“விருப்பமில்லை என்றால் வாங்காதீர்கள்” – அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் பதில்
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. யுக்ரேன் போர் தொடர இந்தியா எண்ணெய் வாங்குவதும் ஒரு காரணம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அதே போல, ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கி வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாகவும் இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவர்ரோ ஆகியோர் இந்தியாவை வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
இந்தச் சூழலில், எகனாமிக் டைம்ஸ் நிகழ்வில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, “விரும்பவில்லை என்றால் வாங்காதீர்கள்” – அமெரிக்காவுக்கு ஜெய்ஷங்கர் பதில் எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றம் 2025 இல் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் , “வர்த்தகத்தை ஆதரிக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்காக வேலை செய்யும் மக்கள், மற்றவர்கள் வர்த்தகத்திற்கு ஆதரவானவர்கள் எனக் குற்றம் சாட்டுவது அபத்தமானது” என்றார்.
மேலும், “இந்தியாவில் இருந்து எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், வாங்க வேண்டாம். யாரும் உங்களை வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் அதை வாங்குகின்றன. எனவே உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், அதை வாங்க வேண்டாம்” என்றும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆகியோரைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை விமர்சித்துள்ளார்.
“ரஷ்ய எண்ணெயை சுத்திகரிக்கும் சலவை நிலையமாக இந்தியா மாறிவிட்டது. இதன் மூலம், அது தனக்கு லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், யுக்ரேன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக நிதியுதவியும் செய்து வருகிறது” என்று நவரோ கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3 வது தரப்பு இல்லை
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், இந்த நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினரின் மத்தியஸ்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார் .
“அந்த சமயத்தில், தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்கள் நடந்து கொண்டிருந்தன. எனது எக்ஸ் தளப் பக்கத்தில் இது தொடர்பான ஒவ்வொரு அழைப்பு குறித்த தகவலையும் பதிவிட்டேன். பதற்றமான சூழல் நிலவும் போது, நாடுகள் ஒன்றையொன்று தொடர்பு கொள்வது இயல்பானது” என்று ஜெய்சங்கர் கூறினார்.
“இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்தபோதும், நான் அவரை அழைத்தேன்” என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
“இன்றைய காலகட்டத்தில், அனைத்து நாடுகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகின்றன. சர்வதேச உறவுகளில் வலுவான வரலாற்றைக் கொண்டவர்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த மூன்றாம் தரப்பினரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்பது தெளிவாகிறது” என்று ஜெய்சங்கர் கூறினார்.
சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடந்தது என்பதை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர், மே 6-7 இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்தது.
அந்த நடவடிக்கைகளுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று இந்தியா பெயரிட்டது.
இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய ராணுவ மோதல், மே 10 அன்று சண்டை நிறுத்த அறிவிப்புடன் முடிந்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு