பட மூலாதாரம், Getty Images
21 நிமிடங்களுக்கு முன்னர்
நீலகிரி வரையாட்டைக் காப்பதற்கு ரூ.25 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அது தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்பது மட்டும்தான் காரணமா?
”நீலகிரி வரையாட்டைக் காப்பது என்பது, தமிழ்நாட்டின் நதிகளின் தாய்மடியாக இருக்கும் புல்வெளிகளைக் காப்பது. அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் கார்பனை உள்வாங்கி மண்ணுக்குள் செலுத்தி, சூழலைப் பாதுகாக்கும் இயற்கையின் அற்புதமான புல்வெளிகளைக் காக்க வேண்டுமெனில் அவற்றை முக்கிய உணவாகவும், வாழ்விடமாகவும் கொண்டு வாழும் நீலகிரி வரையாட்டைக் காப்பது மிகஅவசியம்.”
இப்படி விளக்கம் அளிக்கிறார், வன உயிரின நிதியம்–இந்தியா (WWF-INDIA) அமைப்பின் மூத்த விஞ்ஞானி பால் பிரடிட்.
நீலகிரி வரையாட்டைக் காக்கும் முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ள நீலகிரி வரையாடு திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரளாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட அறிக்கையை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட, 19 சதவிகிதம் நீலகிரி வரையாடுகள் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் இவ்வளவு எண்ணிக்கை பெருகியது எப்படி, அதற்காக எடுக்கப்பட்ட நவடிக்கைகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு, கடந்த ஓராண்டில் இனப்பெருக்கம் அதிகரித்ததாக அர்த்தமில்லை என்றும், கடந்த ஆண்டை விட 19 சதவிகிதம் அதிகமான வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன என்றும் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளார் நீலகிரி வரையாடு திட்டத்தின் திட்ட இயக்குநர் கணேசன்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடு திட்டம், கடந்த 2023 ஆம் ஆண்டில் அக்டோபரில் முதலமைச்சர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. அதற்கு ரூ.25.14 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கான தலைமை அலுவலகம் கோவை வனக்கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கியதன் முதல்கட்டமாக, வரையாடுகளின் வாழ்விடங்கள், எண்ணிக்கை, எந்தப் பகுதியில் அதிக நாட்கள் தங்குகின்றன, எங்கே அவற்றின் பாதை தடைபடுகிறது போன்றவற்றை அறியும்பொருட்டு, 12 நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அவற்றில் ஒரு பெண் வரையாட்டுக்கு ரேடியோ காலர் பொருத்த மயக்க ஊசி செலுத்தியபோது அது இறந்து விட்டது.
தொடக்கத்திலேயே தோல்வியடைந்த ரேடியோ காலர் திட்டம்
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட ஒரு வரையாட்டை புலி வேட்டையாடியது. ரேடியோ காலர் பொருத்தப்பட்ட சில வரையாடுகள் மட்டும் சில மாதங்கள் கண்காணிக்கப்பட்டன. அதன்பின், ரேடியோ காலர் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பொருட்டு, தமிழ்நாடு, கேரளம் ஆகிய 2 மாநில வனத்துறையும் இணைந்து ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை கடந்த ஆண்டில் முதல்முறையாக நடத்தின.
இரண்டாம் முறையாக இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 வரை 4 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Nilgiris TAHR Project
படக்குறிப்பு, நீலகிரி வரையாடு திட்டத்துக்கான தலைமை அலுவலகம் கோவை வனக்கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதுஅந்த அறிக்கையில் கடந்த ஆண்டை விட 19 சதவிகிதம் அளவுக்கு நீலகிரி வரையாடுகள் அதிகம் தென்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள 7 புலிகள் காப்பகங்கள், 7 புலிகள் காப்பகங்கள் அல்லாத பிற வனப்பகுதிகள் என, 14 வனக்கோட்டங்களில் நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்களாக உள்ள 177 பகுதிகளில் (Blocks) இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டை விட, கூடுதலாக 36 பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
கணக்கெடுப்பில், உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC)-தமிழ்நாடு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)-இந்தியா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் இயற்கைக்கான உலகலாவிய நிதியம் (WWF)-இந்தியா போன்ற நிறுவனங்கள் இணைந்திருந்தன.
வரையாடுகளின் வாழ்விடங்கள் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு இரு விதங்களில் நடந்ததாக பிபிசி தமிழிடம் விளக்கினார் நீலகிரி வரையாடுகள் திட்டத்தின் திட்ட இயக்குநர் கணேசன். அதாவது துண்டாடப்பட்டுள்ள வாழ்விடப்பகுதிகளில் (Fragmented Habitats) ஒரு விதமாகவும், முக்கூர்த்தி தேசியப்பூங்கா, வெஸ்டர்ன் கேட்ச்மென்ட், வால்பாறை புல்மலை (Grass Hills) போன்ற பரந்து விரிந்த, தொடர்ச்சியான வாழ்விடப் பகுதிகளில் ஒரு விதமாகவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இரு முறையிலும் நேரடியாகப் பார்ப்பதை வைத்தே வரையாடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Ganesan
படக்குறிப்பு, ஜிஐஎஸ் வரைபடம், கேமரா, ட்ரோன் போன்றவையும் இந்த கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார் கணேசன் ”துண்டாடப்பட்டுள்ள வாழ்விடப்பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களை தேர்வு செய்திருப்போம். ஒரு வழித்தடத்தில் 3 பேர் கொண்ட குழு நடந்து செல்லும். ஒருவர் பைனாகுலரில் பார்ப்பார். மற்றொருவர் குறிப்பெடுப்பார். இன்னொருவர் வழி நடத்துவார். இந்த 4 நாட்களில் பார்ப்பதில் அதிகபட்ச எண்ணிக்கை, இரண்டாவது அதிகபட்சம் போன்றவற்றின் அடிப்படையில் கூட்டிக்கழித்து ஒரு கணக்குக்கு கொண்டு வரப்படும். இது ‘பவுண்டட் கவுண்ட்’ (Bounded Count) எனப்படும்.” என்று முதல் முறையை விளக்கினார் திட்ட இயக்குநர் கணேசன்.
மற்றொரு முறையில், கிராஸ்ஹில்ஸ் போன்ற தொடர்ச்சியான வாழ்விடப் பகுதிகளில் இரட்டை பார்வையாளர் முறை (Double Observer Method) கடைபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரையாடுகள் மேயும். அதில் எந்தக் கூட்டத்தை எந்தக்குழு பார்த்தது என்பதில் குழப்பம் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு பகுதியையும், 6 பிளாக்குகளாகப் பிரித்து, குழுக்களை அனுப்பியுள்ளனர்.
இந்த முறையில் ஒரே வழித்தடத்தில் 2 குழுக்கள் பயணித்து, வரையாடு கூட்டங்களைக் கணக்கெடுத்துள்ளன. இரு குழுக்களும் தாங்கள் பார்த்த கூட்டங்கள் எண்ணிக்கையைப் பதிவு செய்யும். இரு குழுக்களின் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து, ஒரு கூட்டம் ஒரு குழுவின் கணக்கில் சேர்க்கப்படும். மற்றொரு குழுவின் கணக்கில் அது சேர்க்கப்படாது.
பட மூலாதாரம், Nilgiris TAHR Project
படக்குறிப்பு, பல குழுக்கள் நடந்து சென்று கணக்கெடுப்பை மேற்கொண்டனர் ”இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்த கணக்கெடுப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன. விஞ்ஞான முறையில் கணக்கீடுகளை செய்து அந்த மென்பொருள் குறிப்பிட்ட பகுதியில் எத்தனை வரையாடுகள் இருக்கின்றன என்பது குறித்த ஒரு எண்ணிக்கையைத் தெரிவிக்கும். அது மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும்.” என்று விளக்கினார் திட்ட இயக்குநர் கணேசன்.
இவற்றைத் தவிர்த்து, ஜிஐஎஸ் வரைபடம் (GIS MAPPING), கேமரா, டிரோன் போன்றவையும் இந்த கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டது குறித்து விளக்கிய அவர், ”புலிகள் என்றால் அவற்றின் வரி வடிவங்களை வைத்தே, அடையாளம் காணமுடியும். ஆனால், நீலகிரி வரையாடுகள் பெரும்பாலும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால் ஆண், பெண் அடையாளம் காண்பதும் கடினம். அதனால் கேமரா, ட்ரோன் உதவியுடன் அவற்றின் பாலின விகிதாச்சாரத்தை அறிய முடிந்தது.” என்றார்.
நீலகிரி வரையாடு: கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ள இரு மாநிலங்களின் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.
* இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பகுதிகளில் 3125 கி.மீ. துாரம் அளவுக்கு கால்நடையாகக் கடந்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
* உயரமான மலைப்பகுதிகள் மற்றும் பாறைகளில் நீலகிரி வரையாடுகள் வாழும். குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி மலைத்தொடரில் உள்ள பேயனார் வரையாட்டு மொட்டை என்ற பகுதியில் 247 மீட்டர் உயரத்திலும், அதிகபட்சமாக முக்கூர்த்தி தேசியப்பூங்காவில் கொல்லரிபெட்டாவில் 2643 மீட்டர் உயரத்திலும் இவை வாழ்வது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. தொலைநோக்கி இருந்தாலும் கூட, பல்வேறு உயரமான பாறைப் பகுதிகளில் உள்ள வரையாடுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது சிரமமாக இருந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Nilgiris TAHR Project
* இந்த கணக்கெடுப்பை பருவமழைக்கு முன்பும், பின்புமாக ஏன் நடத்தவில்லை என்பதற்கு இந்த அறிக்கை விளக்கமளித்துள்ளது. அதில் ஜனவரி–மார்ச் இடையிலான மாதங்களில்தான் வரையாடு குட்டிகளை பெற்றெடுக்கும் என்பதால் குட்டிகளுடன் எண்ணுவதற்கு எளிதாக இருக்குமென்பது காரணமாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பருவமழைக் காலங்களில் அதிக உயரத்திலுள்ள சோலைப் புல்வெளிகளை அணுகுவதும் சிரமம் என்பதும் மற்றொரு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை புல்மலைப்பகுதியின் தொடர்ச்சியாகவுள்ள கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்கா, நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசிய பூங்காவின் பங்கிடபால் (Bangitappal) தொடர்ச்சியாக கேரளாவில் அமைந்துள்ள சைலண்ட் வேலி தேசியப் பூங்காவின் சிஸ்பாரா ஆகிய இரு தொடர்ச்சியான மலைப்பகுதிகளில் மட்டும் இரு மாநில வனப்பகுதிகளை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், புல்மலை மற்றும் இரவிக்குளம் தேசிய பூங்கா இரண்டிலும் சேர்த்து 155 வரையாடுகள் காணப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் இரு மாநில வனத்துறைகளும் தனித்தனியாக கணக்கெடுப்பை நடத்தி தனித்தனியாக வரையாடுகளை கணக்கிட்டுள்ளன.
* தமிழ்நாட்டில் தொடர்ச்சியான பரந்து விரிந்த வரையாடு வாழ்விடப் பகுதியாக உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை புல்மலைப்பகுதியில் 334, முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கூர்த்தி தேசிய பூங்காவில் 282 என இவ்விரு பகுதிகளில் மட்டும் 616 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக இரட்டைப் பார்வையாளர் முறை கணக்கெடுப்பில் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Nilgiris TAHR Project
படக்குறிப்பு, உயரமான மலைப்பகுதிகளே வரையாடுகளின் வாழ்விடம் கொடைக்கானலில்தான் குறைவான அளவு வரையாடுகள்
* துண்டாடப்பட்ட பகுதிகளில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில்தான் அதிகபட்சமாக 208 வரையாடுகள் காணப்பட்டுள்ளன. கொடைக்கானல் வனக்கோட்டப் பகுதியில்தான் குறைந்தபட்சமாக 13 நீலகிரி வரையாடுகள் மட்டுமே இருந்துள்ளன.
* தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் நீலகிரி வரையாடுகளின் ஆண், பெண் விகிதாச்சாரம் 1:2 (49:100 ) என்ற அளவில், அதாவது ஒரு ஆண் வரையாடுக்கு 2 பெண் வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
* கடந்த 1968 ஆம் ஆண்டில் துவங்கி 1998 வரை வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு காட்டுயிர் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புக்கும், தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்புக்கும் இடையில் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பதையும் இந்த அறிக்கை புள்ளிவிரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா, கிராஸ்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த எண்ணிக்கையில் பெரும் மாறுபாடு காணப்பட்டுள்ளது.
* துண்டாடப்பட்டுள்ள வாழ்விடப் பகுதிகளில், மந்தைகளின் நடமாட்டத்தால் மேய்ச்சல் பாதிப்பு, காட்டுத்தீ ஆகியவற்றால் வரையாடுகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, அந்நிய களைச்செடிகள், வரையாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக அறிக்கை கூறுகிறது.
* கடந்த 2024 ஆம் ஆண்டில் 140 பகுதிகளில் வரையாடு கணக்கெடுப்பில் 1031 எண்ணிக்கை இருந்த நிலையில், இந்த ஆண்டில் கூடுதலாக 36 புதிய பகுதிகளைச் சேர்த்து 177 பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் 1303 வரையாடு காணப்பட்டதாகக் கூறும் அந்த அறிக்கை, பழைய பகுதிகளில் இந்த ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டை விட 19 சதவிகிதம் அதிக நீலகிரி வரையாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டை விட கேரளாவில்தான் அதிகமான நீலகிரி வரையாடுகள் உள்ளன. கேரள வனத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளாவில் 1352 வரையாடுகள் காணப்பட்டுள்ளன. தமிழக வனப்பகுதிகளில் 1303 நீலகிரி வரையாடு இருப்பதாகவும் இரு மாநிலங்களையும் சேர்த்து 2655 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Nilgiris TAHR Project
படக்குறிப்பு, “வரையாடுகள் புல்வெளிகளில் பாதுகாவலன்” ஒரே ஆண்டில் 19 சதவிகிதம் வரையாடுகள் அதிகரித்துள்ளதா?
நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையில் 19 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல், சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. கடந்த 2023 ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டில்தான் முதல் கணக்கெடுப்பு நடத்திய நிலையில், ஒரே ஆண்டில் இத்தனை சதவிகிதம் வரையாடுகள் எப்படி அதிகரித்தன என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பட மூலாதாரம், Supriya Sahu/X
படக்குறிப்பு, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார்இந்த கேள்விக்கு பிபிசி தமிழிடம் விளக்கமளித்த நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குநர் கணேசன், ”ஒரே ஆண்டில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக, கணக்கெடுப்பு அறிக்கையில் எங்குமே தெரிவிக்கப்படவில்லை. இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கூடுதலாக 36 வாழ்விடப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எடுத்த பகுதிகளில் இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் கூடுதலாக 19 சதவிகிதம் வரையாடுகள் காணப்பட்டுள்ளன என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாகிவிட்டதாக அர்த்தமில்லை.” என்றார்.
இந்தியாவிலேயே காட்டுயிரைக் காக்க இப்படி ஒரு தனித்துவமான திட்டம், தமிழகத்தில்தான் துவக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”கேரளாவின் இயற்கை அமைப்பு, வரையாடுகளுக்கு பல்லாண்டுகளாக வாழ்விடமாக இருப்பதால் அங்கு நம்மைவிட எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. தமிழ்நாட்டிலும் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதற்கேற்ப அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
நீலகிரி வரையாடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி பகுதியில் புல்வெளிகள் இருந்த பகுதிகளில் பரவியிருந்த அந்நிய களைச்செடியான கார்ஸ்புரூம் (GORSEBROOM) 90 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையால் அகற்றப்பட்டுள்ளதாக திட்ட இயக்குநர் கணேசன் தெரிவித்தார். ஆனால் இன்னும் பெருமளவு பகுதிகளில் அந்நிய களைச்செடிகளை அகற்ற வேண்டியிருப்பதாகவும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் தொடருமென்றும் அவர் கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நீலகிரி வரையாடு: சில குறிப்புகள்
வரை என்றால் செங்குத்தான பாறை என்றும், அத்தகைய பாறைப்பகுதிகளில் வாழ்வதாலும், நீலகிரி மலைப்பகுதியில் அதிகளவில் காணப்படுவதாலும் நீலகிரி வரையாடு என்று பெயர் பெற்றதாக உலக வன உயிரின நிதியத்தின் கட்டுரையில் விஞ்ஞானி பிரடிட் விளக்கியுள்ளார். மலைவாழ் குளம்பினங்களில் (mountain ungulate) அரிய வகை விலங்கினமாக நீலகிரி வரையாடு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்துக்குள்ளாகியுள்ள இனங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
வரையாடுகளின் ஆயுட்காலம் 3 –9 ஆண்டுகள். குறைந்தபட்சம் 80–110 செ.மீ. வரை வளரும். வளர்ந்த ஆட்டின் எடை 50 முதல் 100 கிலோ வரை இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரம் முதல் 2700 மீட்டர் வரையுள்ள மலைப்பகுதிகளே இவற்றின் வாழ்விடம். 120க்கும் மேற்பட்ட தாவரங்களை இவை உணவாக உட்கொள்கின்றன. ஆறு மாத கர்ப்ப காலத்துக்குப் பின் பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே இவை ஈனும். 6 மாதங்கள் பாலுாட்டும்.புலி, சிறுத்தை, காட்டுநாய் ஆகியவை இவற்றை வேட்டையாடுகின்றன. இதை தமிழ்நாட்டின் மாநில விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழ் இலக்கியங்களிலேயே இவை வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதுதான் காரணம் என்கிறார் விஞ்ஞானி பிரடிட். இதற்கேற்ப தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும், வரையாடு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ள நற்றிணை திருப்புகழ் பாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்மலர்க்கான் மாற்று உம்பர், கருங்கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
(நற்றிணை)
வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு…மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட குவடு தவிடெழ…மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் பெருமாளே”
திருப்புகழ்–618 குருடிமலை
இமாலயன் வரையாடு (Hemitragus jemlahicus), அரேபியன் வரையாடு (Arabitragus jayakari), நீலகிரி வரையாடு (Nilgiritragus hylocrius) என உலகில் 3 வரையாடு இனங்கள் உள்ளன. கடந்த 2005க்கு முன்பு வரை, வடிவம், வாழும் தகவமைப்பின் அடிப்படையில் இவை மூன்றும் ஒரே பேரினமாக (GENES) கருதப்பட்டன. ஆனால், 2005 ஆம் ஆண்டில் ராபிஹூட், ஹசானி ஆகிய 2 மூலக்கூறு ஆராய்ச்சியாளர்கள், இந்த 3 வரையாடுகளின் மூலக்கூறுகளையும் (Molecular phylogenetics) மரபியல்ரீதியாக ஆராய்ந்ததில் இவை மூன்றும் வெவ்வேறு இனம் என உறுதி செய்யப்பட்டதாகச் சொல்கிறார் விஞ்ஞானி பால் பிரெடிட்.
இவற்றின் குரோமோசோம்கள் செம்மறியாட்டின் குரோமோசோம்களை ஒத்திருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்ததாகக் கூறுகிறார் அவர். இவை தமிழ்நாடு, கேரளாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.
”நீலகிரி வரையாடுகள் உயரமான மலைப்பகுதிகளில் சோலைப் புல்வெளிகளில் வாழ்பவை. புல்வெளிகளை மேய்ந்து, அவற்றின் மறுசுழற்சி சரியான முறையில் அமைவதற்கு வரையாடுகள் உதவுகின்றன. அவை இல்லாமல் போனால், மற்ற தாவரங்கள் புல்வெளிகளை ஆக்கிரமித்துவிடும். அதன் விளைவாக, புல்வெளிகளின் மழைநீரைத் தேக்கும் திறன் பாதிக்கப்படும்.
இது ஓடைகளை அழித்து, சிற்றாறுகளின் உற்பத்தியைக் குறைக்கும். இதன் தாக்கம் ஆறுகளின் மீது இருக்கும். ஆகையால், வரையாட்டைப் பாதுகாப்பதை, தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்க வேண்டும்” என்கிறார் பிரெடிட்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு