டிரம்பின் 50% வரி: அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள் – என்ன நடக்கிறது? – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார்.12 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த முடிவு இந்தியா–அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்க அரசியல் மற்றும் ஊடகங்களில் பெரிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

சனிக்கிழமை அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

“ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு சீனாதான். ஆனால் அதற்கு அதிக வரி விதிக்கப்படவில்லை. ஐரோப்பா ரஷ்யாவிடமிருந்து அதிக எல்என்ஜி (LNG) வாங்குகிறது, ஆனால் அவர்களுக்கு வேறு விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது நியாயமற்றது. எரிசக்தி மற்றும் ரஷ்யாவிடமிருந்து யார் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதைக் கொண்டு வாதம் நடத்தப்படுகிறது என்றால், இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா பின்தங்கியுள்ளது ” என்று ஜெய்சங்கர் கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துகளைத் தவிர, அமெரிக்காவில் டிரம்ப் இந்தியாவை நோக்கி எடுத்துள்ள நிலைப்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பலரும் அதைப் பற்றிய கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்த குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி, சீனாவை எதிர்கொள்ள இந்தியா போன்ற ஒரு நட்பு நாடு தேவை என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிரம்ப் தனது கொள்கைகள் மூலம் தனது கூட்டாளிகளை அந்நியப்படுத்துகிறார் என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை எதிர்த்து கருத்து தெரிவித்தார்.

‘இந்தியா சீனாவுடன் போட்டியிட வேண்டும்’

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்த குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி, ‘அமெரிக்காவிற்கு இந்தியாவை தனது நட்பு நாடாக வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக சீனாவை எதிர்கொள்ள மிகவும் முக்கியம்’ என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி, நிக்கி ஹேலி அமெரிக்க பத்திரிகையான ‘நியூஸ் வீக்’-ல் இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்பான டிரம்பின் கொள்கை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.

அதில், “ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்ததை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு தீர்வைக் காண அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளாகிய இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக உருவான நட்பு மற்றும் நம்பிக்கை, தற்போதைய பதற்றங்களைத் தாண்டி செல்ல வலுவான அடிப்படையாக அது இருக்கும்” என்று நிக்கி ஹேலி எழுதியிருந்தார்.

“வர்த்தக தகராறு மற்றும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி போன்ற பிரச்னைகளில் கடுமையான பேச்சுவார்த்தைகள் அவசியம், ஆனால் உண்மையான நோக்கத்தையும் பொதுவான இலக்கையும் நாம் மறந்துவிடக் கூடாது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு இந்தியா போன்ற ஒரு நட்பு நாடு தேவை” என்று நிக்கி ஹேலி குறிப்பிட்டு இருந்தார்.

நிக்கி ஹேலியும், டிரம்பும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் டிரம்பை வெளிப்படையாக ஹேலி எதிர்த்துள்ளார்.

2016-ல், அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், இஸ்லாமியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்யும் டிரம்பின் யோசனையை ஹேலி கடுமையாக விமர்சித்தார்.

அதன்பின் டிரம்புடனான அவரது வேறுபாடுகள் பொதுவெளிக்கு வந்தன.

2021 ஆம் ஆண்டில், கேபிடல் ஹில்லில் நடந்த வன்முறைக்காக டிரம்பை அவர் விமர்சித்தார். “அவர் நம்மை சங்கடப்படுத்தியுள்ளார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

வன்முறைச் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து, “தேர்தல் நாளிலிருந்து அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு வரலாறு கடுமையாக தீர்ப்பளிக்கும்” என்று நிக்கி ஹேலிகூறினார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, டிரம்ப் குறித்து ஹேலியின் பார்வை மாறியது.

2023-ல், ஹேலி 2024 அதிபர் தேர்தலுக்காக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தனது வேட்புமனுவை அளித்தார். ஆனால் பின்னர், டிரம்பை ஆதரிக்கத் தீர்மானித்தார்.

‘டிரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவை விலக்குகிறார்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி.’டிரம்ப் தனது கொள்கைகள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகளை அந்நியப்படுத்தி வருகிறார். இதைப் பற்றிய கவலைகள் நியாயமானவையாகவே உள்ளன’ என முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி கூறினார்.

