யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் , தீவகத்திற்கான பாதுகாப்பான போக்குவரத்து பயணங்கள் தொடர்பில் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. யாழ் . மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. அதன் போது, யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.குறிப்பாக எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டன. அதேவேளை தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல் போக்குவரத்து பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதான பொது போக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன. இக்கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ச. சிறிபவானந்தராஜா , க. இளங்குமரன் மற்றும் ஜெ ராஜீவின், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
தீவகத்திற்கான பாதுகாப்பான கடல் பயணம் தொடர்பில் கலந்துரையாடல் – Global Tamil News
2