ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் – புது டில்லி – ஜெனிவா! நிலாந்தன். – Global Tamil News

by ilankai

“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும்.ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. “இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015),  46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024)  )   ஒருபடி கீழே இறங்கிவிட்டது.  இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது.ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது” கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது. தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான்.ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான்.தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான்.உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது.எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது.அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல  முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான். ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை.ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை. செம்மணிப் புதைகுழி  திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள்,கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி  நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி  நடைபெற்றது.இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை. திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள்  திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது.ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள்.இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள். உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த  19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது.தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது.அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது. வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது.இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது.அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச்  சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை.மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை. இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும்  விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக்  கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா?அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா? எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான். முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய  தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும்.அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம்.இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்… “தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை.

Related Posts