வடமாகாணத்தில் சுற்றுலா துறை சார்ந்த விடயங்களுக்கு ஒரு சில அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு பொறுப்பான மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என முதலீட்டாளர்கள் குற்றஞ்சாட்டுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், உண்மையில் எங்களுக்கும் அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கிருக்கும் ஒரு சில அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் வரும்போதும் சுற்றுலா துறைசார் முதலீட்டாளர்கள் வரும் போது அவர்களை இழுத்தடிக்கும் போக்கு காணப்படுகிறது.
நிச்சயமாக அவர்களை இனங்கண்டு கொண்டிருக்கிறோம். அந்த அதிகாரிகள் யார் என்பதும் எமக்கு தெரியும். எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.