ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை – சீனா என்ன செய்கிறது?
பட மூலாதாரம், EPA-EFE/KCNA
எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர்பதவி, பாதுகாப்பு செய்தியாளர் 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன.
11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் “டி.எஃப்-17” (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது.
அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது.
அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் – ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதனால்தான் அவற்றை உருவாக்குவதில் உலகளாவிய போட்டி சூடுபிடித்து வருகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் DF-17 ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது. “இது அரசுகளுக்கு இடையில் நாம் காணும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு கூறு மட்டுமே” என்று புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வில்லியம் ஃப்ரீர் கூறுகிறார்.
“[இது] பனிப்போருக்குப் பிறகு நம்மிடம் இல்லாத ஒன்று.”
ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே ஒரு உலகளாவிய போட்டி
ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்த ஊகங்களை பெய்ஜிங் அணிவகுப்பு எழுப்பியது. இன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, பிரிட்டனிடம் எதுவும் இல்லை.
பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிறரிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்ற புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃப்ரீர், சீனாவும் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது என்கிறார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.”
இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், பல மேற்கத்திய நாடுகள் உள்நாட்டில் ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளில் கிளர்ச்சி எதிர்ப்பு போர்கள் இரண்டையும் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின.
அப்போது, ஒரு நவீன, அதிநவீன எதிரிக்கு எதிராக போராட வேண்டிய வாய்ப்பு தொலைதூர ஒன்றாகத் தோன்றியது.
பட மூலாதாரம், Shutterstock
“அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், சீனா ஒரு ராணுவ சக்தியாக உருவெடுத்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்” என்று 2020 -ல் பிரிட்டனின் ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஓய்வு பெற்ற உடனேயே சர் அலெக்ஸ் யங்கர் ஒப்புக்கொண்டார்.
மற்ற நாடுகளும் முன்னேறி வருகின்றன. இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளது, இது ஒரு இடைமறிப்பு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னிடம் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய இரான், ஜூன் மாதம் இஸ்ரேல் மீது 12 நாள் போரின் போது ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகக் கூறியது.
(அந்த ஆயுதம் உண்மையில் மிக அதிக வேகத்தில் பயணித்தது, ஆனால் இது ஒரு உண்மையான ஹைபர்சோனிக் ஏவுகணை என்று கூறும் அளவு பறக்கும் போது இலகுவாக இயங்கியதாக கருதப்படவில்லை).
இதற்கிடையில், வட கொரியா 2021 முதல் தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தன்னிடம் ஒரு சாத்தியமான ஆயுதம் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது.
பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன.
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, ஜூன மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஹைபர்சோனிக் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியதாக இரான் கூறியது. அமெரிக்கா தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது, அமெரிக்கா “டார்க் ஈகிள்” ஹைபர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டார்க் ஈகிள் “ராணுவம் மற்றும் நாட்டின் சக்தியையும் உறுதியையும் நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் இது ராணுவம் மற்றும் கடற்படையின் ஹைபர்சோனிக் ஆயுத முயற்சிகளின் வீரியத்தை பிரதிபலிக்கிறது”.
ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தற்போது வெகு தொலைவில் முன்னேறியுள்ளன – இது ஒரு கவலைக்குரிய விஷயமே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிவேகம் மற்றும் கணிக்க முடியாத போக்கு
ஹைபர்சோனிக் என்றால் மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் பயணிக்கும் ஒன்று. (அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் பயணிக்கக் கூடியது.) இதனால் தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விட வேறுபட்டதாக உள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட சற்றே அதிகமாக (மணிக்கு 767 மைல்) மட்டுமே பயணிக்கும்.
ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவற்றின் வேகம்.
இன்றுவரை மிக வேகமானது ரஷ்யாவின் – அவன்கார்ட் – மேக் 27 (தோராயமாக 20,700 மைல்) வேகத்தை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது – இருப்பினும் மேக் 12 (9,200 மைல்) என்ற வேகமே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இது வினாடிக்கு இரண்டு மைல்களுக்கு (அதாவது விநாடிக்கு 3.2 கி.மீ.) சமம்.
இருப்பினும், முற்றிலும் அழிக்கும் சக்தியைப் பொறுத்தவரை, ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல என்று ஃப்ரீர் கூறுகிறார்.
“அவற்றைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் இடைமறிப்பதில் உள்ள சிரமம்தான் உண்மையில் இந்த ஏவுகணைகளை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.”
பட மூலாதாரம், Reuters
அடிப்படையில் இரண்டு வகையான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன: பூஸ்ட்-கிளைட் ஏவுகணைகள் (சீனாவில் உள்ள டி.எஃப் -17 போன்றவை) பூமியின் வளிமண்டலத்தை நோக்கியும் சில நேரங்களில் மேலேயும் உந்தி செல்ல ஒரு ராக்கெட்டை நம்பியுள்ளன. அங்கிருந்து அவை இந்த நம்பமுடியாத வேகத்தில் கீழே வருகின்றன.
மிகவும் கணிக்கக்கூடிய வளைவில் (பரவளைய வளைவு) பயணிக்கும் மிகவும் பொதுவான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், ஹைபர்சோனிக் கிளைட் வாகனங்கள் ஒழுங்கற்ற வழியில் நகர முடியும், பறக்கும் போதும் தங்கள் இலக்கை அவற்றை இயக்க முடியும்.
பின்னர் ஹைபர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை உயரம் குறைவாக, எதிரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ரேடார் வீச்சுக்கு வெளியே இருக்க முயற்சிக்கின்றன.
ராக்கெட் பூஸ்டரைப் பயன்படுத்தி அவை இதேபோல் ஏவப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை ஹைபர்சோனிக் வேகத்தை அடைந்தவுடன், அவை “ஸ்கிராம்ஜெட் என்ஜின்” எனப்படும் ஒரு அமைப்பை செயல்படுத்துகின்றன, அது பறக்கும் போது காற்றை எடுத்து, அதன் இலக்கை நோக்கி உந்துகிறது.
இவை “இரட்டை பயன்பாட்டு ஆயுதங்கள்”, அதாவது அவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் செலுத்தலாம், அல்லது வழக்கமான உயர் வெடிபொருள் கொண்ட ஆயுதங்களையும் செலுத்தலாம். ஆனால் இந்த ஆயுதங்களுக்கு வேகத்தை விட வேறு சில விசயங்களும் உள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஓர் ஏவுகணை ராணுவ தரங்களின் அடிப்படையில் உண்மையிலேயே “ஹைபர்சோனிக்” என்று வகைப்படுத்தப்படுவதற்கு, அது பறக்கும் போது இயக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் இலக்கை நோக்கி அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதை ஏவிய ராணுவத்தினர் நினைத்தால் அந்த ஏவுகணையை திடீரென கணிக்க முடியாத வகையில் பாதையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
இது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய பெரும்பாலான, நிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்களால் முடியாது.
“ரேடாரின் வீச்சுக்கு வெளியே பறப்பதன் மூலம் அவை முன்கூட்டியே கண்டறிவதைத் தவிர்க்க முடியும் மற்றும் அவற்றின் இறுதி கட்டத்தில் சென்சார்களில் மட்டுமே தோன்றக்கூடும். இது அந்த ஏவுகணை இடைமறிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது” என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சி கூட்டாளர் பாட்ரிக்ஜா பாசில்சிக் கூறுகிறார். இந்த மையம் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்றுள்ளது.
இதற்கான பதில், மேற்கத்திய நாடுகளின் வான்வெளி அடிப்படையிலான சென்சார்களை வலுப்படுத்துவதாகும், இது தரையில் உள்ள ரேடார்களின் வரம்புகளை சமாளிக்கும் என்று அவர் நம்புகிறார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, நவம்பர் 2024 இல் கியவ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹைபர்சோனிக் ஏவுகணை சிர்கானின் எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள்.நிகழ்நேர போர் சூழ்நிலையில், குறிவைக்கப்படும் நாட்டின் முன் ஒரு பயங்கரமான கேள்வியும் உள்ளது: இது அணுசக்தி தாக்குதலா அல்லது வழக்கமான தாக்குதலா?
“ஹைபர்சோனிக் ஏவுகணைகள் போரின் தன்மையை மாற்றவில்லை, நீங்கள் செயல்படக்கூடிய வேகத்தை மாற்றியுள்ளது” என்று முன்னாள் ராயல் கடற்படை தளபதியும் விமான போர் எதிர்ப்பு நிபுணருமான டாம் ஷார்ப் கூறுகிறார்.
“சில அடிப்படை விசயங்கள் – உங்கள் எதிரியைக் கண்காணிக்க வேண்டும், அவர்களை சுட வேண்டும், பின்னர் நகரும் இலக்கை நோக்கி ஏவுகணையை கையாள வேண்டும் -இவை முந்தைய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டதல்ல, அது பாலிஸ்டிக் ஏவுகணைகளானாலும் சரி, சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் ஆனாலும் சரி” என்கிறார் ஷார்பு.
“அதேபோல், குறிவைக்கப்படும் நாடு உள்வரும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்காணித்து அழிக்க வேண்டும் என்கிற தேவை இப்போதும் மாறப்படவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கு குறைந்த நேரமே உள்ளது”.
இந்த தொழில்நுட்பம் வாஷிங்டனை கவலையடையச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட ஓர் அறிக்கை, “ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து பின்தொடர நிலப்பரப்பு மற்றும் தற்போதைய வான்வெளி அடிப்படையிலான சென்சார் கட்டமைப்புகள் இரண்டுமே போதுமானதாக இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.” என எச்சரிக்கிறது.
இன்னும் சில வல்லுநர்கள் ஹைபர்சோனிக் ஏவுகணையை சுற்றியுள்ள சில விசயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்கள்.
கூடுதலாக மிகைப்படுத்துகிறார்களா?
ராயல் யுனைடெட் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சித்தார்த் கௌஷல், இவை அவசியம் போக்கை மாற்றியமைக்கக் கூடியவை அல்ல என்று நினைக்கிறார்.
“வேகமும் இலகுவாக இயக்கப்படக் கூடிய திறனும் இவற்றை உயர் மதிப்பு இலக்குகளை தாக்குவதற்கான எளிதான தேர்வுகளாக்குகின்றன. தாக்குதல் சமயத்தில் அவற்றின் இயக்க ஆற்றல் கடினமான, மிக ஆழமாக புதைக்கப்பட்ட இலக்குகளை குறிவைக்க பயனுள்ள வழிமுறையாக அமைகிறது, இந்த இலக்குகளை முன்பு பெரும்பாலான வழக்கமான ஆயுதங்களால் அழிப்பது கடினமாக இருந்தது.” என்று கௌஷல் கூறுகிறார்.
ஆனால் அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணித்தாலும், அவற்றை எதிர்த்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன – அவற்றில் சில “திறனுள்ளவை” என்று ஷார்ப் வாதிடுகிறார்.
முதலாவது, கண்காணிப்பையும் கண்டறிதலையும் மிகவும் கடினமாக்குவது. “ஏவுகணைகள் தங்கள் நிலையைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
“வணிக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தெளிவற்ற செயற்கைக்கோள் படம் சில நிமிடங்கள் பழையதாக இருந்தால் போதும், அதை நம்பி இலக்கு வைக்கப் பயன்படாது.”
“குறிவைக்கப் பயன்படுத்துவதற்கு போதுமான அளவு நிகழ்நேர, துல்லியமான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது கடினமானது மற்றும் விலை உயர்ந்தது.” என்கிறார்.
ஆனால் செயற்கை நுண்ணறிவும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் காலப்போக்கில் இதை மாற்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
படக்குறிப்பு, ஆதாரம் : பாதுகாப்பு உளவு நிறுவனம், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்யா அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை
ரஷ்யாவும் சீனாவும் இந்த ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பது உண்மைதான். “சீன ஹைபர்சோனிக் திட்டங்கள்…கவர்ச்சிகரமானதாகவும் அதே நேரம் கவலைக்குரியவையாகவும் உள்ளன என்று நான் நினைக்கிறேன்,” என்று ஃப்ரீர் கூறுகிறார்.
ஆனால் “ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதைக் கூறினாலும் அதுகுறித்து நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்றும் சொல்கிறார்.
நவம்பர் 2024-ல், ரஷ்யா யுக்ரேனின் நிப்ரோவில் உள்ள ஒரு தொழிற்சாலை தளத்தில் சோதனைக்காக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது, அதை நேரடி சோதனைக் களமாகப் பயன்படுத்தியது.
இந்த ஏவுகணை மேக் 11 (அல்லது மணிக்கு 8,439 மைல்) ஹைபர்சோனிக் வேகத்தில் பயணித்ததாக யுக்ரேன் தெரிவித்தது, இந்த ஏவுகணைக்கு ‘ஒரெஷ்னிக்’ என்று பெயரிடப்பட்டது, இது ரஷ்ய மொழியில் ஹேசல் மரம் (Hazel tree/ஜாதி பத்திரி மரம்) என்பதாகும்.
ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் மேக் 10 வேகத்தில் பயணித்ததாக கூறினார்.
ஏவுகணை இலக்கை நெருங்கியதும் அதன் ஆயுத முனை பல தனித்தனி பாகங்களாக பிரிந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தாக தகவல் கிடைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி இலக்குகளை கொண்டிருந்தன. இது பனிப்போர் காலத்து நடைமுறையாகும். அது சோதனை என்பதால், அப்போது அவற்றில் செயலற்ற எரிபொருள்களே இருந்தன.
அது தரையிறங்கியதைக் கேட்ட ஒருவரிடம் பேசிய போது, ” அது மிக சத்தமாக இல்லை, ஆனால் பல இடங்களை அது தாக்கியிருந்தது: 6 ஏவுகணை முனைகள் தனித்தனி இலக்குகளில் விழுந்தன. ஆனால் அவை செயலற்றவையாக இருந்ததால், அதனால் ஏற்பட்ட சேதம், யுக்ரேன் நகரங்களில் ரஷ்யாவின் இரவுக் குண்டுவீச்சால் ஏற்படும் சேதத்தை விட மிக அதிகமாக இல்லை.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் பிரதானமாக ரஷ்யாவின் ஏவுகணைகளால் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏவுகணைகள் ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் உள்ள காலினின்கிராட் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முறை முழு உயர் வெடிகுண்டுகளை ஏற்றி புதின் கியவ் நகரத்தின் மீது ஒரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் என்னவாகும்?
ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் தொடர் உற்பத்தி செய்யப்பட போவதாகவும், இலக்குகளை “தூளாக்கும்” திறன் தங்களிடம் உண்டு என்றும் கூறினார்.
ரஷ்யாவிடம் ஹைபர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் பிற ஏவுகணைகளும் உள்ளன.
புதின் தனது வான்படையின் கின்ஜால் (Kinzhal) ஏவுகணைகளைப் பற்றி அதிகம் பேசினார், அவை மிக வேகமாக செல்லும் அவற்றை இடைமறிப்பது சாத்தியமில்லை என்று கூறினார். அதன்பின், அவர் அவற்றில் பலவற்றை யுக்ரேன் மீது ஏவியுள்ளார் – ஆனால் கின்ஜால் உண்மையில் ஹைபர்சோனிக் அல்லாமல் இருக்கலாம் என்றும், பலவும் இடைமறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளை விஞ்சி உள்ளன.மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை தருவது ரஷ்யாவின் அதிவேகமான, மிக இலகுவாக இயக்கப்படக்கூடிய ஆயுதமான அவன்கார்ட் ஆகும். 2018 -ல் வேறு ஐந்து ‘சூப்பர் ஆயுதங்களுடன்’ அறிமுகமானது, அதனை புதின் தடுக்க முடியாதது என்று கூறினார்.
டாக்டர் சித்தார்த் கௌஷல் அதன் முதன்மையான பங்கு உண்மையில் “அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை விஞ்சுவதுதான்” என்று கூறுகிறார்.
“ரஷ்யாவின் அரசு ஆயுதத் திட்டங்கள் அவன்கார்ட் போன்ற அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் ரஷ்யாவிடம் போதிய அளவு இல்லை என்பதையும் காட்டுகின்றன,” என்று அவர் வாதிடுகிறார்.
மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மூலோபாய மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருவதால், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் பெருக்கம் தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க கடற்படை நிலைப்பாட்டிற்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது.
சீனாவிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைபர்சோனிக் ஆயுதக் கிடங்கு உள்ளது. 2024-ன் பிற்பகுதியில், சீனா தனது சமீபத்திய ஹைபர்சோனிக் கிளைட் வாகனமான GDF-600ஐ வெளியிட்டது. 1,200 கிலோ பேலோடுடன், இது துணை ஆயுதங்களைச் சுமந்து மேக் 7 (மணிக்கு 5,370 மைல்) வேகத்தை எட்ட முடியும்.
பிரிட்டனின் அவசர முயற்சியில் வெற்றி
பிரிட்டன் இந்தப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது, குறிப்பாக அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து அணு ஆயுத நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகிறது. ஆனால் தாமதமாக முயன்றாலும், அது விரைந்து எட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறது, அல்லது குறைந்தபட்சம் பந்தயத்தில் சேர முயற்சி செய்கிறது.
ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமும் ஒரு முக்கிய சோதனைத் திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் “ஒரு முக்கிய தருணத்தை” எட்டியுள்ளனர் என்று அறிவித்தன.
பிரிட்டனின் உந்துசக்திச் சோதனை பிரிட்டிஷ் அரசு, தொழில்துறை மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று தரப்பு ஒத்துழைப்பின் விளைவாகும். ஆறு வாரங்களில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசா லாங்லே ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 233 “வெற்றிகரமான நிலையான சோதனை ஓட்டங்கள்” மேற்கொள்ளப்பட்டன.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி இதை “ஒரு மைல்கல் தருணம்” என்று அழைத்தார்.
ஆனால் இந்த ஆயுதம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
பட மூலாதாரம், REUTERS/Valentyn Ogirenko
படக்குறிப்பு, ரஷ்யாவின் ‘கின்ஜால்’ ஏவுகணை உண்மையில் ஹைபர்சோனிக் திறன் கொண்டதாக இருக்காது, அவற்றில் பல யுக்ரேனின் தடுப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குவதுடன், மேற்கத்திய நாடுகள் அவற்றிற்கு எதிரான வலுவான பாதுகாப்பையும் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃப்ரீர் வாதிடுகிறார்.
“ஏவுகணைப் போர் என்று வரும்போது, இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பற்றியது. நீங்கள் சேதத்தைக் குறைக்கவும் முடிய வேண்டும், அதே நேரத்தில் எதிரியின் ஏவுதள அமைப்புகளைத் தாக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.”
“உங்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால், நீங்கள் ஒரு அளவிற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடிந்தால்… அப்போது ஒரு எதிரி மோதலைத் தொடங்க முயற்சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.”
எனினும், இந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும் என்பது குறித்து டாம் ஷார்ப் இன்னும் எச்சரிக்கையாக உள்ளார்.
அவர், “ஹைபர்சோனிக்ஸ் குறித்த முக்கிய விஷயம், இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் கடினமானவை – இரண்டும் இன்னும் கச்சிதமாக வடிவம் பெறவில்லை” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு