தமிழருக்கான நீதியை மறுப்பதற்குமான முன்னேற்பாடே ரணிலின் கைது – அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழருக்கான நீதியை மறுப்பதற்குமான முன்னேற்பாடே ரணிலின் கைது – அருட்தந்தை மா.சத்திவேல்

by ilankai

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளதாகத் தோன்றுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவர் இன்று (27) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”சட்டம், நீதி அனைவருக்கும் சமம். இதில் பதவி, தகுதி, சமூக நிலை பார்க்கப்பட மாட்டாது. குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சட்டத்திற்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். இதில் நாம் பின்வாங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க தேசிய பிக்குகள் பேரவை கூட்டத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் போர் குற்ற விசாரணை நடைபெறும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே கூறியிருந்தமையை நினைக்கும்போது சட்டம், நீதி தொடர்பில் அவரின் இரட்டை நாக்கு நிலைப்பாட்டையும், அரசியல் சித்து விளையாட்டையும் வெளிபடுத்துகிறது. மனுதர்ம சட்டத்தின்படி, இதுவும் குற்றமே. இதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.பௌத்த தர்மத்தின்படி, பிக்குகள் என்போர் பதவி, தகுதி, சமூக நிலை, சொத்து, சுகம் அனைத்தையும் கடந்தவர்கள். சமூகத்தின் அடிப்பட்ட மக்களின் வாழ்வியலோடு பயணிப்பதன் அடையாளமாகவே பிச்சை பாத்திரம் ஏந்தி வாழ்விற்கு முன்னுதாரணம் காட்டுகின்றார்கள். அத்தகையவர்கள் அரச கட்டமைப்பினால் பாதிக்கப்பட்டு சட்டம், நீதி சமம் மறுக்கப்பட்ட ஓய்வுக்காக குரல் கொடுக்க முன்வருவதோடு அதற்கு ஜனாதிபதிக்கும் அவர் இயக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு கேட்கின்றோம். சிங்கள பௌத்த படையினருக்கு ஒரு நீதி, அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மாற்றுவதன் மூலமே சட்ட சமத்துவத்தை அனுபவிக்க முடியும். அம்மாற்றத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.வடக்கில் தையிட்டியில் படையினர் தனியார் காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடம் அமைத்து, அதனை விகாரையாக்கி வழிபாடு நடத்துவது சட்டத்தின் சமநிலை அவலத்தை நிரூபித்துக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பு பௌத்தத்தை பாதுகாக்க, அங்கு பிக்கு ஒருவரையும் நியமித்து வழிபாடு எனும் போர்வையில் தமிழர்களின் மனதில், வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதந்தோறும் சட்டவிரோத கூட்டத்தை கூட்டுவது எந்த சட்டத்தின் கீழ் நியாயமாகும். இதனை பிக்குகள் பேரவை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி காணி பறிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றமையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த முன்வரவேண்டும்.அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மக்கள் பணம் சூறையாடல் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மக்கள் சக்தியினர் தினந்தினம் பாராயணம் பாடுவது கேட்கின்றது. அதன் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து சிறைச்சாலைக்குள் தள்ளி வழக்கு தொடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதேபோன்று வடக்கில் தையிட்டில் அமைந்துள்ள தீர்த்த விகாரையும் அதிகார துஷ்பிரயோகம், பணம் கையாடல், தமிழ் சிந்தனை மக்களுக்கு இடையிலே சமய முரண்பாடு தோற்றுவித்தல் என்பதை அடையாளப்படுத்துகிறது. ஆனால், அது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமான, சட்ட ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஏன் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காகவா அல்லது சட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் படையினர் என்பதற்காகவா? இந்த இரட்டை நிலைப்பாட்டிலிருந்து ஜனாதிபதி வெளிவரவேண்டும். தேசிய மக்கள் சக்தி மாற்றத்தினை உறுதிப்படுத்தவும் வேண்டும்.பாரிய இனப்படுகொலையோடு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யுத்தத்தின்போது படையினர் தமிழர்களுக்கு எதிராக மனித குலம் ஏற்காத குற்றமும் சர்வதேச போரியல் விதிமுறைகளையும் மீறி இனப் படுகொலையில் ஈடுபட்டனர் என்பதை சர்வதேசமும் அறிந்ததே. இலங்கையில் படுகொலை நிகழ்ந்தது என்பதற்கு செம்மணி உட்பட வட கிழக்கில் காணப்படும் சமூக புதைகுழிகள் சாட்சியாக எழுந்துள்ளன. அதுமட்டுமன்றி, தம் அன்புறவுகளை இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்துவிட்டு அவர்கள் திரும்ப வராத நிலையில் தொடர் போராட்டம் நடாத்திக்கொண்டிருகின்றனர். காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கின்றபோது சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியின் கைது அமைந்துள்ளதாகத் தோன்றுகின்றது. நாட்டின் சட்டத்துறையும் நீதியும் தகுதி, பதவி நிலை பாராது செயற்படுகிறது எனக் கூறி இலங்கை நாட்டை பிணை எடுக்கவும் குற்றமிழைத்த பாதுகாப்பு படையினருக்கு எதிராக உள்நாட்டு விசாரணை நடாத்த சந்தர்ப்பம் தாருங்கள். எம் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறவே அவசர அவசரமாக ரணிலின் கதை நடைபெற்றதோ எனவும் சந்தேகம் கொள்கின்றோம். ஏனெனில் இக்கைது ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை அண்மித்தே நடந்துள்ளது.மேலும், ரணில் வெளிநாட்டில் செலவழித்த அரச பணம் மிக சொற்பமே. அதற்கு தண்டனை கொடுப்பது அநீதியானது. ஆனால், பட்டலந்த வதை முகாம், மத்திய வங்கி பணமோசடி தொடர்பில் வழக்கு தொடருங்கள். நாம் அதற்கு ஆதரவளிப்போம் எனக் கூறி ஏழை மக்களை வீதியில் இறக்க ஒன்றுகூடிய அரசியல் போர்க் குற்றங்கள் தொடர்பில் தமிழர்கள் கேட்கும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? அத்தகைய குரல் எங்கும் எழவில்லை, எழப்போவதுமில்லை. ஏனெனில், ஒன்று வர்க்க அரசியல். இன்னொன்று, சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்.ஒரு நாட்டில் சட்டம், நீதி என்பன இனம், மொழி, சமயம் சார்ந்ததாக இருக்குமெனில், அங்கு இருள் கவ்வும் என்பது உண்மை. இலங்கையைப் பொறுத்தளவில் நாட்டின் அரசியல் யாப்பு இனம், சமயம், மொழி சார்ந்ததாகவும் அரச கட்டமைப்புகள் அதன் காவலாக திகழும்போது சமத்துவத்தை மக்கள் அனுபவிக்க முடியாது. அதனை மாற்ற முனையாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பவர்கள் அரசியல் நாடகவாதிகளே. கடந்த 75 ஆண்டுகளாக இன அழிவும் இனப்படுகொலையும் இடம்பெற, யாப்பு ரீதியிலான அரசியல் பாதுகாப்பு இன்மையே காரணமாகும். அதனை முதுகெலும்பு இல்லா அரசியல்வாதிகள் நரி பரம்பரையினரே. அனைத்து மக்களின் இன, சமய, மொழி, கலை கலாசார, பண்பாட்டு அடையாளங்களையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும்போதே நாட்டில் நீதியும் சட்டமும் சமத்துவமாக அமையும். அதற்கு முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் சக்தி எழுச்சி ஒன்று மட்டுமே வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Posts