மட்டுநகரில்  நடைபெற்ற 'கெத்சமனி' காண்பியக் கலைக் காட்சி – பார்வையும் பதிவுகளும் –...

மட்டுநகரில்  நடைபெற்ற 'கெத்சமனி' காண்பியக் கலைக் காட்சி – பார்வையும் பதிவுகளும் – து. கௌரீஸ்வரன்1 – Global Tamil News

by ilankai

மட்டுநகர் புனித மிக்கேல் கல்லூரியின் சிற்றாலயத்தில் ஓவியர் சு.நிர்மலவாசனின் ‘கெத்சமனி’ எனுந் தலைப்பிலான காண்பியக் கலைக் காட்சி கடந்த ஆகஸ்ட் 30 தொடக்கம் செப்டம்பர் 01 வரை மிகவும் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தினதும், மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரதும் ஆதரவுடன் சு.நிர்மலவாசன் இக்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். காட்சியின் ஆரம்ப வைபவத்தில் போர்க் காலத்தில் தம்பிள்ளைகளைப் பலி கொடுத்த தாய்மார்களும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், கத்தோலிக்கக் குருவானவர்களும், புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களும், மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரும், பொது மக்களும் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். கடந்த போர்க் காலத்தில் ஏற்பட்ட துயரங்களை கிழக்கிலங்கையின் கத்தோலிக்கப் பண்பாட்டு அனுபவங்களின் பின்புலத்தில் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்துடன் ஓவிய தாபனக் காட்சியாகப்  படைத்தளிப்பதாக இக்காட்சி காணப்பட்டது. பிரதிமை ஓவியம் எனும் வகைமையினையும் அதற்கான உத்திகளையும் தனது படைப்பாற்றலூடாகக் கையாண்டு இக்காட்சியைப் பொது வெளியில் தனது 15 ஆவது தனிநபர் காண்பியக் காட்சியாகப்  பகிர்ந்திருந்தார் சு.நிர்மலவாசன். 2000 ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று மட்டுநகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகளால் கொல்லப்பட்ட ஆயித்தியமலையினைச் சேர்ந்த மறைக்கல்விச் சிறார்கள் பத்துப்பேரின் பிரதிமை ஓவியங்களும், அவர்களின் மரணத்தின் துயரத்தைச் சுமந்து வாழும் தாய்மாரின் பிரதிமைகளும் அந்தத் துயரங்களின் நினைவுகளும் உணர்வுபூர்வமாக இக்காட்சியில் வெளிக்காட்டப்பட்டன. காண்பவரின் உள்ளத்தை உலுப்பி அழச்செய்யும் விதத்தில் இக்காண்பியத்தை சு.நிர்மலவாசன் படைப்பாக்கி இருந்தார். சிற்றாலய மண்டபத்தில் கைக்குழந்தையுடன் காணப்படும் சதாசகாய மாதாவின் நேத்திகள் கட்டப்பட்ட ஓவியம் சாதாரண மனிதரின் கண்மட்ட உயரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மெழுகுதிரிகைள ஒளியூட்டி வைக்கும் மேசை ஒன்று வைக்கப்பட்டிருந்தது அதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நின்று பார்க்கத்தக்க உயரமுடைய தட்டுகளில் பிரதிமை ஓவியங்கள் கிடையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முதல் வரிசையில் மட்டுநகர் மரியாள் இணைப்பேராலயத்தின் குருமனையில் வைத்து 1988 .06.06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட பாதர் சந்திரா பெர்ணாண்டோ, வாழைச்சேனையிலிருந்து தொழில்நுட்பம் பயின்ற மாணவனை அழைத்து வரும் போது 1990 இல் காணாமலாக்கப்பட்ட பாதர் ஹேபயர் அவருடன் வந்த மாணவன் பேட்றம், 1990 இல் சொறிக்கல்முனையில் தஞ்சமடைந்த மக்களுக்காக உணவுப் பொருட்களை எடுக்கக் கல்முனைக்கு வந்து திரும்பிய போது காணாமலாக்கப்பட்ட அருட்பணி செல்வராஜா சவரிமுத்து ஆகியோரின் பிரதிமைகள் வைக்கப்பட்டு அவர்கள் பற்றிய முக்கியமான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அடுத்தடுத்த வரிசைகளில் வெசாக் தினத்தன்று உயிரிழந்த ஆயித்தியமலையைச் சேர்ந்த பத்து சிறுவர்களின் பிரதிமைகளும் அவர்கள் பற்றி தாய்மாரும் சகோதரர்களும் உறவினரும் கூறிய கருத்துகளும் சுருக்கமாக எழுதப்பட்டுக் காட்சிக்குட்படத்தப்பட்டிருந்தன. இத்தோடு சதாசகாய மாதாவின் கையிலிருந்த குழந்தையின் ஓவியமும் இணைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திரைகளில் வரையப்பட்ட இச்சிறார்களின் தாய்மார்களின் பிரதிமை ஓவியங்களுடன் சதாசகாய மாதா கையில் குழந்தையின்றி இருக்கும் ஓவியமும் சேர்த்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. மண்டபத்தின் பக்கச் சுவர்களில், நடுவிலே வைக்கப்பட்டிருந்த பிரதிமைகளைப் பார்த்தவாறு காணாமல் போன பாதர் ஹேபயரின் ஓவியமும், வெசாக் தினத்தன்று படுகாயமுற்று பாதிப்புகளுடன் உயிர் தப்பிய பாதர் ஜே. சந்திரா, போர்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி பாதிப்புகளுடன் உயிர் தப்பிய பாதர் அம்புரொஸ், போர்க்காலத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்த மறைந்த பாதர் எச்.மில்லர் ஆகியோரது ஓவியங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஓவிய தாபனக் கலையாக்கத்தில் அதன் ஒழுங்குபடுத்தல் முறைமை மிகமிகக் கவனத்திற்குரியதாக இருக்கும் நிலையில் நிர்மலவாசன் தனது படைப்பாக்கத்தைச் சிறப்பாகத் தாபனப்படுத்தி அதன் கருத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருந்தார். காட்சி நடைபெற்ற மட்டுநகரின் மரபுரிமைச் சின்னங்களுள் ஒன்றாகவுள்ள புனித மிக்கேல் கல்லூரியிலுள்ள இயேசுசபைத் துறவியர்களின் பிரமாண்டமான கட்டடமும் அதன் ஒரு பகுதியான சிற்றாலயமும்  கண்காட்சியை மேலும் செறிவுள்ளதாக ஆக்கியிருந்தது எனலாம். உலக வரலாற்றில் போர்க்காலத்து அவலங்களையும், அடக்குமுறைகளையும் பாதிக்கப்படும் மக்களின் குரலாக வெளிக்காட்டும் கலைஞர்களின் கலைப் படைப்புகளே காலங் கடந்தும் வரலாறுகளைச்  சொல்பவையாக உள்ளன என்ற உண்மையின் புரிந்து கொள்ளலுடன் சு.நிர்மலவாசனின் கெத்சமனி காண்பியக் கலைக் காட்சியின் பெறுமதி கவனத்திற்குரியதாகிறது. இக்கண்காட்சி போரினால் பாதிக்கப்பட்டு இன்று வரை மீளமுடியாத துயரங்களுடன் வாழும் மனிதர்களை ஆற்றுப்படுத்திய ஓர் ஆக்கபூர்வமான கலைச் செயற்பாடாக விளங்கியிருந்தது. உள்நாட்டுப் போர்கள் நடைபெற்ற உலக நாடுகளின் வரலாற்றில் நிலைமாறு காலகட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை வைத்து அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்ற அவாவுறுந் தரப்பினர் திட்டமிட்டுக் காரியங்களை மேற்கொண்டு வந்துள்ளார்கள், இதனால் போரின் வடுக்களைச் சுமந்து வாழும் மக்கள் அத்தகைய தரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குரிய பகடைகளாகவே மிகப்பெரும்பாலும் பாவிக்கப்பட்டு வருகிறார்கள். ‘கோடோவுக்காகக் காத்திருத்தல்’ எனும் அபத்த நாடகத்தில் வருவதைப் போல் எதார்த்தத்திற்குப் பொருத்தமற்ற நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இப்பின்புலத்தில் போரின் காரணமாக ஆறாத வடுக்களுடன் வாழும் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களுக்கு மிகவும் அவசியத் தேவையென உளநல நிபுணர்களால் வலியுறுத்தப்படும் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையாகவே இந்தக் ‘கெத்சமனி’ காண்பியக் காட்சி நடைபெற்றிருந்தது. 2000 ஆம் ஆண்டு வெசாக் தினத்தன்று மட்டுநகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பின்னரான துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்ட சிறுவர்களின் தாய்மாரும் உறவினர்களும் இக்காட்சிக்கு வந்திருந்தார்கள் இரு தசாப்தங்கள் கடந்தும் தமது மனதிற்குள் மாறாமல் வருத்திக் கொண்டிருக்கும் துயரங்களைத் தம்முடன் வாழும் சக மனிதர்களும் சுமக்கிறார்களே என்பதனைப் பார்த்து ஆறுதல் பெற்றார்கள். இதற்காக நாம் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்று உணர்ச்சிப்பெருக்குடன் கருத்துக் கூறினர். உலக நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் நடைபெற்று அவை முடிவுக்கு வந்ததன் பின்னர் உருவாகும் புதிய தலைமுறைகளிடையே தமது முன்னைய தலைமுறையினர் எதிர்கொண்ட போரின் கொடுமைகள் பற்றிய உணர்வு பூர்வமான புரிதல்கள் எதுவுமின்றி வரலாறு தெரியாத, தமக்கு முந்தியோர் பட்ட வேதனைகளின் வலிகளை உணரமுடியாத நிலைமைகள் வலுவாகி வரும் சூழலில் கெத்சமனி காண்பியக் காட்சி புதிய தலைமுறைகளிடையே போரின் கொடுமையை உணர்வு பூர்வமாகக் கடத்திய கலைச் செயற்பாடாக விளங்கியிருந்தது எனலாம். கண்காட்சியைப் பார்த்த போருக்குப் பின்னர் வளர்ந்த இளையோர் பலர் தமது அனுபவப் பதிவுகளில் இக்கருத்தைச் சொல்லிச் சென்றனர்.  போர்காலத்தில் காணாமல் போன தந்தையின் நினைவுகளுடன் வாழும் ஒரு பெண் இக்காட்சி தனது மனவலிக்கு ஆறுதல் தந்ததாகக் கருத்துரைத்துள்ளார்.

Related Posts