வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் – Global Tamil News

by ilankai

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் , அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் , இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதாக கூறிய நிலையில் இறுதி நேரத்தில் சுகவீனம் காரணமாக கூட்டத்திற்கு வருகை தர முடியவில்லை என அறிவித்து , கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் , வடமாகாண சபை தேர்தலை தமிழ் காட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் முகமாகவே இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் , சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்டவர்களும் , அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts