Monday, August 25, 2025
Home பிபிசிதமிழிலிருந்துபெட்ரோலியத்திற்கு மாற்றா “வெள்ளை ஹைட்ரஜன்” : பில் கேட்ஸ் நிறுவனத்தின் திட்டம் என்ன? – BBC News தமிழ்

பெட்ரோலியத்திற்கு மாற்றா “வெள்ளை ஹைட்ரஜன்” : பில் கேட்ஸ் நிறுவனத்தின் திட்டம் என்ன? – BBC News தமிழ்

by ilankai
0 comments

பெட்ரோலியத்திற்கு மாற்றா “வெள்ளை ஹைட்ரஜன்” ? : 2030ல் விற்பனை செய்ய திட்டமிடும் பில் கேட்ஸ் நிறுவனம்

பட மூலாதாரம், Alain Prinzhofer

படக்குறிப்பு, எழுதியவர், க்ளோ ஃபாரண்ட்பதவி, 22 நிமிடங்களுக்கு முன்னர்

இயற்கையாக உருவாகும் “வெள்ளை ஹைட்ரஜன்” பூமிக்கு கீழே பரந்த நிலத்தடி தேக்கங்களில் உள்ளது.

banner

இப்போது சுத்தமான ஆற்றலுக்கான தங்க வேட்டை தொடங்கியுள்ளது.

1859ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் டைட்டஸ்வில்லில், தொழிலதிபர் எட்வின் டிரேக் ஒரு நிலத்தடி நீர்த்தேக்கத்தில் எண்ணெய் (கருப்பு தங்கம்) இருப்பதை கண்டுபிடித்தார். எண்ணையைத் தேடும் அவரது முயற்சியில், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்திருந்தனர். ஆனால், அந்தக் கண்டுபிடிப்பு, எண்ணெய் தேடலில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது.

இப்போது, புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள், டைட்டஸ்வில்லில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட தருணத்தைப் போலவே, ஒரு புதிய ஆற்றல் மூலத்தை உருவாக்கும் நோக்கில், பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தேடுவது புதைபடிவ எரிபொருட்கள் அல்ல.

மாறாக, வணிக ரீதியாக சாத்தியமான, இயற்கையாக உருவாகக்கூடிய, குறைந்த கார்பன் ஹைட்ரஜன் மூலமாகும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பூமியில் உள்ள மிகச்சிறிய, எளிமையான மற்றும் இலகுவான மூலக்கூறான ஹைட்ரஜன், தற்போது முக்கியமாக சுத்திகரிப்பு மற்றும் வேதியியல் தொழில்களில், குறிப்பாக உரத்தொழிலுக்கான அம்மோனியாவை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஹைட்ரஜனின் பெரும்பாலான அளவு, மாசுபடக் கூடிய மீத்தேன் வாயு அல்லது நிலக்கரியின் வாயுவாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், ஹைட்ரஜனை குறைந்த கார்பன் உமிழும் முறைகளில் தயாரிக்க ஏற்கெனவே பிற வழிகள் உள்ளன.

எண்ணெயைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக ஆற்றலைச் சேமிக்கும் திறனும், எரிக்கும்போது வெறும் தண்ணீரை மட்டுமே வெளியிடும் தன்மையின் காரணமாக, ஹைட்ரஜனை சிலர் சுத்தமான எரிபொருளாகக் கருதுகிறார்கள்.

மின்மயமாக்கல் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு கடினமாக இருக்கும் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் எஃகு உற்பத்தி போன்ற தொழில்களுக்கு இது ஒரு முக்கியமான தீர்வாக பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, “பசுமை” ஹைட்ரஜன் என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் செயல்முறை மூலம் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரித்து உருவாக்கப்படும் தூய்மையான மாற்று எரிபொருள்.

“நீல” ஹைட்ரஜன் என்பது புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன். கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCS) தொழில்நுட்பம் மூலம் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக உருவாக்கப்படும் மற்றொரு மாற்று வழியாக இது கருதப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், பசுமை மற்றும் நீல ஹைட்ரஜன் குறைந்த கார்பன் எரிபொருட்களாக மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆனால், இவை குறிப்பிடத்தக்க குறைபாடுகளையும் கொண்டுள்ளன:

இரண்டும் விலை உயர்ந்தவை,மேலும், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் தாமதங்கள் காரணமாக அவைகளின் பயன்பாடு மெதுவாகவே வளர்ந்து வருகிறது.இரண்டும் சேர்ந்து, உலகளாவிய ஹைட்ரஜன் உற்பத்தியில் சுமார் 1% மட்டுமே பங்களிக்கின்றன.20 ஆண்டு காலத்தில் கார்பன் டை ஆக்ஸைடை (CO₂) விட 80 மடங்கு அதிக சக்தி கொண்ட மீத்தேன் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், நீல ஹைட்ரஜன் உண்மையில் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்டதா என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

சமீப ஆண்டுகளில், இயற்கையாக உருவாகும் ஹைட்ரஜன் முன்பு நினைத்ததைவிட பரவலாக உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், இதை மலிவான, கார்பன் இல்லாத எரிபொருளாக பயன்படுத்தலாம் என சிலர் நம்புகின்றனர்.

இந்த “நிலவியல்” ஹைட்ரஜன், இயற்கை ஹைட்ரஜன் அல்லது வெள்ளை ஹைட்ரஜன் என்றும் அழைக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர், இரும்புச்சத்து நிறைந்த பாறைகளை சர்பென்டினைசேஷன் (serpentinisation) எனப்படும் புவியியல் செயல்முறையில் சந்திக்கும் போது இயற்கையாகவே உருவாகிறது.

ஹைட்ரஜன் மிகவும் இலகுவானது என்பதால், இது பொதுவாக நுண்துளை பாறைகள் மற்றும் விரிசல்கள் வழியாக ஊடுருவி, இறுதியில் வளிமண்டலத்திற்கு உயர்கிறது.

இந்த “புவியியல்” ஹைட்ரஜன், அல்லது வெள்ளை ஹைட்ரஜன், நிலத்தடி நீர் இரும்புச்சத்து நிறைந்த பாறைகளை சந்திக்கும்போது “சர்பென்டினைசேஷன்” என்னும் செயல்முறையில் இயற்கையாக உருவாகிறது.

ஹைட்ரஜன் மிக இலகுவானது என்பதால், அது நுண்ணிய துளைகள் மற்றும் விரிசல்கள் வழியாக ஊடுருவி, வளிமண்டலத்தை அடைகிறது.

ஆனால், அது நிலத்தடியில் நடக்கும் செயல்முறைகளிலும் அல்லது நுண்ணுயிரிகளால் உண்ணப்படாவிட்டால் மட்டுமே நிகழும்.

சில நிலவியல் அமைப்புகளில், உப்பு அல்லது ஷெல் பாறைகள் போன்ற ஊடுருவ முடியாத பாறைகள் ஹைட்ரஜனை சிக்கவைக்கின்றன. இதனால், இந்த வாயு அந்தப் பாறைகளின் கீழ் குவிந்து சேமிக்கப்படுகிறது. இந்த நிலத்தடி ஹைட்ரஜன் குவிப்புகளை வணிக ரீதியாக பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2024-இல் அமெரிக்க புவியியல் ஆய்வகம் (USGS) வெளியிட்ட ஆய்வின்படி, நிலத்தடியில் 1 பில்லியன் முதல் 10 டிரில்லியன் டன் வரை ஹைட்ரஜன் இருக்கலாம். இதில், சுமார் 5.6 டிரில்லியன் டன் ஹைட்ரஜன் நிலவியல் அமைப்புகளில் சிக்கியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Mantle8

படக்குறிப்பு, பிரெஞ்சு பைரனீஸில் உள்ள ஒரு நிலத்தடி நீர்த்தேக்கத்திலிருந்து ஹைட்ரஜன் கசிகிறதா என்பதை ஒரு புவியியலாளர் சோதிக்கிறார் ( படம்: மேன்டில்8)பெரும்பாலான வெள்ளை ஹைட்ரஜன் மிக ஆழமாகவும், தொலைவாகவும், அல்லது சிறிய அளவில் இருப்பதால் பொருளாதார ரீதியாக மீட்க முடியாதவையாக உள்ளன என USGS (ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை) நிலவியலாளர்கள் ஜெஃப்ரி எல்லிஸ் மற்றும் சாரா கெல்மேன் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், 2% ஹைட்ரஜனை மட்டுமே மீட்க முடிந்தாலும், அது உலகின் ஹைட்ரஜன் தேவையை 200 ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்யும். மேலும், இது பூமியின் இயற்கை எரிவாயு இருப்புகளை விட இரு மடங்கு ஆற்றலை கொண்டிருக்கும்.

மேலும், பூமியில் உள்ள அனைத்து நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்புகளிலும் சேமிக்கப்பட்டுள்ளதை விட, இது இரண்டு மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டிருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த யோசனை பூமிக்கடியில் உள்ள வளங்கள் குறித்து பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. குறைந்தது 60 நிறுவனங்கள் வெள்ளை ஹைட்ரஜனை ஆராய்வதாக அறிவித்துள்ளன. முதலீடு சுமார் 1 பில்லியன் டாலராக (அதாவது £740 மில்லியன்) இருக்கலாம் என பிரெஞ்சு புவி வேதியியலாளர் எரிக் கௌச்சர் கூறுகிறார், அவர் சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) வெள்ளை ஹைட்ரஜன் நிபுணர் குழுவுக்கு இணைத் தலைவராக உள்ளார்.

ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும், இந்த ஆய்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

கௌச்சர் போன்ற ஆய்வாளர்கள், 1859-ல் டிரேக்கின் எண்ணெய் கண்டுபிடிப்பு, எண்ணெய் பொருளாதாரத்தைத் தொடங்கியதைப் போல, வணிக ரீதியாக பயனுள்ள ஹைட்ரஜன் நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டால் புதிய ஆய்வு யுகம் தொடங்கும் என்கின்றனர்.

“அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பெரிய கண்டுபிடிப்பு நிகழும் என நம்புகிறேன்,” என்று கூறும் கௌச்சர், “எண்ணெய் கடந்த காலத்தில் முக்கிய பங்கு வகித்தது போல, இயற்கை ஹைட்ரஜனும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது என் கனவு,” என்கிறார்.

ஆனால், ஆற்றல் மாற்றத்தில், வெள்ளை ஹைட்ரஜனின் பங்கு குறித்து “மிகுந்த எதிர்பார்ப்பு வேண்டாம்” என எரிக் கௌச்சர் எச்சரிக்கிறார். ஏனெனில், பூமியின் மேல் அடுக்கில் இருந்து எவ்வளவு ஹைட்ரஜனை மீட்க முடியும் என்பதில் பெரிய நிச்சயமின்மை உள்ளது.

“தற்போது எங்களுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை,” என்று கூறும் USGS-இன் ஜெஃப்ரி எலிஸ், “இதுதான் மிகப்பெரிய கேள்வி. இப்போது நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில், இயற்கை ஹைட்ரஜனின் தாக்கத்தை கணிக்க முடியாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மை உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

பூமியில் இருந்து வெள்ளை ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரே இடம் மேற்கு மாலியிலுள்ள பௌரேக்பூகோ கிராமம்.

1987-ல், ஒரு தொழிலாளி தண்ணீர் கிணறு தோண்டும்போது, அவர் புகைத்த சிகரெட்டால் ஏற்பட்ட சிறிய வெடிப்பு அந்த கிராமத்தின் விதியை மாற்றியது.

பின்னர், ஆழ்துளை கிணற்றின் அடியில் கிட்டத்தட்ட தூய ஹைட்ரஜன் கண்டறியப்பட்டது. இப்போது அது கிராமத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

ஹைட்ரஜன் நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது என்பதால், அதைக் மிகுந்த கவனத்துடன் தேடாமல் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், 2025 தொடக்கத்தில், புவியியலாளர்கள் ஒரு துப்பைக் கண்டறிந்தனர்.

பிளேட் டெக்டோனிக் (புவி அடுக்கு நகர்தல்) செயல்முறைகளை உருவகப்படுத்தி, மலைகள் உருவாகும்போது மேற்பரப்புக்கு அருகில் தள்ளப்பட்ட பாறைகள் வெள்ளை ஹைட்ரஜனின் முக்கிய இடங்களாக இருக்கலாம் எனக் கண்டறிந்தனர்.

ஆல்ப்ஸ் முதல் இமயமலை வரையிலான மலைத்தொடர்கள் ஆய்வுக்கு முக்கிய இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிரிட்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் நிலத்தடி அமைப்புகளைக் கண்டறியத் தேவையான முக்கிய கூறுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர்.

“நிலத்தடி நுண்ணுயிரிகள் ஹைட்ரஜனை விரைவாக உண்ணும் என்பது நமக்குத் தெரியும்,” என்கிறார் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியரும் ஆய்வின் இணை ஆசிரியருமான பார்பரா ஷெர்வுட் லோலர்.

மேலும், “பொருளாதார ரீதியாக ஹைட்ரஜனை சேமித்து பாதுகாக்க, அது நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் சூழல்களைத் தவிர்ப்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.

வெள்ளை ஹைட்ரஜன் ஆய்வு வேகம் பெற்றாலும், வணிக ரீதியாக பயனுள்ள கிணறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

2024-இல் பன்னாட்டு ஆற்றல் முகமையின் உலகளாவிய ஹைட்ரஜன் மதிப்பாய்வில், வெள்ளை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பம் தொழில்நுட்ப தயார்நிலை அளவீட்டில் 9-இல் 5 மதிப்பெண்கள் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை ஹைட்ரஜன் புதுப்பிக்கத்தக்க வளமாக பெரிய அளவில் பயன்படுத்தப்பட முடியுமா என்பதற்கு இன்னும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பிரான்ஸ் கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி வேதியியல் பேராசிரியர் லாரன்ட் ட்ரூச் கூறுகிறார்.

நீர்த்தேக்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜனை மாற்றும் வகையில் அது விரைவாக உருவாகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஹைட்ரஜன் உற்பத்தி விகிதம் “நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் மெதுவாக உள்ளது” என்கிறார் ட்ரூச்.

“இயற்கை ஹைட்ரஜன் உற்பத்தி தற்போது மிகக் குறைவாகவே உள்ளது. கிடைக்கும் ஹைட்ரஜன் அரிதாகவே தூய்மையானதாக உள்ளது. பல கண்டுபிடிப்புகள் கரைந்த வாயுவாகவே உள்ளன, இவற்றை தொழில்துறைக்கு உகந்த வகையில் பிரித்தெடுக்க இயலாது”என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

இயற்கையாக உருவாகும் ஹைட்ரஜன் தேவையான இடங்களில் கிடைப்பது கடினம், மேலும் அதை கொண்டு செல்வதும் சேமிப்பதும் சவாலானது. ஆனால், உள்ளூர் தொழில்களுக்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் எரிபொருள் தன்னிறைவை இது ஊக்குவிக்கும் என அதன் ஆதரவாளர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

ஆனால், வெள்ளை ஹைட்ரஜனை பிரித்தெடுப்பது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக காலநிலை பாதிப்புகள், புதைபடிவ எரிபொருட்களை மாற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை குறைக்கலாம்.

ஹைட்ரஜன் நீர்த்தேக்கங்களில் மீத்தேன் இருக்கலாம், இதை பிடிக்காவிட்டால் வெள்ளை ஹைட்ரஜனின் நன்மைகள் குறையும். மேலும், வளிமண்டலத்தில் வெளியாகும் ஹைட்ரஜன், மீத்தேனை உடைக்கும் ஹைட்ராக்சில் சேர்மத்துடன் போட்டியிடுவதால், மீத்தேன் நீண்ட காலம் நிலைத்து, அதிக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமையும்.

மீத்தேன் உமிழ்வுகள் மற்றும் துளையிடும் உள்கட்டமைப்பு உமிழ்வுகள் காரணமாக, வெள்ளை ஹைட்ரஜன் உற்பத்தி முற்றிலும் கார்பன் இல்லாததாக இருக்காது.

நீர்த்தேக்கங்களில் அதிக ஹைட்ரஜனும் குறைந்த மீத்தேனும் இருக்கும்போது, ஒரு கிலோ ஹைட்ரஜனுக்கு 0.4 கிலோ CO2 சமமான (CO2e) உமிழ்வு ஏற்படும் என ஆரம்ப மதிப்பீடு கூறுகிறது. இது பச்சை ஹைட்ரஜனின் சராசரி 1.6 கிலோ CO2e உமிழ்வை விட குறைவு, ஏனெனில் பச்சை ஹைட்ரஜனுக்கு பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு தேவை.

ஆனால், நீர்த்தேக்கத்தில் மீத்தேன் அளவு அதிகமாகவோ அல்லது கிணற்றின் உற்பத்தித்திறன் குறைவாகவோ இருந்தால், வெள்ளை ஹைட்ரஜன் உற்பத்தியில் உமிழ்வுகள் அதிகரிக்கும்.

உதாரணமாக, 75% ஹைட்ரஜனும் 22.5% மீத்தேனும் கொண்ட கிணறு, ஒரு கிலோ ஹைட்ரஜனுக்கு 1.5 கிலோ CO2e உமிழ்வை ஏற்படுத்தும் என அதே ஆய்வு தெரிவிக்கிறது.

வெள்ளை ஹைட்ரஜன் ஆதரவாளர்கள், மீத்தேன் உமிழ்வுகளை வடிகட்ட முடியும் என்றும், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவது இயற்கையாக மேற்பரப்புக்கு கசிந்து வளிமண்டலத்தை அடையும் அளவைக் குறைக்கும் என்றும் பிபிசியிடம் கூறுகின்றனர்.

ஆனால், ட்ரூச் இதனை மறுக்கிறார். பெரிய அளவிலான வெள்ளை ஹைட்ரஜன் உற்பத்தி வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் கசிவை அதிகரிக்கும் என்றும், இது நிலத்தடி சுற்றுச்சூழல் அமைப்புகளையும், ஹைட்ரஜனை ஆற்றலாக நம்பியிருக்கும் நுண்ணுயிரிகளையும் பாதிக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இந்த நுண்ணுயிரிகள் பூமியின் வேதியியல் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ரேச்சல் பீவர் மற்றும் ஜோஷ் நியூஃபெல்ட் நடத்திய ஆய்வின்படி, ஆழமான நிலத்தடி பற்றி இன்னும் இன்னும் குறைவாகவே அறியப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் இயற்கை ஹைட்ரஜனின் மாதிரிகளை இந்தோனீசியாவின் எரிசக்தி அமைச்சகத்தின் குழு ஒன்று எடுக்கிறது (படம்: கெட்டி இமேஜஸ்)அடுத்த சில ஆண்டுகளில் பெரிய ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், அதை தொழில்துறை அளவில் உருவாக்க இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும் என லாரன்ட் ட்ரூச் கூறுகிறார். அதாவது, வெள்ளை ஹைட்ரஜன் விரைவில் எரிசக்தி அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

“உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைய தேவையான காலக்கெடுவில், புதைபடிவ எரிபொருளால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை மாற்றுவதற்கு வெள்ளை ஹைட்ரஜன் ‘கிடைக்காது'”என மற்ற நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.

பில் கேட்ஸின் பிரேக்த்ரூ எனர்ஜியால் ஆதரிக்கப்படும் பிரெஞ்சு ஹைட்ரஜன் ஆய்வு தொடக்க நிறுவனமான Mantle8 என்ற ஹைட்ரஜன் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான இம்மானுவேல் மசினி, கார்பன் நீக்கத்திற்கான அவசரத் தேவையே வெள்ளை ஹைட்ரஜன் ஆய்வை துரிதப்படுத்த வேண்டிய காரணம் என்கிறார்.

“பெரிய அளவிலான ஹைட்ரஜன் இருப்புகள் இருக்கலாம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதை கண்டறிந்து வழங்க வேண்டும்,” என்கிறார் மசினி.

இதை அடைய, Mantle8 நிறுவனம், நிலவியல், புவி இயற்பியல் மற்றும் புவி வேதியியல் தரவுகளையும் சென்சார்களையும் பயன்படுத்தி, பூமியின் மேன்டலின் 4D படங்களை (முப்பரிமாணம் மற்றும் காலம்) உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது வெள்ளை ஹைட்ரஜன் நீர்த்தேக்கங்களின் சரியான இடத்தைக் கண்டறிந்து, ஒவ்வொரு நீர்த்தேக்கத்திலும் உள்ள ஹைட்ரஜனின் அளவை அளவிடவும் கண்காணிக்கவும் உதவுகிறது.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் முழு கிரகத்தையும் வரைபடமாக்க முடியும் என்றும், நிரப்பப்படும் நீர்த்தேக்கங்களைக் கண்டறிவதன் மூலம் ஆய்வில் உள்ள யூகங்களை நீக்கி, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் கூறுகிறது. ஐரோப்பாவில் நம்பிக்கை தரக்கூடிய 12 இடங்களை ஏற்கெனவே கண்டறிந்துள்ளதாகவும், 2030-க்குள் 10 மில்லியன் டன் ஹைட்ரஜன் இருப்புகளை அடைய இலக்கு வைத்துள்ளதாகவும் மசினி தெரிவிக்கிறார். இந்த இலக்கை அடைய முடியும் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

பிப்ரவரி 2025-ல், தென்மேற்கு பிரான்ஸின் பைரனீஸ் மலைகளில் தொழில்நுட்பத்தை சோதிக்க Mantle8 நிறுவனம் நிதியுதவியைப் பெற்றது. 2028-ல் ஆய்வு துளையிடலைத் தொடங்கி, 2030-க்குள் ஒரு கிலோ ஹைட்ரஜனை 0.80 டாலர் (0.60 யூரோ) விலையில் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.

இது மற்ற ஹைட்ரஜன் வகைகளை விட மலிவானதாகவும், பச்சை ஹைட்ரஜனை விட ஐந்து மடங்கு குறைவான விலையாகவும் இருக்கும். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சிறந்த நிலைமைகளில் வெள்ளை ஹைட்ரஜனை 1 டாலருக்கும் (0.74 யூரோ) குறைவாக உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடுகின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உள்ள கருவிகள் மற்றும் நிபுணத்துவத்தை, ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் வகையில் மாற்றியமைக்கலாம் என இயற்கை ஹைட்ரஜன் ஆய்வு முன்னோடியும், நிலத்தடி ஹைட்ரஜனைக் கண்டறியும் ஹைரெவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான வியாசெஸ்லாவ் ஸ்கோனிக் கூறுகிறார். “ஹைட்ரோகார்பன் துறையை தூய்மையான எரிசக்திக்கு மாற்றுவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு,” என அவர் குறிப்பிடுகிறார்.

எண்ணெய் நிறுவனங்கள் இயற்கை ஹைட்ரஜனில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

பிரேசிலில், பெட்ரோபிராஸ் நிறுவனம் இயற்கை ஹைட்ரஜனை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்கிறது. பிபி மற்றும் செவ்ரான் நிறுவனங்கள் இயற்கை ஹைட்ரஜன் ஆய்வு கூட்டமைப்பில் இணைந்துள்ளன, மேலும் பிபி, பிரிட்டனைச் சேர்ந்த ஸ்னோஃபாக்ஸ் டிஸ்கவரி என்ற இயற்கை ஹைட்ரஜன் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்துள்ளது.

மற்ற சிலர், நிலத்தடி இரும்புச்சத்து நிறைந்த பாறைகளில் தண்ணீரை செலுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை தூண்ட முயலுகின்றனர்.

இதன் மூலம் “ஆரஞ்சு ஹைட்ரஜன்” எனப்படும் ஒரு புதிய வகை ஹைட்ரஜன் உருவாகும்.

கோட்பாட்டளவில், இந்த முறையை கார்பன் சேமிப்புடன் இணைக்கலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானதும், நிச்சயமற்றதும் ஆகும்.

வெள்ளை ஹைட்ரஜன், குறிப்பாக உரத் தொழில் போன்ற கார்பனை நீக்க முடியாத துறைகளுக்கு ஒரு முக்கிய தீர்வாக இருக்கும் என வியாசெஸ்லாவ் ஸ்கோனிக் நம்புகிறார். ஆனால், சிறந்த சூழ்நிலை அமைந்தாலும் கூட, 2050-க்குள் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் “சில சதவிகிதம்” மட்டுமே மாற்றப்படும் என அவர் மதிப்பிடுகிறார்.

ஆற்றல் மாற்றத்தில், வெள்ளை ஹைட்ரஜன் எத்தகைய பங்கு வகிக்கும் என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது என லாரன்ட் ட்ரூச் போன்றவர்கள் கூறுகிறார்கள்.

நிலத்தடியில் பிரித்தெடுக்கக்கூடிய ஹைட்ரஜன் நீர்த்தேக்கங்கள் உள்ளனவா என்பது ” உண்மையான அறிவியல்பூர்வமான ஒரு கேள்வி” என்கிறார் ட்ரூச், ஆனால் “அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like