பட மூலாதாரம், PMD SRI LANKA
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசியல் பாரிய மாற்றங்களை கடந்த சில தினங்களில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அரசியல் ரீதியில் பிரிந்திருந்த எதிர்கட்சிகள் தற்போது ஓரணியாக திரண்டுள்ளமை, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்பட்ட அனைவரும் இன்று அவர்களுடன் இணைந்தவாறே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரணிலின் கைது தொடர்பில் சர்வதேச கவனம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்திலேயே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவொன்றாக வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Shashi Tharoor/x
படக்குறிப்பு, சசி தரூர் உடன் ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
பொருத்தமற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிவதாகவும் அவர் கூறுகின்றார்.
சுகயீனமுற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு மனிதாபிமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை இலங்கை விஜயத்தின் போது தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததையும் அவர் இந்த பதிவின் ஊடாக நினைவுப்படுத்தியிருந்தார்.
பட மூலாதாரம், Erik Solheim /X
படக்குறிப்பு, எரிக் சொல்ஹெய்மின் எக்ஸ் பதிவு இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைக்கான நோர்வின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம்மும் தனது எக்ஸ் தள பதிவில் கவலையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாக அவர் கூறுகின்றார்.
தடுப்பு காவலில் இருக்கும் அவரின் உடல்நிலைமை தெடர்பில் அனைவரும் கவலையடைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை 2022ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்ட போது, அதனை மீட்டெடுக்க முன்னின்று செயற்பட்ட தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறுகின்றார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் எந்த குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகவோ கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழலை எதிர்த்து போராடும் முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஆனால் உண்மையான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீது இலங்கையிலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல பத்தாண்டுகளாகவே காணப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நபராக கருதப்படுகின்றார்.
1970ம் ஆண்டு காலப் பகுதியில் அரசியல் வாழ்க்கைக்குள் பிரவேசித்த இவர், ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவை சாரும்.
எனினும், 1970ம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம், PMD SRI LANKA
யாழ் நூலகம் எரிப்பு
தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த நூலகத்தில் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெறுமதி வாய்ந்த 97000 புத்தகங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நூலக எரிப்பானது, இலங்கையின் இனப் பிரச்னையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் தலைமையில் தென் பகுதி மக்களை அழைத்து சென்று நூலகத்தை தீக்கிரையாக்கியமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார்.
”எமது ஆட்சிக் காலத்தில் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அது தொடர்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன்’. என 2016ம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வொன்றில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
பட்டலந்தை சித்திரவதை முகாம்
பட மூலாதாரம், Government Press
படக்குறிப்பு, ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பக்கம்இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்கான உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகாமே இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் என சொல்லப்படுகின்றது.
கம்பஹா மாவட்டத்தின் பியகம என்ற பகுதியில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியோரை இந்த சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், சிலர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது.
பட மூலாதாரம், BATALANDA COMMISSION REPORT
படக்குறிப்பு, வீட்டுத் திட்ட வளாகத்தின் வரைபடம்அரச உரக் கூட்டுத்தாபனத்தின் வீட்டுத் திட்டத்திலேயே இந்த சித்திரவதை முகாம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்திருந்தார்.
இந்த பின்னணியில், இந்த சித்திரவதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
பட மூலாதாரம், Government Press
படக்குறிப்பு, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி ஊழல்
இலங்கையின் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியை வகித்து வந்திருந்தனர்.
இந்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், தனது உறவினருக்கு மோசடியாக முறையில் இந்த பிணைமுறி விநியோகத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
அதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜீன் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
இந்த விவகாரத்திலும் ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு – நாளை விசாரணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வருவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கொழும்பு மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட மருத்துவர்களின் தீர்மானத்திற்கு அமையயே இறுதி முடிவு எடுக்கப்படும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
”வைராக்கியம் மிக்க அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 26ம் தேதி கொழும்பிற்கு வாருங்கள்” என தெரிவிக்கும் வகையிலான சமூக வலைத்தள பதிவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு