அரியாலையில் 08 பேர் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாணம் காவல்துறையினா்   கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த சமயம் அப்பகுதியில் மக்கள் கூடி வாகனத்தை மறித்து எதிர்ப்பினை தெரிவித்தனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு  சென்ற காவல்துறையினா்    அங்கிருந்தவர்களோடு பேச்சுக்களை நடத்தி, இந்த முறை வாகனத்தை அனுமதிக்குமாறு கோரியதை அடுத்து, வாகனத்தை செல்ல மக்கள் அனுமதித்தனர். இந்நிலையில் , யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடத்தினர்  அப்பகுதியில் உள்ள தமது காணி ஒன்றில் கழிவுகளை கொண்ட வந்த போது, அவர்களின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடாவடியில் ஈடுபட்டு  பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றம்சாட்டி 08 பேரை கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சியை தடுக்க போராடியவர்களை காவல்துறையினா் பொய் குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts