பொதுமக்கள் போன்றே துப்பாக்கிதாரிகள் உள்சென்று துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் போன்றே துப்பாக்கிதாரிகள் உள்சென்று துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

by ilankai

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன. வெலிகம பிரதேச சபைத் தலைவர் மிதிகம லசா என்ற லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை 10.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று தலைவரை பொது மக்கள் சந்திக்கும் நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார். இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்த தலைவரை அங்கு கூடியிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான லசந்த விக்ரமசேகர, மிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடுக்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Posts