Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்26 ஆகஸ்ட் 2025, 13:53 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி (tariff) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர இருக்கிறது. கடந்த சில மாதங்களில் பல்வேறு கட்டங்களாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு உள்ளாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி விதிப்பால் பல்வேறு துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் அதன் இணை பொருட்கள் மற்றும் வாகன பாகங்கள் வரி விதிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 8.9 பில்லியன் டாலராக உள்ளது.Skip அதிகம் படிக்கப்பட்டது and continue readingஅதிகம் படிக்கப்பட்டதுEnd of அதிகம் படிக்கப்பட்டதுஅமெரிக்காவின் கடல் உணவுப் பொருட்களின் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5% ஆக உள்ளது.50% வரிவிதிப்பு என்பது எதிர்பாராத ஒன்று தான் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், முதலில் அறிவிக்கப்பட்ட 25% வரிவிதிப்பை தவிர்க்க முடியாது என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாகவும் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் உயர்த்தப்பட்ட 50% என்பதை 25% ஆக இறுதி செய்ய முடியும் என்றே அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.நாளை 50% வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இதனால் தாக்கம் ஏற்படப் போகும் 5 துறைகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்: மின்னணு துறைக்கு என்ன பாதிப்பு?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 1 இடத்தில் உள்ளது.தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறையில் ஸ்மார்ட்போன் போன்ற மொபைல்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு எங்கு உள்ளது?இந்தியாவின் மின்னணு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது.இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 30% தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 40% ஏற்றுமதி தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.டிரம்ப் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஐபோன்கள், கணிணிகள் மற்றும் இதர மின்னணு பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்துள்ளது.உலகில் உற்பத்தி செய்யப்படும் ஐந்தில் ஒரு ஐபோன் தற்போது தமிழ்நாட்டிலிருந்து தான் செல்வதாகவும் சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஐபோனை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளியாகவும் ப்ளூம்பர்க் செய்தி தெரிவிக்கிறது.உற்பத்தி துறைக்கு என்ன பாதிப்பு?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோவையில் இருந்து அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.4,000 கோடிக்கு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றனஅமெரிக்க வரி விதிப்பால் கோயம்புத்தூரின் பொறியியல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிறார் கொடிசியா அமைப்பின் தலைவரான கார்த்திகேயன்.கோவையிலிருந்து அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.4,000 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கோவையிலிருந்து ஏற்றுமதி ஆகும் முக்கியமான பொருட்கள் என்ன?கெமிக்கல் மற்றும் ஸ்லர்ரி பம்புகள்வால்வுகள்மைனிங் மற்றும் க்ரஷிங் இயந்திர உதிரிபாகங்கள்கனரக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்காற்றாலை உதிரிபாகங்கள்அமெரிக்க வணிகர்கள் இறக்குமதி வரியில் ஒரு பகுதியை இந்திய உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திப்பதாகக் கூறுகிறார் கார்த்திகேயன், “ஏற்றுமதியாகும் பொறியியல் உதிரி பாகங்கள் போன்ற பொருட்களின் லாப வரம்பு என்பது சராசரியாக 10% என்பதாகத் தான் இருக்கும். தற்போது 25% வரி உள்ள நிலையில் அதில் பாதியை (12.5%) கோவை உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க வணிகர்கள் நிர்பந்திக்கின்றனர், இது நமக்கு கட்டுப்படியாகாது” என்றார்.இந்த வரி விதிப்பால் புதிய உற்பத்தி ஆர்டர்கள் வருவது நின்றுவிட்டது என்றும் தெரிவித்தார் கார்த்திகேயன்.படக்குறிப்பு, “அமெரிக்க வரி விதிப்பால் கோயம்புத்தூரின் பொறியியல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்” – கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன்உதிரி பாகங்களுக்கு இந்தியாவை தான் அமெரிக்க உற்பத்தியாளர்கள் அதிகம் சார்ந்திருப்பதாகக் கூறும் கார்த்திகேயன், “அமெரிக்காவின் பல முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கோவையில் கிளைகள் உள்ளன. கோவையிலிருந்து நேரடியாக மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் (மூன்றாம் நாடுகள் மூலமாக) உற்பத்தி பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு செல்கின்றன.” என்றார். “ஜவுளி பொருட்களுக்குக் கூட இந்தியாவைத் தவிர்த்தால் வங்கதேசம், வியட்நாம் போன்ற மாற்றுகள் இருக்கின்றன. ஆனால் உதிரி பாகங்களுக்கு இந்தியாவை விட்டால் சீனா தான் மாற்று. ஆனால் சீனாவிடம் வாங்குவதற்கு அமெரிக்கா தற்போதைக்கு தயாராக இல்லை. அதனால் 25% வரிக்குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.ஐடி துறைக்கு என்ன பாதிப்பு?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவின் ஐடி ஏற்றுமதியில் 50% அமெரிக்காவைச் சார்ந்திருக்கிறது என்கிறார் ராஜாராம்அமெரிக்க வரி விதிப்பால் ஐடி துறைக்கு நேரடி பாதிப்பு இருக்காது என்கிறார், எஃப்ஐசிசிஐ அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவரான ராஜாராம் வெங்கட்ராமன்.