பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தார்களா இல்லையா என்பது குறித்து சர்ச்சை உள்ளதுஎழுதியவர், வினாயக் ஹோகடேபதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்30 நிமிடங்களுக்கு முன்னர்
மராத்தா சாம்ராஜ்யத்தின் வரலாறு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள வரைபடத்தில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தை மராட்டிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக காட்டியதால் இந்த சர்ச்சை எழுந்தது.
ஜெய்சல்மேர் ராஜ குடும்ப வாரிசுகளும், நாக்பூர் போஸ்லே குடும்ப வாரிசுகளும் இந்த வரைபடம் குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைப்பதாக என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.
“இதுபோன்ற விவகாரங்களில் தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டால், நாங்கள் நிபுணர்களின் குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,” என்று என்சிஆர்டி தெரிவித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஜெய்சல்மேர் மராட்டியர்களின் கீழ் இருந்ததா? என்பது குறித்து வரலாற்றாசிரியர்கள் மத்தியிலும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவர்களின் பார்வையில் உண்மையான நிலைமை என்ன என்பதைப் பார்ப்போம்.
சர்ச்சை என்ன?
என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் ஒரு வரைபடம் உள்ளது. அதில் 1759இல் மராட்டிய சாம்ராஜ்யத்தின் எல்லை காட்டப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தின்படி, மராட்டிய சாம்ராஜ்யம் மத்திய மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலிருந்து வட இந்தியா வரை பரவியிருந்தது. அதில் பாகிஸ்தானின் அடக் மற்றும் பெஷாவர் வரையிலான பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெய்சல்மேர் ராஜ குடும்ப வாரிசு சைதன்யா ராஜ் சிங் இந்த வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த வரைபடத்தின் படத்தை பகிர்ந்து, எக்ஸ் தளத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “8ஆம் வகுப்பு என்சிஇஆர்டி சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் (யூனிட் 3, பக்கம் 71) உள்ள வரைபடத்தில் ஜெய்சல்மேர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக காட்டப்பட்டுள்ளது, இது வரலாற்று ரீதியாக தவறான, உண்மைக்கு மாறான மற்றும் கடும் கண்டனத்திற்குரியது.”
“இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத மற்றும் வரலாற்று ஆதாரமற்ற தகவல்கள், என்சிஇஆர்டி போன்ற அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவது மட்டுமல்லாமல், நமது பெருமைமிக்க வரலாறு மற்றும் மக்கள் உணர்வுகளையும் பாதிக்கின்றன. இது ஒரு பாடப்புத்தக தவறு மட்டுமல்ல, நமது முன்னோர்களின் தியாகம், இறையாண்மை மற்றும் வீரகதைகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகத் தோன்றுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதன் பின்னர் ஆகஸ்ட் 9ஆம் தேதி, நாக்பூர் போஸ்லே குடும்ப வாரிசு ராஜே முதோஜி போஸ்லே இந்த வரைபடத்தை ஆதரித்து ட்வீட் செய்தார்.
“ராஜஸ்தானின் சில ராஜ குடும்பங்கள் மராட்டிய சாம்ராஜ்யத்தின் இந்த வரைபடத்தை ஏற்க மறுக்கின்றனர். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மகாராஷ்டிராவின் வீர மராட்டியர்கள் தங்கள் ரத்தத்தை சிந்தி வரலாறு படைத்துள்ளனர். மராட்டிய சாம்ராஜ்யத்தை எதிர்ப்பவர்களை நாங்கள் கண்டிக்கிறோம்,” என்று அவர் எழுதியிருந்தார்.
“அடக் முதல் கட்டக் வரை மராட்டிய சாம்ராஜ்யம் இருந்தது,” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
என்சிஇஆர்டி என்ன கூறியுள்ளது?
என்சிஇஆர்டி இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சை குறித்து நேரடியாக குறிப்பிடப்படவில்லை, ஆனால் சில பாடப்புத்தகங்களின் பாடங்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைப்பதாக அறிவிக்கப்பட்டது.
“இந்த பாடத்திட்டங்கள் குறித்து பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆலோசனைகள் வருகின்றன,” என என்சிஇஆர்டி கூறியது.
இந்த அமைப்பு, இதுபோன்ற விவகாரங்களில், பாடத்திட்டத் துறைத் தலைவரின் கீழ் சம்பந்தப்பட்ட பாடத்தின் மூத்த நிபுணர்கள் உள்ளடக்கிய ஒரு மறுஆய்வுக் குழு அமைக்கப்படுவதாகக் கூறியது.
“இந்தக் குழு பெறப்பட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் தனது பரிந்துரையை வழங்கும் என என்சிஇஆர்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
பட மூலாதாரம், X/CHAITNYA RAJ SINGH & RAJE MUDHOJI BHOSLE
படக்குறிப்பு, ஜெய்சல்மேர் அரச குடும்பத்தின் வாரிசு சைதன்யா ராஜ் சிங் (இடது) மற்றும் நாக்பூர் போஸ்லே குடும்பத்தின் வாரிசு ராஜே முதோஜி போஸ்லேமராட்டிய பேரரசு எவ்வளவு தூரம் பரந்திருந்தது?
இந்த வரைபடம், ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிய ஆட்சியாளர்களின் கீழ் இருந்தார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்க, மராட்டிய சாம்ராஜ்யத்தின் உண்மையான நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
இது ராஜ்புத் அரசர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளையும் வெளிப்படுத்துகிறது.
இந்த விவகாரம் குறித்து சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியர் ராகுல் மகரிடம் பிபிசி மராத்தி பேசியது.
“18ஆம் நூற்றாண்டில் மராட்டிய சாம்ராஜ்யம் ‘காமவிஷி’ மற்றும் ‘சரஞ்சாமி’ என இரண்டு நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மகாராஜின் அசல் ஸ்வராஜ்யம் ‘காமவிஷி’ பகுதியின் கீழ் வந்தது. இதில் புனே, மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் ஒரு சிறிய பகுதி அடங்கியிருந்தது,” என அவர் தெரிவித்தார்.
“இரண்டாவது பகுதி ‘சரஞ்சாமி’ (நிலப்பிரபுத்துவ) பகுதியாகும். இதில் ஷிந்தே, ஹோல்கர், கெய்க்வாட், போஸ்லே போன்ற தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அடங்கியிருந்தன. இவை பேஷ்வாக்களின் அதிகார வரம்பில் வந்தன. இந்த எந்த நிர்வாக பகுதியிலும் ராஜ்புத்கள் முழுமையாக வசிக்கவில்லை,” என அவர் மேலும் கூறினார்.
“இருப்பினும், இந்த காலகட்டத்தில் மராட்டியர்களுக்கு இணையான வேறு எந்த அரசியல் மற்றும் ராணுவ சக்தியும் இல்லை என்பது ஒரு உண்மை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டேவிடமும் பேசினோம்.
“சவ்த் மற்றும் சர்தேஷ்முகி என்ற வரிகளை மராட்டியர்கள் வசூலித்தனர். புனே, இந்தூர், குவாலியர், பரோடா மற்றும் நாக்பூர் போலல்லாமல், மராட்டியர்கள் ராஜஸ்தானை ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை,” என அவர் தெரிவித்தார்.
“கிடைக்கப்பெற்ற தகவல்களில், மல்ஹார்ராவ் ஹோல்கர் மற்றும் அவரைப் போன்ற பிற மராட்டியத் தலைவர்களை மார்வார் ராஜ்புத்கள் தங்கள் உள்நாட்டு மோதல்களில் தலையிடுவதற்காக கூலிப்படையாக அழைத்தனர் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என தேஷ்பாண்டே விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிராட்டிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தவர்களா இருந்தனரா இல்லையா என்பது குறித்து வரலாற்றாசிரியர்களிடையே இருவேறு கருத்துகள் இருக்கின்றன மறுபுறம், மூத்த வரலாற்றாசிரியர் ஜெய்சிங்ராவ் பவார் வேறுபட்ட கருத்தை வைத்துள்ளார்.
“மராட்டியர்களிடம் ஒன்று அல்லது இரண்டு சமஸ்தானங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் ராஜ்புத்களை ஆட்சி செய்தனர். அந்த காலத்தில் மராட்டியர்களிடம் அவ்வளவு வலிமை இருந்தது. பேஷ்வாக்கள், முக்கியமாக ஹோல்கர் மற்றும் ஷிந்தே, ராஜஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவியிருந்தனர். அவர்கள் முகலாய பேரரசருடனான உடன்படிக்கையின் கீழ் இதைச் செய்தனர்,”என அவர் தெரிவித்தார்.
“மராட்டியர்கள் ராஜஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி, ‘ட்ரிப்யூட்’ (ஒரு வகை வரி) வசூலித்ததை உறுதிப்படுத்தும் பல ஆவணங்கள் உள்ளன. ஷிந்தே மற்றும் ஹோல்கர்கள் ராஜஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தினர். காகித அளவில் இந்த ராஜ்புத் அரசர்கள் அனைவரும் முகலாயர்களின் கீழ் இருந்தனர், ஆனால் உண்மையில் மராட்டியர்களே முகலாயர்கள் சார்பாக ஆட்சி செய்தனர்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ராஜ்புத் அரசர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பேஷ்வாக்களின் அவைராஜ்புத் அரசர்களுக்கும் மராட்டிய ஆட்சியாளர்களுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளின் தன்மை, 1752இல் முகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே நடந்த ‘அஹ்மத்னாமா’ உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சவ்த் மற்றும் சர்தேஷ்முகி போன்ற வரிகள், மராத்தர்களின் அரசியல் ஆதிக்கத்தின் ஆதாரமாக கருதப்படுகின்றன.
“இந்த ராஜ்புத் அரசர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகவும், சுயாட்சி உள்ளவர்களாகவும் கருதினர். அவர்களில் சிலர் மராட்டியர்களுக்கு சவ்த் மற்றும் சர்தேஷ்முகி என்று பணம் அல்லது பொருட்களை அளித்தனர்,” என பேராசிரியர் ராகுல் மகர் கூறினர்.
“பலமுறை அவர்கள் (ராஜ்புத் அரசர்கள்) ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, வரி அளித்து, பின்னர் கலகம் செய்தனர். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. எனவே, எத்தனை ராஜ்யங்கள் எத்தனை ஆண்டுகள் மராட்டியர்களின் கீழ் இருந்தன என்று துல்லியமாக கூறுவது கடினம்,” என ஜெய்சிங்ராவ் பவார் தெரிவித்தார்.
“ஆவணங்களைப் பார்த்தால், முழு ராஜஸ்தானும் முகலாய பேரரசரின் கீழ் இருந்தது. மராட்டியர்கள் முகலாய பேரரசரின் ஆட்சிக்கு பொறுப்பேற்றிருந்தனர். எனவே, அவர்கள் ராஜஸ்தானைத் தாக்கி வரி வசூலித்தனர். அதை வசூலிக்க பலமுறை தாக்குதல்கள் நடத்த வேண்டியிருந்தது,” என அவர் தெரிவித்தார்.
“உண்மையில், 1707இல் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயர்களின் வலிமை விரைவாக குறைந்தது. அவர்கள் மராட்டியர்களுக்கு ‘ட்ரிப்யூட்’ வசூலிக்கும் உரிமையை அளித்தனர்,” என அனிருத் தேஷ்பாண்டே கூறினார்.
ஜெய்சல்மர் மாநிலம் ‘சவ்த்’ அளித்ததா இல்லையா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜெய்சல்மர் கோட்டை”ஜெய்சல்மேர் மற்றும் பீகானேர் ஒருபோதும் தன்னிச்சையான மராட்டிய சாம்ராஜ்யத்தின் அங்கமாக இருக்கவில்லை,” என அனிருத் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
“மற்ற ராஜ்புத் ராஜ்யங்கள் சுதந்திரமாக இருந்தன, ஆனால் சில சமயங்களில் சிக்கல்களிலிருந்து விடுபட, அவர்கள் மராட்டிய தலைவர்களுக்கு ஒரு வகையான ‘பாதுகாப்பு தொகை’யாக கோரப்பட்ட பணத்தை அளித்தனர்,” என அவர் கூடுதலாக தெரிவித்தார்.
இந்த உறவுகள் குறித்து பேசுகையில்,”ராஜ்புத் ராஜாக்கள் சவ்த் அளித்து வருகின்றனர், இது மராட்டியர்களின் உயர்ந்த தன்மையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உதாரணமாக, பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்த சமஸ்தானங்கள் சுதந்திரமாக இருந்தன, ஆனால் அவற்றின் சுதந்திரம் பெயரளவில்தான் இருந்தது,” என ஜெய்சிங்ராவ் பவார் கூறினார்.
“ராஜ்புதானாவின் எந்த மாநிலங்கள் வரி அளிக்கவில்லை என்பது ஆய்வுக்கு உரியது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
“ஜெய்சல்மர் சவ்த் அல்லது சர்தேஷ்முகி அளித்ததா? அதற்கு பதில்- இல்லை,” என ராகுல் மகர் கூறினார்.
“அஹ்மத்னாமாவின்படி முகலாயர்கள் ராஜ்புத்களின் சார்பில் நான்கில் ஒரு பங்கு அளிப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ராஜ்புத்கள் அல்ல, முகலாயர்கள் அளித்தனர். அனைத்து ராஜ்புத்களும் இதை ஒப்புக்கொள்ளவில்லை.
சிலர் அளித்தனர், சிலர் அளிக்கவில்லை. இதில் ஜெய்சல்மர் ஒருபோதும் அளிக்கவில்லை. எனவே, அந்த ராஜவம்சம் கூறுவது உண்மையானது. மற்ற ராஜ்புத்கள் அளித்தனர், ஆனால் அது எப்போதும் எளிதாக அளிக்கப்படவில்லை. பெரும்பாலும் ஷிந்தே மற்றும் ஹோல்கர்கள் தங்கள் படைகளுடன் சென்று அதை வசூலிக்க வேண்டியிருந்தது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்சிஇஆர்டி புத்தகத்தில் உள்ள வரைபடம் தவறானதா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜெய்சல்மர் கோட்டைஇந்த சர்ச்சை என்சிஇஆர்டி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வரைபடத்தால்தான் தொடங்கியது. இந்த வரைபடத்தில் மராட்டியர்களின் கீழ் காட்டப்பட்ட பகுதிகள், அரசர்களுக்கு இடையேயான நிர்வாக மற்றும் பொருளாதார உறவுகளின் தன்மையை தெளிவாக காட்டவில்லை.
வரைபடத்தில் இந்த பகுதிகள் ‘மராட்டிய சாம்ராஜ்யம் (துணை ராஜ்யங்கள் உட்பட)’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் ‘ட்ரிப்யூட்’ எனப்படும் வரி வசூலிக்கப்பட்ட பகுதிகள் காட்டப்பட்டுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதைத் தவிர வரைபடத்தின் கீழ் ‘1759இல் மராட்டிய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கம்’ என்று எழுதப்பட்டுள்ளது.
பானிபத் மூன்றாவது யுத்தம் 1761இல் நடந்தது, அதில் அஹ்மத்ஷா அப்தாலி மராட்டியர்களை தோற்கடித்தார். எனவே, இந்த யுத்தத்திற்கு முன் இருந்த காலம் மிகவும் சிக்கலானதும் மாற்றங்கள் உள்ளதாகவும் இருந்திருக்கும் என்று கருதலாம்.
“பல அரசியல் இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. இது தெளிவான தகவல்களை அளிப்பதற்கு, மராட்டியர்களின் நேரடி ஆட்சி எங்கிருந்தது, அவர்களின் செல்வாக்கு இருந்த பகுதி எவ்வளவு, எங்கிருந்து அவர்களுக்கு வரி கிடைத்தது என்பதை காட்டி இருந்தால் எந்த சர்ச்சையும் எழுந்திருக்காது, இந்த தகவல்கள் காட்டப்பட்டிருந்தால் எந்த சர்ச்சையும் இருந்திருக்காது” என ராகுல் மகர் கூறினார்.
“என்சிஇஆர்டி தயாரித்த வரைபடம் தவறானதாகத் தோன்றுகிறது. இது மராட்டியர்களின் கீழ் எவ்வளவு பகுதிகள் இருந்தன என்பதை பற்றி தெளிவான தகவல்களை அளிக்கவில்லை,” என அனிருத் தேஷ்பாண்டே சொல்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு