செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீட்டை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக கட்டம் கட்டமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் , மற்றும் பேராசிரியர் சோமதேவாவின் செய்மதி மூல அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மனித புதைகுழி காணப்படும் இடங்களுக்கு அண்மையில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 08 வார கால அனுமதி வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டதை அடுத்தே இன்றைய தினம் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு – Global Tamil News
1