இந்தியாவின் ஐடி ஏற்றுமதியில் 50% அமெரிக்காவைச் சார்ந்திருக்கிறது என்று கூறிய ராஜாராம், “ஐடி சேவை துறைகளின் கீழ் அமெரிக்க வரி விதிப்பு இதற்கு பொருந்தாது. ஆனால் அவற்றின் வருமானத்தில் சிறிய தாக்கம் இருக்கும்” என்று தெரிவித்தார்.”வர்த்தகம் பாதிக்கப்படுவதால் நாணயத்தின் மதிப்பு ஏறி இறங்கும். ஐடி நிறுவனங்கள் ‘ஃபார்வார்ட் கான்ட்ராக்ட்’ என்கிற முறையில் ஒப்பந்தங்கள் செய்கின்றன. அதன்படி நிலையான டாலர் மதிப்பை வைத்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். இத்தகைய சூழலில் டாலர் மதிப்பு கூடினால் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும்” என்றார்.ஐடி துறையைப் பொருத்தவரை இந்த வரி விதிப்பு என்பது இருமுனை கத்தியைப் போன்றது என்று கூறும் ராஜாராம், இதன் மூலம் நன்மைகளும் கிடைக்கலாம், சில பாதிப்புகளும் ஏற்படலாம் என்றார்.”அமெரிக்காவுக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி மாற்று சந்தைகள் உள்ளன. நாம் நமது உள்நாட்டு ஐடி துறையை வளர்க்க வேண்டும். அதேபோல், அமெரிக்காவை மட்டும் ஏற்றுமதிக்கு அதிகம் சார்ந்திருக்காமல் மாற்று சந்தைகளையும் உருவாக்க வேண்டும்” என்றார்.படக்குறிப்பு, ‘ஐடி சேவை துறைகளின் வருமானத்தில் சிறிய தாக்கம் இருக்கும்’-எஃப்ஐசிசிஐ அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜாராம் வெங்கட்ராமன்.ஜவுளித்துறைக்கு என்ன பாதிப்பு?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, திருப்பூரின் வருடாந்திர ஜவுளி உற்பத்தி – ரூ.70,000 கோடிதமிழ்நாட்டின் ஜவுளித்துறை சங்கிலியில் திருப்பூர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,000 கோடி மதிப்பிலான பொருட்கள் இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர் அமைப்பின் தலைவரான கே.எம்.சுப்ரமணியன்.திருப்பூர் ஏற்றுமதியாளர் அமைப்பின் தரவுகளின்படி (தோராயமாக)திருப்பூரின் வருடாந்திர ஜவுளி உற்பத்தி – ரூ.70,000 கோடிஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு – ரூ.40,000 கோடிஏற்றுமதியில் அமெரிக்க சந்தையின் பங்கு (30%) – ரூ.12,000 கோடிதிருப்பூர் ஜவுளி உற்பத்தி பொருட்களின் பெரிய ஒற்றை இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது என்கிறார் சுப்ரமணியன். “திருப்பூரிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அமெரிக்கா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.” என்றார்.படக்குறிப்பு, “தமிழ்நாட்டின் ஜவுளித்துறை சங்கிலியில் திருப்பூர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது” – திருப்பூர் ஏற்றுமதியாளர் அமைப்பின் தலைவர் கே.எம்.சுப்ரமணியன்தற்போதைய நிலவரம் என்ன?ஜவுளி உற்பத்தியைப் பொருத்தவரை ஆர்டர் பெறப்பட்டதிலிருந்து பொருட்கள் உற்பத்தியாகி வழங்கப்படுவது வரை அந்த சுழற்சிக்கு சராசரியாக 120 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.தற்போதுள்ள உள்ள சூழ்நிலையை விவரிக்கையில், “அமெரிக்க வரி விதிப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ஆடைகளை அமெரிக்க வணிகர்கள் முதல்கட்டமாக இறக்குமதி வரி செலுத்தி வாங்கிக்கொண்டனர். ஆனால், தற்போது உற்பத்தியில் இருக்கும் ஆர்டர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைப் பார்த்துவிட்டு தொடரலாம் என அமெரிக்க வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்கலாம் என அவர்களும் நம்புகின்றனர். புதிய ஆர்டர்களிலும் நிலையற்றத்தன்மை நிலவுகிறது.” என்றார்.இதற்கு மத்தியில் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால் இழப்புகளை ஈடுசெய்ய இது போதாது என்கிறார்.”இந்த வரி ரத்து 40 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். இதனால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்காது. மேலும் இது இரண்டு ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை” எனத் தெரிவித்தார்.பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து 40 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.ஏற்றுமதியாளர்களின் திட்டம் என்ன?இதர சந்தைகளுக்கு வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் உள்ளதாக தெரிவித்தார் சுப்ரமணியன், “வரி விதிப்பில் சாதகமான முடிவு கிடைத்தாலும் அது நீண்டகால நோக்கில் வணிகத்தை பாதிக்கும். அதனால் ரஷ்யா, ஆஸ்திரேலியா, யூஏஇ போன்ற இதர சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப் பார்க்கிறோம். இதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கும். அதன் பின் இழப்புகளை சமாளிக்க முடியும்” என்றார்.உணவுத் துறைக்கு என்ன பாதிப்பு?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தமிழ்நாட்டின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் முட்டைக்கு முக்கிய பங்கு.தமிழ்நாட்டின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் முட்டை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் அமெரிக்க வரி விதிப்பால் முட்டை ஏற்றுமதிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்கிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முட்டை உற்பத்தியாளரான வாங்காளி சுப்ரமணி.”நாம் பாரம்பரியமாக வளைகுடா நாடுகளுக்கு தான் அதிக ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்க சந்தைக்கு கடந்த சில ஆண்டுகளாக தான் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவில் முட்டைக்கு அதிக அளவிலான தேவை இருக்கிறது. இந்திய முட்டைகள் அங்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இங்கு 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டை அங்கு 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் 50% வரி விதிக்கப்பட்டாலும், லாபம் பல மடங்கு இருப்பதால் அமெரிக்க வணிகர்களுக்கு அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது” என்று தெரிவித்தார்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு