மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது. இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில் மிகச்சிறப்பாக ஆரம்பமானது. இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது. மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான் பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது. இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு. எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது. வி. சிந்து
திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து! – Global Tamil News
3