யாழ்ப்பாணம் கோட்டை வெளிப்புற பகுதியை சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. வீதியோரமாக எல்லை கற்களை நடுகை செய்வதால் , விபத்துக்கள் இடம்பெறும் எனவும் , மாநகர சபையுடன் கலந்துரையாடாது தொல்பொருட்த்திணைக்களம் தன்னிச்சையாக கற்களை நடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் , எல்லை கற்கள் நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்நிலையில் இன்றைய தினம் அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் , தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபையின் பொறியியலாளர், தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
யாழ். கோட்டையை சுற்றி எல்லைக்கற்களை நாட்ட தீர்மானம் – Global Tamil News
5