ஜான் கெர்ரி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ஐந்து முறை செனட்டராக இருந்த அவர், 2013 முதல் 2017 வரை ஒபாமா நிர்வாகத்தில் வெளியுறவு செயலாளராக பணியாற்றினார்.

“நாங்கள் கவலைப்படுகிறோம். அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோதிக்கும் இடையிலான பதற்றம் வருத்தமளிக்கிறது” என்று ஜான் கெர்ரி புதுடெல்லியில் நடந்த ஈடி உலகத் தலைவர்கள் மன்றத்தில் கூறினார் .

மேலும், “ஒரு பெரிய நாடு தனது மகத்துவத்தைக் காட்ட, மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை. டிரம்ப் நிர்வாகம், ராஜ்ஜீய வழிகளை விட, உத்தரவு மற்றும் அழுத்தம் மூலம் தீர்வுகளைத் தேட முயல்கிறது” என்றார்.

அதேநேரத்தில், “இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பிரச்னையை விரைவில் தீர்த்துக் கொள்ளும். இந்தியா, சுமார் 60 சதவீதப் பொருட்களுக்கான வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க முன்வந்துள்ளது. இது ஒரு பெரிய மாற்றம்” என்றும் கூறினார்.

டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஜான் போல்டன் கூறுவது என்ன?

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகளுக்கு, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் வரி விதித்தார். ஆனால் சீனாவும் அதே எண்ணெயை வாங்கினாலும், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இது இந்தியாவை சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அலட்சியம், அதன் சொந்த தவறு”என சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.

புதின் இந்தியாவுக்கு வரவிருப்பதையும், 2018-க்குப் பிறகு மோதி முதன்முறையாக சீனாவுக்குச் சென்றதையும் போல்டன் குறிப்பிட்டார்.

“இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் குறித்து முழுமையாக ஆராயவில்லை” என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் போல்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். ஆனால் 2019-ல் டிரம்ப் அவரை நீக்கினார்.

அதன்பிறகு, டிரம்பின் தீவிர எதிர்ப்பாளராக போல்டன் மாறினார்.

2020-ல் அவர் ஒரு நினைவுக் குறிப்பை எழுதி, வெளியுறவுக் கொள்கை பற்றி டிரம்பிற்கு எதுவும் தெரியாது என்று கடுமையாக விமர்சித்தார். இதற்குப் பிறகு, ரகசிய தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக, வெள்ளை மாளிகை அவர் மீது குற்றம் சாட்டியது.

கடந்த சனிக்கிழமை, எப்ஃபிஐ (FBI) போல்டனின் வீட்டில் சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு டிரம்ப் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றாலும், அவர் போல்டனை ‘துரோகி’ என்று அழைத்தார்.

மற்றொரு முன்னாள் ஆலோசகர் இவான் ஏ. ஃபீகன்பாம், அதிபரின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோவின் ஒரு காணொளியை ட்வீட் செய்தார்.

“இது முற்றிலும் தவறானது. ஆரம்பத்தில் ரஷ்யா தான் போருக்கான காரணம் என்று கூறப்பட்டது. பின்னர், சீனாவும் மற்ற நாடுகளும் அதற்கு உதவியதாக கூறப்பட்டது. இப்போது யுக்ரேன் தான் போருக்குப் பொறுப்பு என்று சொல்கிறார்கள். இந்தியாவும் இந்தப் போரில் உதவியதாக கூறப்படுகிறது”என்று அவர் கூறினார் .

“இந்த மக்கள் போருக்கு வெவ்வேறு நாடுகளைக் குறை கூறத் தொடங்கிய விதம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மேற்கொண்ட கடின உழைப்பை அழித்துவிட்டது.”

“போருக்குப் பல நாடுகளைப் பழி கூறும் இந்த அணுகுமுறை, கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்கா–இந்தியா உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை அழித்துவிட்டது”என்றும் அவர் கூறினார்.

“யுக்ரேனில் அமைதி ஏற்பட வேண்டுமானால், அதற்கான பாதை இந்தியா வழியாகவே செல்கிறது. ஆனால் இந்தியா இப்போது ரஷ்ய எண்ணெயை சுத்திகரிக்கும் ‘சலவை நிலையமாக’ மாறியுள்ளது. இதன் மூலம், இந்தியா தனக்கு லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், ரஷ்யாவுக்கு யுக்ரேன் போரில் மறைமுகமாக நிதியுதவியும் செய்து வருகிறது”என்றும் அந்த காணொளியில், பீட்டர் நவரோ கூறியிருந்தார்.

