ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதி! – Global Tamil News

by ilankai

மித்தேனிய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் (NDDCB) விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க குழுவினர் இலங்கையில்  ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்களை மேற்கு வடக்கு குற்றப்பிரிவு செப்டம்பர் 6 ஆம் திகதி மித்தேனிய பகுதியில் கண்டுபிடித்தது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெகோ சமன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பறிமுதல், மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இரசாயன மாதிரிகள், சோதனைக்காக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டன. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12) தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது உறுதியானது.

Related Posts