Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துரணில் விக்ரமசிங்க கைதுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் : ஒரே குரலில் தெரிவித்த கருத்து என்ன? – BBC News தமிழ்

ரணில் விக்ரமசிங்க கைதுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் : ஒரே குரலில் தெரிவித்த கருத்து என்ன? – BBC News தமிழ்

by ilankai
0 comments

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒன்று கூடிய முன்னாள் ஜனாதிபதிகள் : இலங்கை வரலாற்றில் புதிய திருப்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை வரும் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக27 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

banner

குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் முதல் தற்போது வரை எதிர்கட்சிகள் ஒன்றாக கூடி பல்வேறு வகையிலான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

கொழும்பிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்த சந்திப்பில் அரசியல் ரீதியில் பல்வேறு வகையில் கடந்த காலங்களில் பிளவுப்பட்டிருந்த பெரும்பாலான பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருந்தனர்.

இலங்கை வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்திருந்த வரலாறு காணப்படுகின்றன.

எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே கூட்டு எதிர்கட்சியாக களமிறங்க முயற்சிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராடிய தரப்பினர், இன்று ராஜபக்ஸ தரப்புடன் இணைந்தவாறு ஓரணி திரண்டுள்ளமை முக்கிய வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நடாத்திய ஊடக சந்திப்பு

பட மூலாதாரம், UNP MEDIA

படக்குறிப்பு, இலங்கையில் பிளவுபட்டுக் கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன அரசியல் ரீதியில் பிளவுப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, விசேட ஊடக சந்திப்பொன்றை கொழும்பில் நடாத்தியிருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான பல கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்து, இன்றைய தினம் இந்த ஊடக மாநாட்டை நடத்தியிருந்தன.

பட மூலாதாரம், UNP MEDIA

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

”எமது நாடு தற்போது செல்கின்ற பயணத்தில் நாட்டில் ஜனநாயகம் என்பது தொடர்பில் இன்று கேள்வி எழும்பியுள்ளது. ஜனநாயக சமூகத்தில் இருக்கின்ற அறிகுறிகள், சிறிது சிறிதாக அழிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் சவப் பெட்டியின் பலகைகளை ஒன்று சேர்க்கும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

அரசியல்வாதி ஒருவர் சிறையில் இருக்காத பட்சத்தில், அந்த அரசியல் வாழ்க்கை முழுமையடையாது. எனினும், தற்போது எழுந்துள்ள நிலைமையானது மிகவும் பாரதூரமானது. ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்துக்கொள்வதற்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்வோம்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஆதரவை, ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியுள்ளார்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஊடக சந்திப்பிற்கு வர முடியாத சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, விசேட அறிக்கையொன்றை ஊடக சந்திப்பிற்கு அனுப்பிய நிலையில், அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல வாசித்தார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் எதிர்ப்பு வெளியிடுவதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிரிட்டன் விஜயம் தொடர்பில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவூட்டியிருந்தார்.

விக்ரமசிங்க அரசாங்க செலவில் பயணம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

”வோல்வஹம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பில் சில தெளிவின்மை காணப்படுகின்றது. இந்த இடத்தில் இரண்டு சம்பவங்கள் காணப்படுகின்றன. ஒன்று தான் விருந்துபசாரம்.

விருந்துபசாரமானது வோல்வஎம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை 25 வருடங்கள் தொடர்ச்சியாக வகித்த ஸ்வராஜ் பால் ஆண்டகையை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் தேதி பிலிட்ஸ் இந்தியா ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி என்ற முறையில் இதில் கலந்துக்கொண்டார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. ” என்று ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டார்.

”ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கை தொடர்பில் இணக்கம் இருக்க முடியும். இல்லாதிருக்கவும் முடியும். அது தொடர்பில் நாங்கள் இந்த இடத்தில் பேச வரவில்லை. 6 மாதத்தில் நாட்டை சீர்செய்வதாக பொய் கூறி அதிகாரத்தை கைப்பற்றிய அரசாங்கத்தினால், தற்போது ஒன்றுமே செய்துக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்துக்கொள்ளும் போது தனது எதிர் தரப்பை அடக்குமுறைக்கு உட்படுத்தி, தமது அதிகார இருப்பை தக்க வைத்துக்கொள்ள அந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நடவடிக்கையை எமது கட்சி வன்மையை கண்டிக்கின்றது. தமது அரச இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக எதிர் அணியினரை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்.

“விசாரிக்க வேறு காரணங்கள் இருக்கின்றன”

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கருத்து வெளியிட்டார்.

”இன்று கூட்டு எதிர்கட்சிகளாக நாங்கள் ஒன்று சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமகாலத்தில் பட்டலந்த வதை முகாம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. மத்திய வங்கி ஊழல் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இவற்றை எல்லாம் மக்கள் முன்னால் வைத்து நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி தான் இன்று அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம் ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

அதை செய்யுங்கள். அதை செய்வீர்களேயானால், நான் நினைக்கின்றேன். இன்று கூடியிருக்கின்ற இந்த எதிர்கட்சிகள் இவ்வாறான ஊடக சந்திப்பை செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்கான அவசியம் வந்திருக்காது.

ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்திய கட்சிகளில் பெரும்பாலானோர் இங்கும் இருக்கின்றார்கள். பிரச்னையில்லை. ஆனால் இதுவென்ன. நாட்டில் ஒரு விவாதம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி பதவி எங்கே முடிகின்றது. தனிப்பட்ட செயற்பாடு எங்கே ஆரம்பிக்கின்றது என்ற அந்த விவாதம் நடக்கின்றது.

வெள்ளிகிழமையில் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, மின்சாரத்தை துண்டித்ததை நாம் அவதானித்தோம். விளையாட வேண்டாம் என நண்பர் அநுர குமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரிட்டனில் செலவிட்ட பணத்தை மீள செலுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கலாம். மீள் செலுத்தும் முறையொன்று நாட்டில் உள்ளது. ஒன்று செலுத்துவார். அல்லது முடியாது என கூறுவார். அதன்பின்னர் நீதிமன்றம் சென்றிருக்கலாம்.

அவ்வாறு செய்யாது, இழுத்துக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனாலேயே எதிர்கட்சியாகிய நாம் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.” என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒன்றிணைவு

இலங்கையின் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.எம்.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிறைவேற்று ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்ததுடன், தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரசியல் பேதங்களினால் பிரிந்திருந்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இன்று ஒரு இடத்திற்கு வருகைத் தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளியிட முயற்சித்து வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க ஏன் கைது செய்யப்பட்டார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையிலிருந்து அதிகாரபூர்வ விஜயமாக கியூபா சென்ற அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து அமெரிக்கா நோக்கி பயணித்திருந்தார்.

அதிகாரபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக செலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இந்த பிரிட்டன் விஜயத்திற்காக ரணில் விக்ரமசிங்க 166 லட்சம் இலங்கை ரூபாவை அரச நிதியிலிருந்து செலவிட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது மனைவியான மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா, மருத்துவர் ஒருவர் மற்றும் 10 போலீஸ் அதிகாரிகள் இந்த விஜயத்தில் அடங்கியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

ஒன்றரை நாள் விஜயத்தின் போது வாகனத்திற்காக 4,475,160 ரூபாவும், வாகனத்திற்காக முற்கொடுப்பனவாக 14 லட்சம் ரூபாவும், உணவு மற்றும் குடிபானத்திற்காக 13 லட்சத்திற்கும் அதிக பணமும், ஹோட்டல் வசதிகளுக்காக 34 லட்சம் ரூபாவும், விமான நிலைய விசேட பிரமுகர் பிரிவிற்காக 6000 பிரிட்டன் பவுண்டும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செலவிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

அத்துடன், இந்த விஜயத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்காக போலீஸ் திணைக்களம் 3,274,301 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட சென்ரா பெராராவிற்கு 39,000 ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியில் நாடு பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் அரச நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தனிப்பட்ட விஜயத்திற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தவறான செயற்பாடு என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் 26ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ரணிலின் உடல் நிலை எப்படி இருக்கின்றது?

நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிக இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரமும் விசேட மருத்துவ குழுவினரால் ரணில் விக்ரமசிங்க கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார்.

” முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தற்போது நான் பார்வையிட்டேன். அவரின் உடல் நிலைமை ஓரிரு தினங்களில் வழமைக்கு வரக்கூடும். சரியாக சிகிச்சைகள் வழங்காத பட்சத்தில் நோய் அறிகுறிகள் மேலும் அதிகரிக்கக்கூடும். உடலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன.

3 நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவரை விசேட மருத்துவ குழாம் பார்த்துக்கொள்கின்றது. அதிதீவிர சிகிச்சை பிரிவிலுள்ள ஒருவருக்கு நீதிமன்றத்திற்கு வருகைத் தர முடியாது. அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மணிநேரத்திற்கு மேல் அவர் காத்திருந்திருக்கின்றார்.

அன்று மின்சாரமும் இருக்கவில்லை. தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டார் போல தெரிகின்றது. அதனால், உடலில் சில நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அதிக உஷ்ண நிலைமை போன்றதொரு காரணம் என கூற முடியும். அவரை நாங்கள் சரியாக பார்த்துக்கொண்டால், ஓரி இரு தினங்களில் வழமை நிலைமைக்கு திரும்புவார். அவ்வாறு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை வழங்கப்படாத பட்சத்தில், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.” என மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அரசாங்கத்தின் பதில்

பட மூலாதாரம், NALINTHA JAYATHISSA

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தலையிடவில்லை என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தமது அரசாங்கம் எந்தவிதத்திலும் தலையீடு செய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

”குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெரிவித்திருந்தது. அதன்படி, நீதிமன்றம் தீர்மானமொன்றை எடுத்தது. நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை பேணப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசாரணைகள் மற்றும் நீதிமன்றம் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடத்தப்பட்டுள்ளன.

இந்த நாட்டு பிரஜையொருவருக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கை இதனூடாக அதிகரித்துள்ளது. எந்தவொரு நபருக்கும் நாட்டின் நீதித்துறை பொதுவானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் அதனை கருதுகின்றேன்.” என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like