Monday, August 25, 2025
Home பிபிசிதமிழிலிருந்துவிஜயகாந்த் பிறந்த நாள்: கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் என்ன நடந்தது? இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேட்டி – BBC News தமிழ்

விஜயகாந்த் பிறந்த நாள்: கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் என்ன நடந்தது? இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேட்டி – BBC News தமிழ்

by ilankai
0 comments

‘விஜயகாந்த் மரண வாயில் வரை சென்றார்’ – கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் நடந்தது பற்றி ஆர்.கே. செல்வமணி பேட்டி

பட மூலாதாரம், I.V Cine Productions

படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம்.எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’, 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம்.

banner

1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, ‘புலன் விசாரணை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் ‘ஆட்டோ’ சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் செல்வமணி.

அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தில், ‘சந்தனக் கடத்தல்’ வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார்.

விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் பிரதான வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது.

ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் பின்னணி இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான ஆக்‌ஷன் திரைப்படமாக இன்றளவிலும் பேசப்படும் ‘கேப்டன் பிரபாகரன்’ குறித்து சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம். மறுவெளியீடுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் ‘கேப்டன் பிரபாகரன்’ குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

தயாரிப்பாளர் ராவுத்தருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?

பட மூலாதாரம், Facebook/Vijayakant

இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்தத் திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கு, தயாரிப்பாளர் ராவுத்தரும், நாயகன் விஜயகாந்தும், எனக்குக் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். ஆனால் ஆரம்பத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது

படத்தின் வேலைகள் ஆரம்பமானவுடன், எனக்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை, படப்பிடிப்புக்கான இடங்களை இறுதி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கே இவ்வளவு நாட்களா என்று கேட்டார் தயாரிப்பாளர். வீரப்பன் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், படப்பிடிப்புக்குச் சரியான இடங்களைப் பார்க்கவும் இந்தக் கால நேரம் தேவை என்றேன். ஒப்புக் கொண்டார். ஒரு புதிய ஜீப் வாங்கிக் கொடுத்தார். அதன் ஓட்டுநர், என் உதவியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் என நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றோம். மனம் போன போக்கில், தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை வனப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தோம். நாங்கள் செல்லாத பாதையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அந்தப் பயணம். சில இடங்களுக்கு நடந்தும் சென்றோம்.

‘எமரால்ட் ஃபாரஸ்ட்’ என்ற ஆங்கில திரைப்படத்தை, அமேசான் காடுகளில் படம் பிடித்திருப்பார்கள். அடர்த்தியான வனப் பகுதி, ஒரு மரத்தின் அடிப்பகுதியே 2 மீட்டர் அளவு இருக்கும் இடங்களிலெல்லாம் காட்சிகள் அமைந்திருந்தன. அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தில் தான், அதைப் போலவே ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் கேரளாவில் சாலக்குடிக்கு மேல் ஒரு இடம், அதிரப்பள்ளி, இடுக்கி பகுதிக்குக் கீழே ஒரு ஊர் எனப் பல இடங்களைக் கண்டறிந்தேன். அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முதலில் தயாரிப்பாளர் சரி என்று சொன்னார்.

பட மூலாதாரம், Facebook/Vijayakant

ஆனால் அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் இறந்து போனார்கள், வண்டி விபத்தில் ஒருவர் இறந்து போனார், குதிரை ஒன்று இறந்து போனது. இதெல்லாம் நல்ல சகுனங்கள் அல்ல என்று ராவுத்தர் நம்பினார். அவருடன் இருப்பவர்களும் அதை ஆமோதிக்க உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார். விஜயகாந்த், நாம் சென்னைக்கு சென்ற பிறகு அவரைப் பார்த்து சம்மதிக்க வைப்போம் என்று சொன்னதால், அனைவரும் புறப்பட்டோம். சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தினோம்.

ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அது திரைப்படத்துக்கு மிக முக்கியமான இடம் என்று சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. அதனால் முண்டந்துறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து, அங்கு சென்றோம். என் அதிர்ஷ்டம், அங்கு ஓயாமல் அடைமழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்றாலும் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. படப்பிடிப்பு நிற்கவே கூடாது என்று நினைப்பார் விஜயகாந்த். எனவே அவரிடம் மெதுவாகச் சென்று, மீண்டும் கேரளா செல்லலாம் என்றேன். அவரும், இப்போது தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம், நாம் சென்றுவிடுவோம் என்று கூறவே, எல்லோரும் மீண்டும் கேரளா சென்றோம்.

தன் பேச்சை மீறி விஜயகாந்திடம் பேசிவிட்டு இப்படி நடந்ததால் ராவுத்தருக்கு என் மேல் சிறிய வருத்தம். சில நாட்கள் என்னோட பேசாமல் கூட இருந்தார். ஆனால் அந்த மன வருத்தம் எல்லாம் பிரசவ வலி போல தான். எங்கள் படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே. எனவே இந்தப் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

100வது திரைப்படம் ஓடாது என்ற சினிமா சென்டிமென்ட் பற்றி…

பட மூலாதாரம், I.V Cine Productions

படக்குறிப்பு, ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஸ்ரீ ராகவேந்திரா’, கமல்ஹாசனின் ‘ராஜ பார்வை’ என அப்போது முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களின் 100வது திரைப்படங்களே ஓடவில்லை. இதனால் கேப்டனின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மீதும் ஒரு வகையில் அந்த அழுத்தம் இருந்தது.

ஒரு இயக்குநரின் முதல் படம் ஹிட் ஆனால் 2வது படம் ஓடாது என்கிற ஒரு நம்பிக்கையும் துறையில் இருந்தது. இரண்டும் சேர்ந்து எனக்கு லேசான அச்சத்தைத் தந்தன. ஆனால் ‘புலன் விசாரணை’யின் வெற்றியால், தயாரிப்பு தரப்பு, படக்குழு என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை, என் அச்சத்தைப் போக்கியது. படமும் வெற்றி பெற்றது.

ராசியில்லாத நடிகையை நடிக்க வைக்கலாமா?

படத்தின் நடிகர்கள் தேர்வு என்று வரும்போது பெரும்பாலும் ஆண் நடிகர்களே இருந்தனர். ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினேன். அதில் நடிக்க யார் வந்தாலும் முக்கியமான நிபந்தனை, 90 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்பதே. ஆரம்பத்தில் சரண்யா (பொன்வண்னன்) அவர்களை ஒப்பந்தம் செய்தோம். இரண்டு நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பும் நடந்தது. அவருக்கு அந்தச் சூழல் அவ்வளவு சவுகரியமாக இல்லை, மேலும் ஒரு உடை அணிவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு.

ஒரு நாள் வயிறு வலி என்று கிளம்பிச் சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கும் போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகை. அவர் நடித்தால் படம் ஓடாது. ஏற்னவே 100வது படம் என்கிற சென்டிமென்ட் வேறு உங்களுக்கு இருக்கிறது. எனவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். இதனால் எங்கள் தரப்பிலும் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் என்று முதலில் கூறிவிட்டனர்.

ஆனால் எங்களுக்கோ உடனே படப்பிடிப்பில் நடிக்க ஒரு நடிகை வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு. இதனால் வேறு வழியே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம். அன்றைய சூழலில் ரம்யா கிருஷ்ணனுக்கு நடிக்க அந்தப் படம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, எங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

பட மூலாதாரம், I.V Cine Productions

நாயகன் 35 நிமிடங்கள் வரை கதைக்குள் வராதது பற்றி…

விஜயகாந்தின் அறிமுகமே படம் ஆரம்பித்த 34-35வது நிமிடத்தில் தான் வரும். அது எனக்குச் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் 100வது படம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரது ரசிகர்களுக்காகச் சில விஷயங்களைச் செய்யலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முதலில் நாங்கள் ஒரு பிரதி தயார் செய்திருந்தோம். அதன்படி, 50வது நிமிடத்தில் தான் நாயகன் கதாபாத்திரம் வருவார். சரத்குமார் கதாபாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருந்தாலும், வனவிலங்கு புகைப்படக் கலையிலும் ஆர்வமாக இருப்பார். அவர் காடுகளைச் சுற்றும்போது ஒரு அழகானப் பழங்குடியினப் பெண்ணைச் சந்திப்பார். அவரைப் பின் தொடர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து, நட்பாகி, இருவரும் காதலிப்பார்கள்.

இதனிடையே வில்லன் கதாபாத்திரத்தை அவர் தேடுவதும் இருக்கும். இதன் பின் வில்லனிடம் சரத்குமார் கதாபாத்திரம் சிக்குவது, இறப்பது, அவர் குடும்பம் சென்னை வருவது, விஜயகாந்தை சந்திப்பது எனக் கதை தொடரும். ஆனால் இந்த முதல் பிரதியின் நீளம் 23,500 அடி. அதாவது ஏறக்குறைய 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் திரைப்படம் இருக்கவே கூடாது என ராவுத்தர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே பல காட்சிகளை நீக்கி, தற்போது இருக்கும் நீளத்துக்கு படம் தொகுக்கப்பட்டது.

இதில் 35வது நிமிடத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தின் அறிமுகம் நடக்கும். இதற்கு முன்னால் ‘பாசமுள்ள பாண்டியரே…’ பாடல் வரும்போது, படத்தின் டைட்டில் வரும்போது, சரத்குமாருக்கு ஆபத்து ஏற்படும்போது என 3 இடங்களில் நாயகன் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வர மாட்டார்.

இதற்குப் பிறகு நாயகனுக்கு சரியான அறிமுகக் காட்சி இல்லையென்றால் கண்டிப்பாக அது எனக்கு வினையாக முடியும். என்னால் திரையரங்குக்குள் நுழையவே முடியாது. ரசிகர்கள் விட மாட்டார்கள். ஆனால் நான் வைத்திருந்த காவல் நிலையும் தொடர்பான காட்சிகளும், நாயகனின் அறிமுகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாதியில் 5-6 காட்சிகளே விஜயகாந்த் வந்தாலும், படத்தின் பிரம்மாண்டம் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்தது.

படத்தில் 7,000 அடி நீக்கப்பட்டது பற்றி…

23,500அடி திரைப்படத்தைக் குறைத்தோம் என்று குறிப்பிட்டேன் இல்லையா. இதில் சில முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளும் நீக்கப்பட்டன. விஜயகாந்த் கேப்டனாக இருக்க, அவர் தலைமையில் சில கமாண்டோக்களுடன், வில்லனை பிடிக்க காட்டுப் பகுதிக்கு வருவார்கள். வில்லனுக்கு தெரியாமல் வேறு வழியில் சுற்றி வந்து தாக்குவார்கள் என்பது போலவே கதை அமைத்திருந்தேன். இதில் கார் துரத்தல், 2-3 சண்டைக் காட்சிகள், வன விலங்கை இவர்கள் எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட 7,000 அடிக்கு பலவிதமான ஆக்‌ஷன் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்தேன்.

அந்த பிரமாண்டமான காட்சிகளே தனியாக ஒரு படம் போல இருக்கும். அதையெல்லாம் நீக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, இந்தக் காட்சிகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த திரைப்படத்தில் உதவும், நான் இயக்கவில்லை என்றால் கூட உங்களின் அடுத்த தயாரிப்பில் பயன்படுத்துங்கள், என் பெயர் கூட போட வேண்டாம் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதன் மதிப்பு தெரியாமல், பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். இன்று இருந்தாலும் அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம் என்பேன். ஏனென்றால் அப்போதே கோடிகளில் செலவு செய்து தான் எடுத்திருந்தோம்.

விஜயகாந்த் கொடுத்த ஊக்கம் பற்றி…

பட மூலாதாரம், I.V Cine Productions

படக்குறிப்பு, விஜயகாந்துடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாதுஅப்போது திருமணமாகி, குழந்தை இருக்கும் நாயகன் கதாபாத்திரம் என்பது அரிது. ஆனால் விஜயகாந்த் அந்த விஷயத்திலும் தயங்கவில்லை. ”புலன் விசாரணை’ திரைப்படத்தில், வயது வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இது குறித்து சிலர் விமர்சனம் பேச, அப்போதே தயாரிப்பாளர், இந்தக் கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்த், அது வழக்கமானதாக இருக்கும், இதுவே கதைக்கு ஏற்றவாரு உணர்ச்சிகரமாக இருக்கும். மற்ற திரைப்படங்களில் இரண்டு நாயகிகள், பாடல்கள் எல்லாம் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தில் இப்படியே இருக்கட்டும் என்றார்.

அவருடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது, வழக்கமான நாயகியாக அல்லாமல், நாயகனின் மனைவி கதாபாத்திரம் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். அவரும் எதுவும் ஆட்சேபிக்கவில்லை.

படப்பிடிப்பில் தொடர்ந்த ஆபத்துகள்…

நான் ஏற்கனவே சொன்ன விபத்துகள் அல்லாமல், இந்தப் படப்பிடிப்பு முடியும் வரை பல்வேறு விதமான ஆபத்துகளை எங்களில் பலர் சந்தித்தோம். உயிருக்கே ஆபத்தான சூழல்களையும் எதிர்கொண்டோம். காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்த் 2-3 முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்தார்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென அணை திறக்கப்பட்டது. அது எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரின் நிறம் மாறியது. ஒருவர் தூரத்திலிருந்து நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பைப் பார்த்துக் கத்துகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அவசரஅவசரமாக எங்களிடம் ஓடி வந்து, அணை திறக்கப்பட்டுள்ளது. உடனே புறப்படுங்கள் என்று எச்சரித்தார்.

பட மூலாதாரம், I.V Cine Productions

படக்குறிப்பு, முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம்.கிரேனிலிருந்து கேமராவை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக எங்களைச் சூழந்தது. வேகமாகக் கேமராவை கிரேனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினோம்.

ஆனால் அந்த நீரின் வேகத்தில் கிரேன் சில கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. அது வெறும் நீர்ப்பகுதி அல்ல. பல பாறைகள் நிறைந்த வழி. அடித்துச் செல்லப்பட்ட கிரேன், பாறைகளில் மோதி, வளைந்த நிலையில்தான் எங்களுக்குக் கிடைத்தது.

நாங்கள் யாராவது மாட்டியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தெரியாத அளவுக்கு மேலும், கீழும் சம நிலை ஆகும் அளவுக்கு தண்ணீர் அளவு இருந்தது.

கடைசி நீதிமன்றக் காட்சியை நீக்கத் தயாராக இருந்தோம்

படத்தின் இறுதிக் காட்சியைப் படம்பிடிக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காலகட்டத்தில், ‘பராசக்தி’ படத்தில் வருவதைப் போல ஒரு நீளமான நீதிமன்றக் காட்சியை ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்தேன். வில்லனை நாயகன் கைது செய்ததும் கதை முடிந்தது போல ஆகிவிடுமே, அதன் பிறகு 2000 அடி நீளக் காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது.

நாம் இதை தனி ரீலாக எடுத்து வைப்போம். மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றக் காட்சிகள் தேவையில்லை என்று தோன்றினால், அப்படியே நீக்கிவிடலாம். நீங்கள் வில்லனை தோற்கடிக்கும் இடத்திலேயே படம் முடிந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அங்கே முடித்துவிடலாம் என்று விஜயகாந்திடம் கூறினேன். முதல் பிரதியைப் பார்க்கும் போது கூட சந்தேகம் தொடர்ந்தது.

ஆனால் முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். ஒவ்வொரு வசனமும் அனல் தெறித்தது. வீரப்பனைத் தாண்டி சமூகத்தில் எவ்வளவு குற்றவாளிகள் உள்ளனர் என்பது எனது சிறிய ஆய்வில் தெரிய வந்தது.

பட மூலாதாரம், I.V Cine Productions

படக்குறிப்பு, இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது.பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு உண்டு என்பதை என்னிடம் பலர் அப்போது தெரிவித்தனர். அவற்றையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேச முடியாத நிலை. வசனமாக வைத்திருந்தேன். எதிர்காலத்தில் வீரப்பனைப் பிடித்தாலும் உயிருடன் பிடிக்க மாட்டார்கள் என்று நான் யூகித்தேன். பல ஆண்டுகள் கழித்து அதுதான் நடந்தது.

எங்களது ஒட்டுமொத்த படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தந்த கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதுதான் இன்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ கொண்டாடப்படுவதன் காரணமும் கூட.

இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பலர் எங்களைப் பார்த்து சந்தேகப்படும் போது கூட விஜயகாந்த அவர்கள் ஒரு வார்த்தை எங்களைக் கேள்வி கேட்டதில்லை. ராவுத்தரும், ‘விஜயகாந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், கவலை வேண்டாம்’ என்று உறுதுணையாக நின்றார். அவர்கள் இருவருக்கும் என்றென்றும் நான் கடமைபட்டவனாக இருப்பேன்”.

இவ்வாறு உணர்ச்சிபொங்க பேசி முடித்தார் ஆர்.கே.செல்வமணி

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like