பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (8) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேக நபர் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக கறுவாத் தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையை கோருவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். சந்தேக நபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட வாகன அணிவகுப்பை வீடியோ எடுத்ததற்காக தமது கட்சிக்காரர் மன்னிப்பு கேட்டதாகவும், எனவே அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவையும் நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசரின் வாகனத்தை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்
14