சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் செம்மணியில் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாட்டுக்குழு இன்று நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ். வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயல் நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம்.
ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது. ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றது போன்று அவரது கருத்து இருக்கின்றது. நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதற்கான வலியுறுத்தலையே இன்றும் வலியுறுத்துகின்றோம்.
எனவே எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்மிக்கை இல்லை. எனவே எதிர்வரும் 30ஆம் திகதியன்று செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.
குறித்த போராட்டத்துக்கு மத தலைவர்கள், பல்கலை சமூகம், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.