தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றபோது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புக்காக ரேடார் அமைக்கவே காணி கோரப்படுவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர், காணி உரிமையாளர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். அதில் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவிசாளரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும், போதைப் பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. ரேடார் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை. மக்கள் காணி மக்களுக்கே என கூறிவிட்டு மக்கள் காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என்றனர். அத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts