“கழிப்பறையிலிருந்து பாலியல் நோய்கள் பரவுமா?” – எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சோபியா குவாக்லியாபதவி, பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கழிப்பறை இருக்கையில் அமரும்போது, கழிப்பறையில் நோய்க்கிருமிகள் எவ்வளவு நேரம் உயிர்வாழும் என நீங்கள் யோசிக்கலாம்.
பொது கழிப்பறையில் கால் வைத்தவுடன் ஏற்படும் “மோசமான” உணர்வை தவிர்க்க முடியாது. கழிவறையின் இருக்கையிலும் தரையிலும் சிறுநீர் தெறித்திருப்பது, வேறொருவரின் உடல் திரவங்களின் கடுமையான வாசனை போன்றவை உங்கள் புலன்களைத் தாக்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இதைச் சமாளிக்க, சிலர் முழங்கையால் கதவைத் திறப்பார்கள், காலால் தண்ணீர் குழாயை திறப்பார்கள், அல்லது முழு இருக்கையையும் கழிப்பறை காகிதத்தால் மூடி வைப்பார்கள்.
மிகவும் அருவருப்பாக இருந்தால், இருக்கையில் உட்காராமல் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.
ஆனால், கழிப்பறை இருக்கையில் அமர்ந்தால் உண்மையில் நோய்கள் பரவுமா? சிலர் இருக்கையைத் தொடாமல் இருக்க பயன்படுத்தும் இந்த சிக்கலான முறைகள் தேவையற்றவையா? நுண்ணுயிரியலாளர்கள் இதைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
“கோட்பாட்டளவில், கழிப்பறை இருக்கையிலிருந்து நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது, ஆனால் அந்த ஆபத்து மிகவும் குறைவு,” என்கிறார் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஜில் ராபர்ட்ஸ்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்களை (STDs) எடுத்துக்கொள்வோம். கோனோரியா முதல் கிளமிடியா வரை, இவற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள், ஒரு உயிரினத்தின் உடலுக்கு வெளியே நீண்ட நேரம் உயிர்வாழ முடியாது, குறிப்பாக கழிப்பறை இருக்கை போன்ற குளிர்ந்த, கடினமான மேற்பரப்பில் அவற்றால் வாழ முடியாது.
அதனால்தான் பெரும்பாலான பாலியல் நோய்கள் பிறப்புறுப்புடன் நேரடியான தொடர்பு கொள்ளுதல் மற்றும் உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலமாக பரவுகின்றன எனக் கருதப்படுகிறது.
கழிவறையின் இருக்கையிலிருக்கும் வேறொருவரின் உடல் திரவங்கள், கை அல்லது கழிப்பறையில் பயன்படுத்தும் காகிதம் மூலம் உடனடியாக பிறப்புறுப்புக்கு மாற்றப்பட்டால் மட்டுமே ஆபத்து ஏற்படும், என்கிறார் ராபர்ட்ஸ்.
அதனால், எச்சரிக்கையாக இருப்பதும், மாசுபட்ட கழிப்பறைகளைத் தவிர்ப்பதும் நல்லது.
ஆனால் இது குறித்து அதிகமாக கவலைப்பட்டு இரவில் தூக்கமின்றி தவிக்கும் அளவுக்கு யோசிக்க வேண்டிய அவசியமில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கழிப்பறை இருக்கையை காகிதத்தால் மூடுவதால் கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியாது, ஏனெனில் காகிதம் அதிக துளைகளை கொண்டது “கழிப்பறை இருக்கைகள் பால்வினை நோய்களை எளிதாகப் பரப்ப முடிந்தால், எல்லா வயதினரிடமும், பாலியல் செயல்பாடு இல்லாதவர்களிடமும் அவை அடிக்கடி தென்பட்டிருக்கும்,” என்கிறார் ராபர்ட்ஸ்.
அதேபோல், கழிப்பறை இருக்கையிலிருந்து ரத்தத்தால் பரவும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு என்கிறார் ராபர்ட்ஸ்.
முதலில், இருக்கையில் ரத்தம் இருந்தால் அதை நீங்கள் பார்த்து தவிர்ப்பீர்கள் என்று அவர் கருதுகிறார். மேலும், பாலியல் செயல்பாடு அல்லது மாசுபட்ட ஊசிகள் மூலம் ஊசி போடப்படாவிட்டால், ரத்தத்தால் பரவும் நோய்க்கிருமிகள் எளிதில் பரவாது என்கிறார்.
அதேபோல், கழிப்பறை இருக்கையிலிருந்து மற்றொருவரின் சிறுநீர் பாதை தொற்று (UTI) உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு என்கிறார் ராபர்ட்ஸ்.
கழிப்பறை இருக்கையிலிருந்து மலத்தை சிறுநீர் பாதைக்கு மாற்றினால் மட்டுமே சிறுநீர் பாதை தொற்று ஏற்படும், ஆனால் அதற்கு அதிக அளவு மலம் தேவைப்படும் என்கிறார். உங்கள் சொந்த மலத்தை பிறப்புறுப்புக்கு மிக அருகில் துடைப்பதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றும் அவர் விளக்குகிறார் .
உங்களுக்கு வேறு என்ன பாதிப்பு ஏற்படலாம் ?
நீண்ட காலம் உயிர்வாழும் பாலியல் நோய் கிருமிகளுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்கள் (HPV), மேற்பரப்புகளில் ஒரு வாரம் வரை நீடிக்கலாம், ஆனால் இது பல காரணிகளைப் பொறுத்தது.
“இந்த வைரஸ்கள் மிகச் சிறியவை மற்றும் மிகவும் நிலையான புரத ஓடுகளைக் கொண்டவை.
இவை சுற்றுச்சூழலில் நீண்ட ‘காலம்’ வாழ சக்தி அளிக்கின்றன,” என்கிறார் நெவாடாவில் உள்ள டூரோ பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்பு துறை பேராசிரியர் கரேன் டூயஸ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களிலிருந்து வரும் புகை மூட்டங்களால், பொது கழிப்பறையில் மிகவும் அழுக்கான இடம் பெரும்பாலும் தரையாக இருக்கலாம்இந்த வைரஸ் (HPV) கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. அந்த கடினமான, பாதுகாப்பு புரத ஓட்டை அழிக்க 10% செறிவுள்ள ப்ளீச் தேவைப்படுகிறது என்று டூயஸ் கூறுகிறார்.
இருப்பினும், பிறப்புறுப்பு பகுதியின் தோல் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அதாவது சொறி அல்லது காயம் இருந்தால் மட்டுமே, நீங்கள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது இந்த வைரஸ்கள் உடலுக்குள் நுழைய முடியும்.
எனவே, இந்த வைரஸ் (HPV) பொதுவாக வாய்வழி, ஆசனவழி மற்றும் யோனி வழியாக உடலுறவு கொள்ளுதல் போன்ற தொடர்பு மூலம் மட்டுமே பரவுகிறது.
இதேபோல், கோட்பாட்டளவில், பிறப்புறுப்பு ஹெர்பெஸ் உள்ள ஒருவருக்கு வெடிப்பு ஏற்பட்டிருந்தால், அவர் கழிப்பறை இருக்கையில் வைரஸைப் பரப்பலாம்.
அதற்குப் பிறகு, அந்த கழிவறை இருக்கையைப் பயன்படுத்தியவர்களின் தோல் உடைந்திருந்தால் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க Treated.com ஆன்லைன் சுகாதார சேவை நிறுவனத்தின் மருத்துவத் தலைவர் டேனியல் அட்கின்சன் கூறுகிறார்.
ஆனால், அதற்கு பெரியளவில் சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கழிப்பறை இருக்கையை தொடாதபடி அமர வேண்டுமா?
பொது கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, இருக்கையில் அமர்வதற்கு முன் அதை கழிப்பறை காகிதத்தால் மூடுவது அல்லது கழிப்பறை மூடியைப் பயன்படுத்துவது மிகவும் சுத்தமான வழியாகத் தோன்றலாம்.
2023-ல் யூகவ் (YouGov) ஆராய்ச்சி குழு நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சுமார் 63% அமெரிக்கர்கள் பொது கழிப்பறையை அமர்ந்தபடி பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களில் பாதி பேர் முதலில் இருக்கையை கழிப்பறை காகிதத்தால் மூடுகிறார்கள் என்றும்,
அதே கணிப்பில், சுமார் 20% பேர் இருக்கையில் அமராமல் பயன்படுத்துவதாகவும் தெரியவந்தது.
ஆனால், கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தின் ஒரு அடுக்கு அல்லது கழிப்பறை மூடி நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு தராது. அவை நுண்ணியப் பொருட்களால் ஆனவை, எனவே கிருமிகள் ஊடுருவி பிறப்புறுப்புகளைத் தொடுவதைத் தடுக்க முடியாது.
மேலும், உட்காராமல் பயன்படுத்துவது நன்மையை விட தீமையையே விளைவிக்கலாம் என்கிறார் ஓஹியோ மாநில பல்கலைக்கழக வெக்ஸ்னர் மருத்துவ மையத்தின் இடுப்பு சுகாதார நிபுணர் ஸ்டெஃபனி பாபிங்கர்.
பெண்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறையின் மேல் உட்காராமல் இருக்கும்போது, இடுப்புத் தளம் மற்றும் இடுப்பு வளைய தசைகள் சுருங்குகின்றன. இது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கிறது, எனவே கூடுதல் அழுத்தம் கொடுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும், இது இடுப்புக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால், சிறுநீர்ப்பையை முழுமையாக காலி செய்யாமல் போகலாம், இது சில சமயங்களில் சிறுநீர் பாதை தொற்றுக்கு (UTI) கூட வழிவகுக்கலாம்.
உண்மையான பிரச்னை
பொதுவாக,கழிப்பறையில் நோய்கள் பரவும் ஆபத்து, கழிப்பறை இருக்கையுடன் பிறப்புறுப்பு தொடர்பு கொள்வதால் ஏற்படுவதல்ல. மாறாக, உங்கள் கைகள் கழிப்பறை இருக்கையைத் தொட்டு, உங்களது அல்லது மற்றவர்களின் உடல் திரவங்களின் சிறிய துகள்களிலிருந்து பாக்டீரியா அல்லது வைரஸ்களால் மாசுபடுவதால் இந்த ஆபத்து வருகிறது என்று ராபர்ட்ஸ் கூறுகிறார். பின்னர், அந்த அழுக்கான கைகளால் உங்கள் முகத்தையும் வாயையும் தொடும்போது நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
“ஆபத்து உங்கள் பின்புறத்திற்கு இல்லை, அது உங்கள் கைகளிலிருந்து உங்கள் வாய்க்கு ஏற்படுகிறது,” என்கிறார் ராபர்ட்ஸ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொது கழிப்பறைகளில், கழிப்பறை இருக்கையைப் போலவே கதவு கைப்பிடியிலும் மாசுபாடு இருக்க வாய்ப்புள்ளதுமுதலில், கழிப்பறை இருக்கையில் படிந்திருக்கும் மலத் துகள்களில் எஸ்கெரிச்சியா கோலி, சால்மோனெல்லா, ஷிகெல்லா, ஸ்டேஃபிளோகோகஸ் அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற நோய்க்கிருமிகள் இருக்கலாம். இவை உடலுக்குள் செல்லும்போது, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
மலத்தில் நோரோவைரஸின் தடயங்களும் இருக்கலாம். தொற்றக்கூடிய இந்த நோய்க்கிருமி, மாசுபட்ட மேற்பரப்புகள், உணவு அல்லது பானங்கள், அல்லது உடல்நிலை சரியில்லாத ஒருவருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.
மிகவும் வலிமையான இந்த வைரஸ், சில மேற்பரப்புகளில் இரண்டு மாதங்கள் வரை கூட உயிர்வாழும்.
அந்த வைரஸின் 10 முதல் 100 துகள்கள் மட்டுமே ஒருவரைப் பாதிக்க போதுமானவை. கோவிட்-19 மற்றும் அடினோவைரஸுடன் ஒப்பிடும்போது, கழிப்பறையில் மாசுபட்ட மேற்பரப்புகளைத் தொடுவதால் நோரோவைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது.
அடினோவைரஸ் பெரும்பாலானவர்களுக்கு சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தினாலும், வயதானவர்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது கடுமையான நோயை உண்டாக்கலாம்.
ஆனால், இவ்வாறு நோய்வாய்ப்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது.
“கழிப்பறைகள் மலத்தால் மாசுபடவில்லை. அவை தவறாமல் சுத்தம் செய்யப்படுகின்றன,” என்கிறார் ராபர்ட்ஸ்.
அவரது நுண்ணுயிரியல் மாணவர்கள் பல்வேறு இடங்களின் மேற்பரப்புகளை ஆய்வு செய்யும்போது, கணினி ஆய்வகத்தில் காணப்படும் கிருமிகளின் அளவு, கழிப்பறைகளை விட மிக அதிகமாக இருக்கிறது என்கிறார்.
“அமெரிக்காவில், பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த பொது கழிப்பறைகளை விட, வீட்டு கழிப்பறைகளில் கிருமிகள் அதிகம்,” என்கிறார் அரிசோனா பல்கலைக்கழகத்தின் வைராலஜி பேராசிரியர் சார்லஸ் கெர்பா. “பெரும்பாலான இடங்களில், வீட்டு கழிப்பறையை விட பொது கழிப்பறையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.”என்றும் அவர் கூறுகிறார்.
