மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

by ilankai

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி , மழை காலம் முடிவடைந்த பின்னர் மீள பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே சேதமாக காணப்பட்ட குறித்த பகுதி இடிந்து விழாதிருக்க இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட நிலையில்  ,இரும்பு கம்பிகளை திருடர்கள் திருடி சென்றமையால் , பாதுகாப்பு இன்றி இருந்த பாகம் மழைக்கு இடிந்து விழுந்திருந்தது. அந்நிலையில் ஏனைய பாகங்கள் இடிந்து விழாது பாதுகாக்கும் வகையில் மீளவும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு , அப்பகுதியினை பாதுகாத்தனர். இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழை காலம் தொடங்கியுள்ளமையால் , மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால் , சுவர்கள் இடியும் அபாயம் காணப்படுவதால் , கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. குறித்த மந்திரி மனையானது, தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால் ,அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலையே மந்திரி மனை கடந்த காலங்களில் புனரமைப்பு செய்யப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறி இருந்தது. தற்போது மந்திரி மனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற உரிமையாளர் சம்மதம் தெரிவித்த நிலையில் , அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து மழை காலம் முடிந்த பின்னர் மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியுடன் தொல்லியல் திணைக்களம் பணிகளை முன்னெடுத்துள்ளது. 

Related Posts