மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள் , இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் – பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர்.தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது.ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.
வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி
4