யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் கடைகளை வாடகைக்கு கொடுத்து மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் உழைக்கும் இ.போ.ச! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக் கலந்துரையிடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் தமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்தார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Posts