யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில், தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு. 1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. 2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம். தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
தையிட்டி விகாரைக்கு சொந்தமான 06 ஏக்கர் காணியை காணவில்லையாம் – விகாரையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கடிதம் எழுதியுள்ள பௌத்த காங்கிரஸ்
1