குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு! – Global Tamil News

by ilankai

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு   களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கான கட்டளை கடந்த அமர்வில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் குறித்த அறிக்கையானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts