சஷீந்திர ராஜபக்ஸ – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை – Global Tamil News

by ilankai

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  கொழும்பு பிரதான  நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இன்று  செவ்வாய்க்கிழமை (14)  இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் மருத்துவ நிலை, அவரது நீண்ட கால தடுப்புக்காவல் மற்றும் பல விசாரணைகள் நிறைவடைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்கப்பட்டதாக பிரதான நீதவான் தெரிவித்துள்ளாா். அத்துடன் சந்தேகநபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளை விதித்த பிரதான நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளாா் கிரிப்பன்வெவவிலுள்ள மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சொத்துக்கள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 885,000 இழப்பீடு பெற அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அரச சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு  ஆணைக்குழு வழக்கு தொடா்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது இதேவேளை பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியுள்ளது. கடற்படை இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக உலுகேதென்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts