Saturday, August 23, 2025
Home பிபிசிதமிழிலிருந்துகரண்: பாம்புக் கடிக்கு 2 மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி போடப்பட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்? – BBC News தமிழ்

கரண்: பாம்புக் கடிக்கு 2 மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி போடப்பட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்? – BBC News தமிழ்

by ilankai
0 comments

காணொளிக் குறிப்பு, பாம்புக்கடி நோயாளிக்கு 76 ஊசிகள். என்ன நடந்தது?இரண்டு மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி – பாம்பு கடிபட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்?

49 நிமிடங்களுக்கு முன்னர்

இது அறுவை சிகிச்சை சம்பவம் இல்லை. ஆகஸ்ட் 15, உத்தர பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம். 14 வயது கரண் யாதவ், வீட்டிற்கு அருகில் சமையலுக்காக விறகு சேகரிக்க சென்றபோது அவரை விஷப்பாம்பு கடித்தது.

“பாம்பு கடித்ததும், நான் சைக்கிளில் ஒன்றரை, இரண்டு கிலோமீட்டர் சென்று, மாமாவுக்கும் அம்மாவுக்கும் சொன்னேன். அவர்கள் என்னை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மயக்கமாக இருந்தேன். அப்போதே டாக்டர் எனக்கு இன்ஜெக்ஷன் போட்டார்.” எனத் தெரிவிக்கிறார் கரண் யாதவ்

banner

பாம்பு கடித்தால் பொதுவாக விஷமுறிவு ஊசிகள் கொடுக்கப்படும். ஆனால் கரணின் விவகாரம் முற்றிலும் வேறானது. வெறும் இரண்டு மணி நேரத்தில் அவருக்கு 76 விஷமுறிவு ஊசிக்கள் போடப்பட்டன. கரணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஹரி மாத்தூர் இதைப் பற்றி விளக்குகிறார்.

“கரண் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​அவரது நிலை மோசமாக இருந்தது, இரண்டு முதல் மூன்று மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலை மேம்பட்டது, பின்னர் கண்காணிப்பிற்காக மேலும் இரண்டு நாட்கள் ஐசியுவில் வைக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த அளவுக்கு அதிக மருந்து கொடுப்பது பற்றி நிபுணர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான சதீஷ் குமார் கூறுகையில், அதிகபட்சமாக 25 பாம்பு நஞ்சு முறிவு ஊசிகள் போடும்போதே கடிபட்டவர் குணமடைவார் என்றார்.

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான மருத்துவர் சதீஷ் குமார், “அதிகபட்சமாக, பாம்பு நஞ்சை முறிக்க 30 குப்பி மருந்துகள் தேவைப்படும். நாகப்பாம்புப் போன்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய பாம்பு கடித்தால் குறைந்தது 20 குப்பி மருந்துகள் தேவைப்படும். இதுவரையிலான அனுபவத்தின்படி, பாம்புக்கடி பட்டவர்கள் பொதுவாக 10 முதல் 25 குப்பி மருந்துகளால் குணமடைகிறார்கள். மேலும் இந்த மருந்துகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவதில்லை. அவை பயன்பாட்டிற்கு முன் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு, ஐந்து தொகுப்புகளாக வழங்கப்படுகின்றன. எனவே 76 குப்பி மருந்துகள் இவ்வளவு குறுகிய காலத்தில் செலுத்தப்பட்டதாக யாராவது கூறினால், அது வியப்புக்குரியதுதான்.” என்றார்.

பாம்பு விஷத்தின் தாக்கம் பாம்பின் வகையைப் பொறுத்தது. சில விஷங்கள் இதய துடிப்பை பாதிக்கும், சில நரம்பு மண்டலத்தையும், தசைகளையும் சேதப்படுத்தும்.அதுவும் அனைத்து பாம்புகளும் விஷமுள்ளவை என்றே இருக்க வேண்டியதில்லை. சரி, இதனை எப்படிக் கண்டுபிடிப்பது, அதற்கு வழங்க வேண்டிய மருந்தை எப்படித் தீர்மானிப்பது? இந்த கேள்விகளுக்கு மருத்துவர் சதீஷ் பதிலளித்தார்.

“பாம்புக் கடி தொடர்பான புகார்களில் முதலில் அது பாம்புக்கடிதானா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதற்குப் பாம்புக் கடிபட்ட இடத்தை சரிபார்க்கிறோம். பாம்புக் கடிபட்ட இடத்தில் ஒரு பல்லின் குறி இருந்தால், அது நஞ்சுடைய பாம்புடையதாக இருக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லின் அறிகுறி இருந்தால் அது நஞ்சற்ற பாம்பாக இருக்கலாம்.”

“பாம்புக்கடி பட்டவர் சிகிச்சைக்கு வந்தால், முதலில் அவரின் ரத்த உறைதலைப் பரிசோதிப்போம். அவரின் 10 முதல் 20 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே விடுகிறோம். ரத்தம் உறைந்தால் அது நஞ்சற்ற பாம்பு. அதுவே ரத்தம் உறையாவிட்டால் அது நஞ்சுள்ள பாம்புக் கடித்துள்ளது என்று அர்த்தம். பின்னர் கொடுக்கப்படும் மருந்தின் அளவு நஞ்சைப் பொறுத்து மாறுபடும்.” என்ற்ய் தெரிவித்தார்,

இருப்பினும், கரணுக்கு வழக்கத்தைவிட அதிக டோஸ் கொடுக்கப்பட்டதை மருத்துவர் ஹரி மாத்தூரே ஒப்புக்கொள்கிறார். மேலும் கண்காணிப்பு இன்றி இதைச் செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் கூறினார்.

தங்கள் குழந்தை நலமாக இருப்பதால் கரணின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்ட மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தனது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் கரணின் தாய் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like