மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் இருந்து வெளியேறினார்! – Global Tamil News

by ilankai

இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி, முன்னாள் ஜனாதிபதியும் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  வெளியேறினார் என  இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர், விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய போது, அங்கு குழுமியிருந்தவர்கள் ஜய​வேவா, ஜயவேவா என கோஷமெழுப்பினர். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11)  மதியம் 1.15 மணியளவில் தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். எனினும் ஒருவாரத்தின் பின்னரே குறித்த இல்லத்தை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. விஜயராம இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

Related Posts