மக்கள் நினைப்பதுவோ அரசியல்வாதிகள் எண்ணுவதோ எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. அதலபாதாளத்திலுள்ள தமது கட்சியை மீளநிமிர்த்தவும், தமது தலைமையை கட்டியெழுப்பவும் அநுதாப அலை சிலவேளை கைகொடுக்கலாமென ரணில் நினைத்திருக்கலாம். சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் இதற்கு நல்ல உதாரணமென அவர் எண்ணினாரோ தெரியவில்லை.
இலங்கை அரசியலில இனிமேல்; திடீர் நிகழ்வுகள் இடம்பெறலாம் என்பதற்கு கட்டியம் கூறியுள்ளது ரணில் விக்கிரமசிங்கவின் கைதும் விளக்கமறியலும்.
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஹர்த்தால் எனப்படும் கடையடைப்பு பிசுபிசுத்துப்போன செய்திகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ரணிலின் செய்தி அதிரடியாக முன்னுரிமை பெற்றுள்ளது.
இதிலும்கூட ஒருவகையான அரசியல் ஒந்றுமை இருப்பது போலவே தெரிகிறது. இவரின் நல்லாட்சிக் காலத்தில் இவரோடு இணைந்து இவருக்கு இயைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் தகவலை நம்பிக்கையோடு அறிவித்துக் கொண்டிருந்தவர் சுமந்திரன். இதனால் சுமந்திரனை தங்களின் சட்ட மாஅதிபர் (அட்டர்னி ஜெனரல்) என்று பல தடவை ரணில் அழைத்து வந்தார். இதே சுமந்திரனை இணைத்து புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடரும் என்று அநுர குமர திஸ்ஸநாயக்கவும் தேர்தலின்போது கூறி வந்தார்.
இவர்கள் இருவரதும் புகழ்மாலைதான் சுமந்திரனை நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழரசுக் கட்சி தலைவர் போட்டியிலும் படுதோல்வி அடையச் செய்ததாக உள்வீட்டுக்காரர்கள் சொல்வார்கள். இப்போது மூன்றாவது தோல்வியையும் இவர் கண்டுள்ளார் – அது கடந்த 18ம் திகதி இடம்பெற்ற விநோதமான ஹர்த்தால்.
தமிழரசு கட்சிக்கு எட்டு எம்.பிக்கள் உள்ளனர். இவர்களுள் சுமந்திரனின் குரலாக வர்ணிக்கப்படும் சாணக்கியனே ஹர்த்தலை ஆதரித்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். 18ம் திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரனும் அழைப்பு விடுத்திருந்தார். மற்றைய எம்.பிக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அல்லது கட்சியின் தலைமைப் பீடம் அவர்களை மறந்திருக்கலாமோ!
வடக்கு கிழக்கிலுள்ள 58 உள்;ராட்சிச் சபைகளில் 34ல் தாங்களே ஆட்சி அமைத்துள்ளதாக சுமந்திரன் கூறி வந்தார். இதன் தவிசாளர்களை ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதற்கு இரண்டு நாட்கள் முன்னரே பகிரங்கமாக கட்சி அழைப்பு விடுத்தது. பல தவிசாளர்கள் அதில் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. 300க்கும் அதிகமான உள்;ராட்சிச் சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் இதுபற்றி கரிசனை காட்டவில்லை.
தேசியப் பட்டியலூடாக எம்.பி. ஆகிய வவனியா பிரமுகர் சத்தியலிங்கத்தால் அந்தப் பிரதேசத்தில் ஹர்த்தாலை நடத்த முடியாமல் போனதென்றால் அவருடைய அரசியல் செல்வாக்கை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
15ம் திகதி என்று அறிவிக்கப்பட்ட ஹர்த்தால் மடுமாதா திருவிழாவை முன்னிட்டு 18ம்; திகதிக்கு மாற்றப்பட்டது. அடுத்து பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஓர் அறிவிப்பை விடுத்தார். நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஹர்த்தால் நான்கு மணிக்கு நிறைவுபெறும் என்பது இவரது அறிவிப்பு. சுமந்திரன் சும்மா இருப்பாரா? அடுத்து அவர் ஒரு அறிவித்தலை விட்டார் – ஹர்த்தால் முற்பகலுடன் நிறைவுபெறும் என்பது அது. வழக்கமாக காலை பதினொரு மணியளவில் திறக்கப்படும் வணிக நிலையங்கள் அன்றும் அவ்வாறே திறக்கப்பட்டன. அவை மூடப்பட்டிருந்த காலை நேரத்தை ஹர்த்தாலுக்கான வெற்றி என விந்தையான அறிவிப்பு வந்தது.
ஹர்த்தால் ஆரம்பமாகாமலே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது ஈழத்தமிழர் வரலாற்றில் இதுதான் முதற்தடவை. இதற்காக சுமந்திரனும் சி.வி.கே.யும் ஒன்றாக அமர்ந்திருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். எந்த ஊடகமும் சுயாதீனமாக ஹர்த்தால் வெற்றிகரமாக நிறைவேறியது என்று செய்தி இடாததை இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இப்படியாக முசுப்பாத்தி முடிந்த நிலையில், மட்டக்களப்பிலிருந்து சாணக்கியன் முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டார். அதாவது, ஹர்த்தால் அறிவிப்பை தாங்கள் வெளியிட்டவுடன் சுமந்திரனுடன் ஜனாதிபதி அநுர குமர தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து, ஜனாதிபதியின் கூற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹர்த்தாலை அரைநாளாக்கியதாக சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
இதனூடாக தெரிய வருவதானது, முதலில் மடுவுக்காகவும் பின்னர் நல்லூருக்காகவும் 18ஐ 15 ஆக்கி, முழுநாளை அரைநாளுக்கும் குறைவாக்கிய ஹர்த்தால், அனைவரையும் முட்டாள்களாக்கி தமிழரசு கட்சியையும் அவமானத்துக்குள்ளாக்கியது என்பதுவே. இந்தப் பாணியில் இனிமேல் உண்ணாவிரதப் போராட்டங்களையும் பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆரம்பித்து நான்கு மணிக்கு முடித்தால் அதுவும் பெருவெற்றியாகும்.
1961ல் சத்தியாக்கிரகப் போராட்டத்தால் மேலெழுந்து தமிழரின் தலைமையாக உருவான தமிழரசு கட்சியை உருக்குலைத்து அழித்துவிட்டே போவதென ஷஇற்ககுமதி| முடிவெடுத்தால், தந்தை செல்வா வேண்டிய கடவுளாலும் இதனைக் காப்பாற்ற முடியாது போகலாம்.
இனி, தெற்கைத் திரும்பிப் பார்க்கலாம். இப்போது ரணிலின் இன்னொரு காலம் ஆரம்பமாகியுள்ளது. இவர் சிங்கள தேசிய அரசியலில் 26 வயதில் கால் பதித்தவர். பெரிய தந்தையார் முறையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 1977 பொதுத்தேர்தலில் எம்.பி.யாக்கப்பட்டவர். இளவயதிலிருந்தே பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தவர். 1993 முதல் – 2022வரை ஐந்து தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர். சட்டவாளர், 43 ஆண்டுகள் எம்.பியாக இருந்தவர், இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற பல சாதனைகளின் சின்னம் ரணில்.
இவரது பேரனார் டி.ஆர்.விஜேவர்த்தன லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவரின் பெரிய தந்தை. இலங்கையில் ஊடகங்களையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த எஸ்மன்ட் விக்கிரமசிங்க இவரது தந்தை. தற்போதைய டெய்லி மிரர் – சன்டே ரைம்ஸ் பத்திரிகைகளின் உரிமையாளர் ரஞ்சித் விஜேவர்த்தன இவரது தாய்மாமன். பிரபல வணிகரும் ஐலன்ட் பத்திரிகை நிறுவனருமான உபாலி விஜேவர்த்தன இவரது ஒன்றுவிட்ட சகோதரர். இவ்வாறு பலமான குடும்பப் பின்னணியைக் கொண்;ட ரணில் இப்பொழுது அநுர அரசின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ளார்.
2022 அறகலய போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் நாட்டை விட்டு ஓடிய கோதபாய ஜனாதிபதி பதவியை துறந்ததையடுத்து அதிர்~;டத்தால் அப்பதவியை பெற்றவர் ரணில். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசனத்தையும் பெறவில்லை. தேசியப் பட்டியலூடாக கிடைத்த ஓர் ஆசனத்தால் எம்.பி.யானவர் இவர். இதன் வழியாக கோதபாயவின் இடத்துக்கு ஜனாதிபதியாகி அந்தக் கதிரையில் ஏறியவர் என்கின்ற பின்னணி இவரது அரசியல் வாழ்வில் முக்கியமான ஒன்று.
ரணிலின் மனைவி மைத்ரீ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர். இத்தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை. தனது மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வொன்றுக்கு இங்கிலாந்துக்கு சென்ற பயணமே ரணிலை கைது செய்வதற்கு காரணமாயிற்று. இந்நிகழ்வுக்காக கிடைத்த அழைப்பு உத்தியோகபூர்வமானதல்ல. மனைவி மைத்ரீ பட்டம் பெறுவதில் பங்குபற்றுவதற்கான தனிப்பட்ட அழைப்பு. இதில் பங்குபற்றவதற்கு தமது அலுவலக பரிவாரங்களையும் அழைத்துச் சென்றதால் 16.9 மில்லியன் ரூபா அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்பதே ரணில் மீதான குற்றம். இவ்விவகாரம் தேர்தல் காலத்தின்போதே பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு கடந்த மாதம் 22ம் திகதி அழைக்கப்பட்ட ரணில், நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுர குமரவின் ஆட்சியில் ஏற்கனவே பல முன்னாள் அமைசசர்கள், எம்.பிக்கள் விசாரணைக்கென அழைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதும், சிலர் பிணையில் விடுதலையானதும் புதிய விடயமன்று. விசாரணைக்குச் செல்லும்போதே ரணில் கைது செய்யப்படலாமென்பது யுரியுப் ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்டும் அவர் விசாரணைக்குச் சென்றிருந்தாரென்றால் இதனை அவர் எதிர்பார்த்திருக்கலாம்.
இவர் மீதான நடவடிக்கைகளுக்கு பல ஊடகங்களும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு கைதானதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதும் இதற்கான காரணமாக இருக்கலாம். அதேசமயம் ரணிலை மீண்டும் அரசியலில் முன்னெழுப்புவதற்கும் இது பயன்படுத்தப்படலாம்.
இதற்கு வாய்ப்பாக வெளியான சில ஊடகத் தலைப்புகளை உதாரணமாக இங்கு பார்க்கலாம் – பலத்த பாதுகாப்புடன் பொலிஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார், சிறைக்கு அனுப்பப்பட்டார் ரணில், கைவிலங்குகளுடன் ரணில், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ரணிலுக்கு,. அவரது மனைவிக்கு புற்றுநோய், நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணில் என்றவாறான அரசியல் சித்தரிப்புகள் பெருமளவுக்கு வந்துள்ளன. இப்படிச் சுட்டுவதால் ரணில் குற்றம் புரிந்தவர் என்றோ இல்லை என்றோ இப்போது கூற முடியாது. அதை நீதி விசாரணை முடிவில் தெரிந்து கொள்ள முடியும்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி.யினருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை, படுகொலைகள் பட்டலந்த முகாமில் ரணிலின் மேற்பார்வையில் இடம்பெற்றதாக முன்னர் விசாரணை இடம்பெற்றது. அறகலய போராட்டத்தைப் பயன்படுத்தி ரணில் ஜனாதிபதியாகி ராஜபக்சக்களை காப்பாற்றியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கையில் ரணில் மீதான நடவடிக்கை ஒரு கலவையாகக்கூட இருக்கலாம். அதேசமயம் எதிர்காலத்தில் ராஜபக்சக்களையும் வேறு சில தலைகளையும் கைது செய்வதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக்கூடும்.
இதற்கும் அப்பால், இவ்வாறான கைதையும் விளக்கமறியலையும் தமது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கும் தமது கட்சியை மீளவும் கட்டியெழுப்புவதற்கும் ரணில் விருப்போடு எதிர்பார்த்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.
காய் பழம் ஆகுமா அல்லது அழுகி நொழுகி வீழ்ந்து விடுமா என்பதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டி வராது.