அமெரிக்க ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது?

‘டிரம்ப் இந்தியா மீது வரி விதித்ததற்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி வருகின்றன. இதனால், புதிய உத்தி சார்ந்த திட்டங்கள் உருவாகி வருகின்றன’ என்று டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

‘டிரம்பின் கொள்கைகள் உலக வர்த்தகத்தை புதிய திசைகளுக்கு நகர்த்துகின்றன. இந்த சூழ்நிலையில், சீனாவுடன் கூட்டணி ஏற்படுத்துவதன் மூலம் இந்தியா பலனடைய வாய்ப்பு உள்ளது’ என பேரன்ஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் வரிவிதிப்புக்கள் இந்தியாவை அமெரிக்காவின் உத்தி சார்ந்த போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன என்று ஃபாக்ஸ் நியூஸ் பதிவு செய்துள்ளது .

தெற்காசிய விவகாரங்களில் நிபுணரும், சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டின் முன்னாள் ஆலோசகருமான இவான் ஏ. ஃபைகன்பாம், “கடந்த 25 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அனைத்து அடித்தளங்களும் முற்றிலுமாக சிதைந்த நிலையில் அமெரிக்க-இந்திய உறவுகள் தற்போது உள்ளன” என்று கூறியதாக அந்த ஊடகம் மேற்கோள் காட்டியது.

“வரி விதிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு கிழக்கு நோக்கிச் சாய்ந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாஸ்கோவுக்குச் சென்றார். இந்த வாரம் வெளியுறவுத் துறை அமைச்சர் அங்கு செல்கிறார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குச் செல்கிறார். இதையடுத்து, குவாட் கூட்டமைப்பு தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டது.

டிரம்ப் இந்தியாவை சீனாவை நோக்கித் தள்ளுகிறார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “பிரதமர் நரேந்திர மோதி இதுவரை இந்தியாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் இருந்தார், சீனாவை விலக்கி வைக்க முயன்றார். ஆனால் இப்போது இந்தியா–சீனா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் வேகமாக நடக்கின்றன”என குறிப்பிடப்பட்டு இருந்தது.

சிஎன்என் செய்தி சேனலில் தனது நிகழ்ச்சியில் ஃபரீத் ஜகாரியா, டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

“கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றம் கண்டன. ஆனால் இப்போது அந்த முன்னேற்றம் பின்னோக்கிச் செல்கிறது” என்று அவர் கூறினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சி கிளிண்டன் காலத்தில் தொடங்கி, புஷ், ஒபாமா, பைடன் மற்றும் டிரம்பின் முதல் பதவிக்காலம் வரை தொடர்ந்ததாகக் கூறிய ஃபரீத் ஜகாரியா, “ஆனால் டிரம்ப் திடீரென இந்தியாவுக்கு எதிராக காட்டிய மனப்பான்மை, கடந்த 25 ஆண்டுகளாக 5 அமெரிக்க அதிபர்கள் செய்த முயற்சிகளை பெரிதும் பாதித்துவிட்டது. உத்தி சார்ந்து பார்த்தால், இது டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “டிரம்ப் மீண்டும் தனது கொள்கையை மாற்றினாலும், ஏற்பட வேண்டிய பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இந்தியாவில் தற்போது ‘அமெரிக்கா நம்பகமான நாடல்ல’ என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அமெரிக்கா தனது நண்பர்களிடம் கடுமையாக நடக்கிறது என்று இந்தியா கருதுகிறது. அதனால், இந்தியா தனது வெளிநாட்டு உறவுகளை பல திசைகளில் விரிவுபடுத்த வேண்டும். ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கவும், சீனாவுடன் உறவுகளை மாற்றவும் அவசியம் உள்ளது”என்றும் குறிப்பிட்டார்.

“நான் இந்தியாவில் இருந்தபோது, அமெரிக்காவுடனான வலுவான கூட்டணியை ஆதரித்து வந்தேன். மக்களுக்கு ‘இரு ஜனநாயக சக்திகளுக்கிடையிலான உறவுகள் தான் எதிர்காலம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, இந்தியர்களிடம் அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு கூறுவது மிகவும் கடினமாகிவிட்டது” என்றும் ஃபரீத் ஜகாரியா கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு