உள்நாட்டு பொறிமுறை:அமைச்சர் விஜித ஹேரத் !

by ilankai

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே, ​​வௌிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.வெளிப்புற தலையீடுகள் தேசிய ரீதியான முயற்சிகளைத் தடுக்கவும் மக்களை துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என்பதால், சர்வதேச நடவடிக்கை தொடர்பாக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை என்றும் கூறப்பட்டது.இலங்கை, உள்நாட்டு பொறிமுறை மூலம் முன்னேறும்போது, சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்பதாகவும், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் பதிலறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இன்று முன்வைக்கவுள்ள அறிக்கையானது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரம், மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்கள் குறித்து தனது அறிக்கையில் உள்ளடங்கியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.அதேபோன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயங்களில் மேலும் கால அவகாசத்தை கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.அதற்கமைய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts