பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லாததால் பழைய முறையில் விசாரித்த்ய் வழக்கை முடித்துள்ளனர்எழுதியவர், பல்லா சதீஷ்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)
தெலங்கானா மாநிலத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஹைதரபாத்தில் குகட்பள்ளியில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன்தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது தெரியவந்ததுள்ளது.
பக்கத்து வீட்டில் கிரிக்கெட் மட்டையை (பேட்) திருடச் சென்ற சிறுவன், அவனைக் கண்ட சிறுமி கத்தியதும் தாக்கி கொலை செய்துள்ளார்.
ஐந்து நாட்களாக இந்த வழக்கில் பலரிடம் விசாரணை நடத்திய பிறகு சிறுவன் தான் கொலை செய்தவர் என காவல்துறை தீர்மானித்துள்ளது. இந்த திருட்டுக்காக அந்த சிறுவன் காகிதம் ஒன்றில் ஆங்கிலத்தில் எழுதிய குறிப்பு ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த சிறுவனுக்கு ஓ.டி.டி. மற்றும் இதர குற்ற தொடர்கள் மற்றும் திரைப்படங்களால் தாக்கம் ஏற்பட்டுள்ள்து என காவல்துறை தெரிவிக்கிறது.
என்ன நடந்தது?
ஆகஸ்ட் 18 ஆம் தேதி குகட்பள்ளியில் காலை 9 மணியளவில் தனது 10 வயது மகள் கொலை செய்யப்பட்டதாக அவரின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார்.
சிறுமியின் உடலை பரிசோதித்த போது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக 5 குழுக்களை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தியது.
அந்தப் பகுதியில் சிசிடிவி காட்சிகளும் இல்லாததால் இந்த வழக்கு சவாலாக மாறியது. அங்கு கைப்பேசிகள் பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகளும் இல்லை. இதனால் தொழில்நுட்ப வழிகளில் அல்லாமல் பழைய முறைகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் வழக்கை விசாரித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சைஃபராபாத் சரக காவல் ஆணையர் அவினாஷ் மோகன்டி, துணை ஆணையர் சுரேஷ் குமார் மற்றும் இதர அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சம்பவம் நடந்த முதல் நாளன்று காவல்துறையினர் அந்த சிறுவனிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
“நானும் அந்த சிறுமி, ‘சார், டாடி’ என கத்தியதை கேட்டேன்” என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒருகட்டத்தில் சிறுமியின் தந்தையையும் காவல்துறையினர் சந்தேகித்தனர். சிறுமியின் வீட்டிற்கு கீழே வசித்த ஓடிசாவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நிறைய பூஜைகளைச் செய்ததால் இந்த குற்றம் நரபலியாக இருக்குமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இறுதியில் அனைத்து தடயங்களும் சிறுவனை நோக்கியே சென்றன.
“சிறுவன் எந்த கஷ்டமுமின்றி அனைத்து தகவல்களையும் கூறிவிட்டான்” என ஒரு காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
படக்குறிப்பு, காவல்துறை அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்புகுற்றம் நடந்தது எப்படி? காவல்துறை பகிர்ந்த தகவல்
இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்கிற தகவலை காவல்துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
பக்கத்து வீட்டில் கிரிக்கெட் மட்டையை திருடச் சென்ற சிறுவன் கையில் கத்தியுடன் சென்றதாக தெரிவித்தனர். “பக்கத்து கட்டடத்தின் நான்காவது மாடியில் சிறுவன் வசித்து வந்துள்ளான். தன் வீட்டிற்கு கீழ் தளத்திலிருந்து சிறுமியின் வீட்டின் மாடி மீது குதித்துள்ளான். அவன் கிரிக்கெட் மட்டையை திருடச் சென்றுள்ளான். பூட்டை திறக்க உதவியாக இருக்கும் என கத்தியையும் எடுத்துச் சென்றுள்ளான். ஆனால் வீடு பூட்டப்படவில்லை”
“வீட்டில் குழந்தை இருந்தாலும் அமைதியாகச் சென்று மட்டையை எடுத்துள்ளான். அந்த மட்டை சிறுமியின் தம்பியினுடையது. அவன் திரும்பிச் செல்ல முயன்ற போது அவனைப் பார்த்த சிறுமி கத்தியுள்ளார். அவன் கிளம்பிய போது சட்டையைப் பிடித்துள்ளார் சிறுமி. தனது தந்தையிடம் கூறிவிடுவேன் என சிறுமி கூற அச்சமடைந்த சிறுவன் அவரை தள்ளிவிட்டுள்ளார். படுக்கையின் மீது விழுந்த சிறுமியை கண்களை மூடிக் கொண்டு உடனடியாக கத்தியை வைத்து தாக்கியுள்ளான்.” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, சிறுமியின் வீட்டில் மட்டை ஒன்று திருடச் சென்றுள்ளான்.சிறுவனின் வீட்டில் இருந்த மட்டை
திருட்டை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என முன்கூட்டியே ஒரு காகிதத்தில் சிறுவன் எழுதி வைத்திருந்ததாக சுரேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “அவன் கத்தி, மேஜை, எரிவாயு என அனைத்தையும் பயன்படுத்த முடிவு செய்திருந்தான். வீடு பூட்டப்பட்டிருந்தால் திறப்பதற்காக கத்தியை எடுத்துச் சென்றுள்ளான். கத்தி மிரட்டுவதற்கும் உதவும் என எண்ணியுள்ளான். திருடிய பிறகு எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக எரிவாயுவை கசியவிட திட்டமிட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் இருந்தது. ஒரு மாதமாகவே இதனை திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. அவனின் வீட்டில் தேடியபோது கத்தி, துணிகள், ஒரு மட்டை மற்றும் குறிப்பு கிடைத்தது” என்றார்.
தடயவியல் துறையின் உதவியுடன் ரத்தக்கறை ஆதாரங்களைச் சேகரித்ததாகவும் குறிப்பிட்டார். “குற்றத்திற்குப் பிறகு கத்தியை கழுவியுள்ளான். அவனது ஆடையிலும் ரத்தக்கறை இருந்துள்ளது. அவன் வீட்டிற்குச் சென்றபோது தந்தையும் சகோதரியும் ஹாலில் இருந்துள்ளனர், அதனால் சட்டையை வெளியே வைத்துவிட்டு நேரடியாக குளிக்கச் சென்றுள்ளான். ரத்தம் படிந்த ஆடையை சலவை இயந்திரத்தில் போட்டுள்ளான். சலவை செய்த பிறகும் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
சிறுவனிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் கேட்டால் மட்டை வாங்கித் தந்திருக்க மாட்டார்களா என காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளனர்.
வீட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தது, அப்பாவிற்கு வேலை இல்லை, சகோதரிக்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததால் தான் மட்டை வாங்கித் தரச் சொல்லி கேட்க விரும்பாமல் இதைச் செய்ததாக சிறுவன் பதிலளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவன் மீது முதலிலே சந்தேகம் இருந்தாலும் மற்றவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் துப்பு கிடைத்தவுடன் சிறுவனை காவல்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த நாளில் காலை 8 மணிக்கு அங்கு சிறுவன் இருந்ததற்கான ஆதாரத்தை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். முதல் கேள்வி எழுப்பிய போதும் சிறுவன் முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்துள்ளான்.
“காலை 10 மணி வாக்கில் சிறுமி கத்திய சத்தம் கேட்டது” என முதலில் தெரிவித்துள்ளான்.
சிறுவனுக்கு உடல் வலு இல்லையென்பதால் சிறுமிக்கு மோசமான காயங்கள் ஏற்படவில்லை எனக் கூறிய காவல்துறையினர், கழுத்துப் பகுதி காயத்திலிருந்து ஏற்பட்ட கூடுதல் ரத்தக்கசிவால் தான் சிறுமி இறந்ததாக தெரிவித்தனர்.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, சிறுமியின் வீட்டு முன்பு திரண்ட மக்கள்யார் இந்த சிறுவன்?
சிறுவனின் தந்தை வீட்டிலிருந்தபடி பகுதி நேரமாக இணையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரின் தாயும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவனுக்கு மூத்த சகோதரிகள் உள்ளனர்.
கடந்த காலத்தில் அவன் மிகவும் பிடிவாதமாக இருப்பதாக நண்பர்கள் கேலி செய்ததால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளான். சிஐடி போன்ற தொடர்களையும் அதிகம் பார்த்து வந்துள்ளான். பத்தாம் வகுப்பு மாணவனான அந்த சிறுவன் படிப்பின் மீது பெரிதும் நாட்டமின்றி இருந்துள்ளான்.
“சம்பவம் நடந்த நாளன்று தனது மகனின் நடத்தை சந்தேகத்தை கிளப்பியது என அவரின் தாய் கூறினார். திடீரென குளிக்கச் சென்று, ஆடைகளை சலவை இயந்திரத்தில் போட்டதோடு சற்று பதற்றமாகவும் இருந்ததால் அவனை கேள்வி கேட்டுள்ளார். ஆனால் சிறுவன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளான்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாய் பல முறை விசாரித்ததால் “என்னை போலீஸில் ஒப்படைக்கப் போகிறீர்களா? என சிறுவன் கேட்டுள்ளதாக பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
“சிறுவன் யூடியூபிலும் ஓடிடி தளங்களிலும் க்ரைம் தொடர்கள், ஆச்சரியம் மற்றும் ரகசியம் நிறைந்த தொடர்களைப் பார்ப்பதை ரசித்துள்ளான்” என ஆணையர் மோகன்டி தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் விசாரணையை சிறுவன் பார்த்துள்ளான். முதல் நாள் விசாரணையில் மிகவும் குழம்பிப் போயிருந்தான்.
இந்த சிறுவனும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இளைய சகோதரனும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவது தெரியவந்துள்ளது. முன்னர் சிறுவனின் மட்டையை உடைத்ததற்காக சிறுமியின் தம்பி 500 ரூபாய் கொடுத்துள்ளான். அந்த பணத்தை வைத்து சிறுவன் ஒரு போன் வாங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது.
சிசிடிவி கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்கள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை தாமதமானது என்றும் போதைப்பொருளுக்கான எந்த ஆதாரமும் இல்லையென்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு