“வர்க்கங்களின் நலன் பேணுகின்ற கருவிதான் அரசு” என்று மார்க்சும் ஏங்கெல்சும் இயங்கியல் பொருளாதார ஆராய்ச்சியினூடாக எடுத்துக் காட்டியுள்ளனர். நவீன காலத்தில் தோற்றம் பெறத் தொடங்கிய தாராளவாத பிரதிநிதித்துவ சனநாயக அரசுகள் மிகப்பெரும்பாலும் சுரண்டும் வர்க்கத்தின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் கருவியாகவே இயக்கம் பெற்று வருவதனையும், இந்தப் பிரதிநிதித்துவக் கணிப்பீட்டு முறையில் எவ்வாறு சுரண்டும் ஆதிக்க வர்க்கத்தினர் இரு கட்சிகளாகப் பிரிந்து மக்களின் பெயரில் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்தி ஆளும் வர்க்க நலன்களைப் பேணுகின்றார்கள் என்பதையும், மனிதர்களிடையே காணப்படும் இனம், மதம், சாதி, நிலம், பால், மொழி, தொகை முதலான பல்வகைத் தன்மைகளை ஏற்றத்தாழ்வுகளாகவும், பகை முரண்பாடுகளாகவும் வலுவாக்கஞ் செய்து சுரண்டப்படும் மனிதர்களை ஒன்றுசேர முடியாதவாறு பிரித்தாளுவதனூடாக ஆதிக்க வர்க்கம் ஆட்சிக் கதிரைகளிவ் இருந்து சுகபோகங்களை அனுபவித்து வருவதையும் மார்க்சீய வழிப்படுத்தலுடன் கூடிய பலவேறு ஆராய்ச்சிகள் எடுத்துரைத்து வருகின்றன. இப்பின்புலத்தில் உண்மையாகவே மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியை மலரச் செய்வதற்காக மார்க்ஸீயக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட புரட்சியாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் முற்சித்துள்ளார்கள். இதில் வெவ்வேறு வகை மாதிரிகளும்,வெற்றிகளும், தோல்விகளும், பின்னடைவுகளும், படிப்பினைகளும், மீளெழுச்சிகளும் நடைபெற்று வருவதைக் கற்றறிகிறோம்!, கண்டறிகிறோம்! இன்றைய சூழலில் மேற்குலகின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளிலும், தேசங்களிலும் காலனித்துவ நீக்கத்துடன் மக்கள் நலன் பேணும் அரசுகளின் உருவாக்கத்திற்கான கருத்தியலும், செயற்பாடுகளும் வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம். இப்பின்புலத்தில் இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் கடந்த ஏழு தசாப்த காலமாகத் தரகு வணிக வர்க்கத்தினரதும், உள்நாட்டு நிலப்பிரபுத்துவ, முதலாளிய வர்க்கத்தினரதும் நலன்களைப் பேணத்தகுந்த அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு இவ்வர்க்கத்தினரின் நலன்கள் விருத்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இவ்விரு வர்க்கத்தினரும் ஆட்சி அதிகாரத்தை மாறி மாறிக் கைப்பற்றுவதற்காக இலங்கையின் பல்லின பல்பண்பாட்டுத் தன்மைகளைப் (இனம், மதம், மொழி, நிலம்) பகை முரண்பாடுகளாக உருவாக்கி அதனை ஊதிப் பெருப்பித்து அதில் தமது இருப்பையும், நலன்களையும் விருத்தி செய்து வந்துள்ளார்கள். இதன் ஒரு விளைவாக இலங்கைத் தீவில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்தது மூன்று தசாப்த காலமாக தொடர்ந்த உள்நாட்டுப் போர் இலங்கையின் தற்சார்பான பொருளியல் பண்பாட்டைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியதுடன் கையேந்தி வாழும் நுகர்வுப் பொருளாதாரத்தை வேரூன்றச் செய்துள்ளது. இந்த நுகர்வுப் பண்பாடு நவீன கொத்தடிமைகளாகப் பெரும்பாலான மக்களை வடிவமைத்துள்ளது. பொது நிதியை ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த தனிநபர்களின் நிதியாக மாற்றக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைத்து நாட்டின் கருவூலத்தைத் திவாலாகச் செய்தது. நாட்டின் முகெலும்பாகவுள்ள உன்னதமான மனித வளத்தின் ஒரு பகுதியினரைக் காணாமலாக்கியும், புதைகுழிகளுக்குள் மறைந்து போகவும் செய்துள்ளது. நாட்டை வளமூட்டவல்ல மனிதர்களில் கணிசமானோரைப் புலம்பெயரச் செய்தது. ஆசியாவில் முன்னிலையில் காணப்பட்ட இலங்கையின் கல்வியின் தரத்தைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது, பகுத்தறிவை மழுங்கடித்து ஆட்சியாளர்களை மன்னர்களாகக் கருதி அவர்களைத் தொழுது வாழும் மடமைத் தனத்தைக் கணிசமான மக்களிடம் விதைத்துள்ளது. சமூகங்களில் வன்முறைக் கலாசாரத்தை ஊக்குவித்ததுடன், தடி எடுத்தவர் எல்லாரும் தண்டல்காரர்களாக மாறக் கூடிய நிலபரங்களையுந் தோற்றுவித்தது. ஊழல்களையும், முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருப்பது போல வாழ்வதற்குப் பயிற்றுவித்துள்ளது. கண்முன்னே நடைபெறக்கூடிய முறைகேடுகளையிட்டுக் கேள்வி எழுப்புவதற்குத் திராணியற்ற மனிதர்களைச் சிருட்டித்துள்ளது, போதைப் பொருள் வணிகத்தைத் தேசிய மயமாக்கி நாட்டின் புதிய தலைமுறையினரின் எதிர்காலத்தையே சூனியமாக்க முனைந்துள்ளது. இனவிடுதலை என்ற கோசத்துடன் காலத்திற்குக் காலம் ஆளும் தரகு வணிக வர்க்கத்துடன் சமரசம் செய்து பிழைப்பு நடத்தும் சிறுபான்மை அரசியலை வளர்த்தெடுத்துள்ளது. மத அடிப்படைவாதங்களை உருவேற்றி நாட்டில் வாழும் சாதாரண பொது மக்கள் பெரும்பாலும் ஒற்றுமையாகச் சேர முடியாத, செயலாற்ற முடியாத நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு கடந்த ஏழு தசாப்த கால வர்க்க நலன் பேணிய இலங்கையின் அரசியல் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் இன்னும் இன்னும் பலவுள்ளன. இந்தப் பாதகமான விளைவுகளை ஆய்ந்தறிந்த, உணர்ந்த இலங்கைத் தீவின் புதியதொரு தலைமுறையின் ‘அரகலய’ எழுச்சியும் அதன்காரணமாக உருவான ஆட்சி மாற்றமும் இலங்கையின் அரசியல் வரலாற்றினைத் தீர்க்கமான நிலைமாறு கால கட்டத்திற்குக் கொண்டு வந்து விட்டுள்ளன எனலாம். இந்த நிலைமாறு கால கட்டத்தின் ஓராண்டு நிறைவுறும் சூழலில் எழுபது ஆண்டுகளாக நாட்டின் ஆட்சி பீடத்திலிருந்த முன்னைய வர்க்க அரசியலின் உண்மையான முகங்கள் தவிர்க்க முடியாமல் வெளிக்காட்டப்படுவதனை நாம் கண்டு வருகிறோம். அதாவது இனம், மதம், பிரதேசம் என்ற அரிதாரங்கள் அழிந்து வர்க்க நண்பர்கள் திசை காட்டிக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. து. கௌரீஸ்வரன்,
இலங்கை அரசியல் வரலாற்றில் நிலைமாறு காலத்தின் சில காட்சிகள் – து. கௌரீஸ்வரன்! – Global Tamil News
6