நிமலராஜன் நினைவேந்தல்! – Global Tamil News

by ilankai

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts