இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு .

by ilankai

நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது.யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.குறித்த மந்திரிமனையானது கடந்த 2011ஆம் ஆண்டு தொல்பொருள் சின்னமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அது தனியார் காணிக்குள் அமைந்துள்ள தனியார் சொத்தாக காணப்படுவதால் , அதனை புனரமைக்கவோ பாதுகாக்கவோ முடியாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இருந்துள்ளது. அந்நிலையில் மந்திரிமனையின் ஒரு பாகம் சேதமடைந்து , உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட வேளை , அவற்றை பாதுகாப்புக்கும் வகையில் இரும்பு கம்பிகளை முட்டுக்கொடுத்து வைத்திருந்தனர். அந்த கம்பிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருடர்கள் திருடி சென்ற நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக அப்பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதனை அடுத்து , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் மற்றும் சி. சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு , மிகுதியுள்ள மந்திரிமனை பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தனர். அந்நிலையில் , இடிந்து விழுந்த பகுதியில் உள்ள ஏனைய பகுதிகளை பாதுகாக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரும்பு கம்பிகளை கொண்டு முட்டு கொடுத்து வைத்துள்ளனர். 

Related Posts