படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ்8 நிமிடங்களுக்கு முன்னர்
ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்தக்கட்டமாக, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து, இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், அந்த மாவட்டமே ‘மொத்தமாக அழிந்துவிடும்’ என கவலையை வெளிப்படுத்துகின்றன, விவசாய, மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள்.
ஆனால், மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் சோதனை கிணறு – என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவிரி படுகையில் உள்ள 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அதற்கு அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று விண்ணப்பித்தது. அப்போதே தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
படக்குறிப்பு, இத்திட்டம் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் (சித்தரிப்புப்படம்)மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் (HELP – Hydrocarbon Exploration Licensing Policy) அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது (OALP) ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக சுமார் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகளை, கிணறு ஒன்றுக்கு உத்தேசமாக ரூபாய் 33.75 கோடி செலவில் ரூபாய் 675 கோடி ரூபாய் செலவில் தோண்ட திட்டமிட்டு சோதனை கிணறுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்திருந்து.
மத்திய அரசு, சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16, ஜனவரி 2020ல் வெளியிட்ட அரசாணையின் படி, முன்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு “ஆய்வு” கிணறுகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்த முறையை மாற்றி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் வகையில் திருத்தம் செய்தது. அதன்படி, பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.
அதாவது, கடலுக்குள் அல்லது கடலுக்கு வெளியே அமைக்கப்படும் இத்தகைய சோதனை ஆய்வு கிணறுகள் B2 பிரிவின் கீழ் வருகிறது, இத்தகைய B2 பிரிவு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்பது தான் அந்த திருத்தம்.
ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் 2,000-3,000 மீட்டர் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்பது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னிச்சையான அமைப்பாகும். ‘B’ பிரிவு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக இது உள்ளது.
இந்த அமைப்பின் அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி, அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அந்த 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.
‘கடல்வளம் அழியும்’
ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல்வளம் அழிந்துபோகும் என்கிறார், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி.
இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளில் சில பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்கரையிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகமாக (Biosphere Reserve) உள்ளது.
“இத்திட்டத்தின்படி, தொண்டி முதல் ஏர்வாடி வரையில் 20 கிணறுகள் வரவுள்ளன. நிலையான மீன்வளத்துக்கான தீர்வுகளை ஆராய்ந்து வரும் சூழலில் அதற்காக நடவடிக்கை எடுக்காமல் கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள்மன்னார் வளைகுடா பகுதியில் மீன் வளம் குறைந்து போயுள்ளதால், எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படும் சூழலில் இது பிரச்னைகளை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
“மீன்கள் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் அளிக்கிறது. அப்படியான சூழலில் கடல் வளத்தை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். நிலத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஒருசில பகுதிகளுக்கு தான் இருக்கும், கடலில் பாதிப்பு என்றால் பல நூறு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும்.” என நல்லதம்பி கூறுகிறார்.
கடலில் வாழும் ஃபைட்டோபிளாங்டன் எனும் நுண்ணிய தாவரம் உலகுக்கு ஆக்சிஜனை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் செயல்முறையில் இந்த ஃபைட்டோபிளாங்டன் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் ஆக்சிஜன் குறையும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘விவசாயம் பாதிக்கப்படும்’
இத்திட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலைச்சாமி.
“ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் வைகை ஆற்றின் கடைமடை பகுதிகள். இயற்கை வழித்தடமாக இருந்த சித்தார்கோட்டை கால்வாய் என்ற பகுதிக்குள் உள்ள ஒரு ஊரும் இதன்கீழ் வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி இருக்கும் இந்த கிரமாங்களில் 80,000 ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. புன்செய் நிலங்கள் 1.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண்மை, ஆற்றின் வளம் பாதிக்கப்படும். குறிப்பாக வைகை, தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயின் வழித்தடங்கள் பாதிக்கப்படும்.” என்றார்.
“நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு”
இத்திட்டத்தால் நிலத்தடி நீர் மிகுந்த பாதிப்படையும் என்கிறார், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.
“இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும். தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம் போன்ற இடங்களில் இந்த கிணறுகள் அமைந்தால் அதன் நிலவளமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். ” என தெரிவிக்கிறார், பேராசிரியர் ஜெயராமன்.
பட மூலாதாரம், PROFEESOR JAYARAMAN
படக்குறிப்பு, ‘இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்’ – பேரா. ஜெயராமன் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள், விவசாயிகளை அணிதிரட்டி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஏல அறிவிக்கை வெளியான போது, அதை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த 2020ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, காவிரி டெல்டா பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை அமைக்க முடியாத வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திருத்த வேண்டும் என்பது ‘பூவுலகின் நண்பர்கள்’ போன்ற சூழலியல் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
பட மூலாதாரம், Thangam Thennarasu FB
படக்குறிப்பு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திருமப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது – அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கிய செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்துள்ள அனுமதியை உடனே திரும்பப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது.” என தெரிவித்தார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவு என்றும் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு இத்தகைய உறுதியை தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு.
பிரதமர் மோதி 2021ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இந்தியா குறைக்கும் என கூறியிருந்தார். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைத்துவரும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியான முடிவு அல்ல என்கிறார் பிரபாகரன் வீர அரசு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு