நல்லூர் சங்கிலியன் பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில், பூங்கா அமைந்துள்ள காணியை நல்லூர் பிரதேச செயலகம் தனது தேவைக்கு கையகப்படுத்த எத்தனிப்பதாகவும் , அதற்கு பின்னால் மறை கரங்கள் உள்ளன என தான் சந்தேகிப்பதாகவும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் , யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே மேற்குறிப்பிட்ட “நல்லூர் சங்கிலியன் பூங்கா”. 1989 வரை செம்மணி வீதி என் பது அதற்கு வடக்காக அமைந்துள்ள தேவாலயத்துக்கு எதிராக பருத்தித் துறை வீதி வரையானதாக இருந்தது. இதற்கு தெற்காகவும், பருத்தித்துறை வீதிக்கு கிழக்காகவும் முத்திரை சந்தையும், மாநகர சபையால் வடகைக்கு கொடுக்கப்பட்ட கடைகளும் இருந்தன.1989 இல் பருத்தித்துறை வீதியில் இருந்து தேவாலயத்துக்கு நேராகச் சென்ற செம்மணி வீதியின் பகுதி தெற்குப் பக்கமாக இருந்த தனியார் காணிகளை தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளபடி செம்மணி வீதி மாற்றப் பட்டு, நேரான வீதியாக அமைக்கப்பட்டது. இதனால் இந்த செம்மணி வீதியின் வடக்காக செட்டியார் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியை வடக்கு எல்லையாகக் கொண்ட காணியாக ஒன்றி ணைக்கப்பட்டது. இந்த முழுக் காணியும் மாநகர சபையின் ஆட்சியின் கீழ் இருந்து வருவது வரலாறு. வெளி நிலமான முத்திரைச் சந்தைப் பகுதியில் மன்னன் சங்கிலியனின் பெயர் நீண்டு நிற்க வேண்டும் என்ற எண்ணத்தின்படியே, செம்மணி வீதியை இடம் மாற்றி முழுப் பகுதியையும் ஒன்றியைத்து “சங்கிலியன் பூங்கா” 1989 இல் அமைக்கப்பட்டது. அது மாநகர நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இந்த நிலையில் நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் இந்த நிலம் மாநகர சபைக்கு உரித்தானது அல்ல என்ற தோரணையிலும் அது அரச காணி (State Land) என்ற தோரணையிலும் இங்கு நல்லூர் பிரதேச செயலகம் அமைப் பதற்கு அனுமதி கோரி தங்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கையின் பேரில் கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்ற தாக ஊடகச் செய்தி மூலம் அறிய வந்தது. இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆல யத்தினால் வழங்கப்பட்ட குத்தகை 25 அல்லது 30 வருடம் என்றும் ஏற்கனவே அதில் 15 அல்லது 20 வருடங்கள் சென்றுவிட்டதாகவும், நல்லூர் கோவில் நிர்வாகம் கால நீடிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரி விக்கப்பட்டதாக தெரிய வந்தது. இவை முழுவதுமே உண்மைக்கு புறம் பானவை. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு அதன் கட்டடம் அமைந்துள்ள 10 பரப்பு காணியை மாநகர சயைின் குத்தகையில் இருந்து நீக்கி 01.05.2005 ஆம் திகதியில் இருந்து 50 வருடக் குத்தகையை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததே நான்தான். அதில் சாட்சியாக நானே ஒப்பமிட்டிருப்பதையும் காணலாம். குத்தகைக் காலம் இன்னும் 30 வருடங்கள் இருக்கையிலும், குத்தகை முடிவுக் காலத் தில் அதனை நீடிப்பதற்கான ஏற்பாடு உடன்படிக்கையிலேயே உள்ளடக்கப் பட்டு இருக்கையிலும், சங்கிலி மன்னனின் பெயரில் அமைந்த பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில் இந்தக் காணியை தமக்கு வழங்குமாறு கோரும் நோக்கம் புரிந்து கொள்ள முடியாதததும், ஏற்றுக் கொள்ள முடியாதது மாகும். இதன் பின்னணியில் ஏதாவது மறைகரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதே. இதில் எனக்கிருந்த மிகப் பெரிய ஆச்சரியம் மாநகர சபை நிர்வாகமும் தெளி வற்று குழம்பியிருந்தமையாகும். கடந்த 13.10.2025 அவர்களுடன் கலந்துரை யாடி முழு வரலாற்று விபரங்களையும் நான் தெளிவுபடுத்தியதன் அடிப்படை யில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமது ஆட்சி உரித்தில் இருந்த இந்தக் காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைத்து பூங்காவை மேம்படுத்த யாழ். மாநகர சபை 14.10.2025 ஆம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது.நிலையில், இவ்வாறான நிலை மேலும் தொங்கு நிலையில் தொடராமல் இருப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுத்து இந்த தமிழின அரசாட்சியின் சின்னமாக “ நல்லூர் சங்கிலியன் பூங்கா” எனும் பெயரில் எம்மின வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்வதற்கான திடமான நிலையை ஏற்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சங்கிலியன் பூங்காவை அழிக்கும் செயற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகம் – மறை கரங்கள் உள்ளதாக சீ.வீ.கே. குற்றச்சாட்டு – Global Tamil News
4