக்கொண்டு இருந்த உழவு இயந்திரம் மீதே சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். உழவு இயந்திரத்தை துரத்தி சுடுவது எனில் பின் பகுதியில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தின் சில்லுகளில் பக்க வாட்டில் இருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. அதேவேளை படுகாயமடைந்த மதுசனின் இடுப்பிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுகின்றன. நின்ற உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு , தப்பியோடியவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக காவற்துறையினர்  பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும். தந்தையை இழந்து தனது குடும்ப பாரத்தை சுமக்கும் 18 வயதான இளைஞன் மீதான காவற்துறையினரின் வன்முறை தொடர்பில் நீதியை பெற்று கொடுக்க அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என இளைஞனின் உறவுகள் கோரியுள்ளனர்.  காவற்துறையினர் கூறுவது.  அதேவேளை கொடிகாம காவற்துறையினர் தெரிவிக்கையில், “அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழிமறித்த போது காவல்  நிலைய பொறுப்பதிகாரியை மோதுவது போன்று உழவு இயந்திரத்தை சாரதி செலுத்தி வந்தார்.  அதனை அடுத்து அருகில் நின்ற காவற்துறை உத்தியோகஸ்தர் தற்காப்பு நடவடிக்கையாக வானத்தினை நோக்கி சுட்ட போதும்,  சாரதி உழவு இயந்திரத்தை நிறுத்ததாது தொடர்ந்தும் பயணித்ததால், உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டோம். அதன் போது இளைஞனும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதால், இளைஞனை மீது சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.  சான்று பொருளாக உழவு இயந்திரத்தை மீட்டு காவல்  நிலையத்தில் வைத்துள்ள்ளோம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்”  என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts