யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரது வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த இளைஞன் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு , பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக்க உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் ,சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் , சட்ட விரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டியமை , இளைஞர்கள் வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை , சட்டவிரோத சொத்துக்குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இளைஞனின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர். காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இளைஞனின் வீட்டினை காவல்துறை அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் , யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக்குழுவினர் முற்றுகையிட்டு , வீட்டில் தேடுதல் நடாத்தினர். வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடாத்திய வேளை குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் , வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அதேவேளை , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனின் வீடு முற்றுகை – Global Tamil News
2