பெரும்பாலான இடங்களில், பொது கழிப்பறைகள் ஒரு நாளைக்கு பல முறை சுத்தம் செய்யப்படுகின்றன, ஆனால் வீடுகளில் பெரும்பாலும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன என்கிறது கெர்பாவின் ஆய்வு. அதேபோல் வீட்டு கழிப்பறைகளை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று கெர்பாவின் ஆய்வகம் பரிந்துரைக்கிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’கழிப்பறை தும்மல்’ குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
நிச்சயமாக, பெரும்பாலானவர்கள் கழிப்பறை இருக்கைகளைத் தொடுவதில்லை. மக்கள் நாம் நினைப்பதைவிட குறைவாகவே கைகளைக் கழுவுகிறார்கள் என்றாலும் , கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை வாயில் வைக்கும் பழக்கம் நம்மிடமில்லை என்று நம்புவோம்.
ஆனால், கழிப்பறையில் நோய்கள் பரவுவதற்கு மற்றொரு வழி உள்ளது. அது ‘கழிப்பறை ப்ளூம்’ (toilet plume). கழிப்பறையை ஃப்ளஷ் செய்யும்போது, அதில் உள்ள கிருமிகள் காற்றில் பறந்து, கழிப்பறை அறை முழுவதும் பரவுகின்றன. நீங்கள் அங்கு இருந்தால், அவை உங்கள் மீதும் விழலாம்.
கழிப்பறையில் இருக்கும் துகள்களில் 40–60% வரை பயணிக்கக்கூடும் என கணித மாதிரிகள் கூறுகின்றன.
“சிலர் இதை ‘கழிப்பறை தும்மல்’ என்று அழைக்கிறார்கள்,” என்கிறார் கெர்பா.
க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் (Clostridium difficile) என்ற நோய்க்கிருமி, சுகாதார மையங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இதைச் சுற்றுச்சூழலில் இருந்து அகற்றுவது மிகவும் கடினம். இந்தக் கிருமி, கழிப்பறையை ஃப்ளஷ் செய்த பிறகு, காற்றில் வெகுதூரம் பயணிக்க முடியும். இது வித்துகளாக (spores) பயணித்து, உள்ளிழுக்கப்படலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
எனவே, ஆபத்து கழிப்பறை இருக்கைகளில் மட்டுமல்ல. கழிப்பறை மூடிகள், கதவு கைப்பிடிகள், ஃப்ளஷ் வால்வுகள், கைப்பிடிகள், துண்டுகள் போன்றவற்றை நேரடியாகக் கைகளால் தொடும்போதும் ஆபத்து ஏற்படுகிறது, என்கிறார் கெர்பா.
உண்மையில் தரை தான், “அதிக கிருமிகள்” கொண்ட பகுதி என்றும் அவர் கூறுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, கழிவறைகளில் சிறுநீர் அல்லது மலத்துடன் தொடர்பில்லாத நோய்க்கிருமிகளும் இருக்கலாம் . அவை தும்மல் மற்றும் இருமல் மூலம் மட்டுமே பரவக்கூடியவை.
உதாரணமாக, காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் கூட சில நேரங்களில் கழிவறையில் காணப்படலாம்.
கழிப்பறையில் இருக்கும்போது நோய்களைத் தவிர்ப்பது எப்படி?
வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ உள்ள எந்த கழிப்பறையிலிருந்தும் மோசமான நோய்கள் தொற்றாமல் தவிர்க்க, சில எளிய நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.
பிரிட்டனின் லஃப்பரோ பல்கலைக்கழகத்தில் நீர் சுகாதாரப் பொறியாளரான எலிசபெத் பேடி, முடிந்தவரை பொருட்களைத் தொடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கிறார். (உண்மையில், கழிப்பறை உற்பத்தியாளர்கள் கழிப்பறைகளைப் பாதுகாப்பாக்க, தொடுதல் இல்லாத ஃப்ளஷிங் முறைகள், சோப்புகள், கை உலர்த்திகள் போன்றவற்றை வடிவமைக்க வேண்டும் என்று பேடி கூறுகிறார்.)
கழிப்பறைப் ப்ளூமைத் (toilet plume) தவிர்க்க, மூடியை மூடி ஃப்ளஷ் செய்வது நல்ல முடிவாகத் தோன்றலாம். ஆனால், “மூடியை மூடுவதும் திறப்பதும் இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை,” என்கிறார் கெர்பா.
அவரது 2024 ஆய்வின்படி, கழிப்பறைத் தூணில் உள்ள வைரஸ்களால், மூடி மூடியிருந்தாலும் பக்கவாட்டாகத் தப்பிக்க முடியும். இதற்குக் காரணம், மூடிகள் கழிப்பறை இருக்கைகளுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பது மற்றும் பொது கழிப்பறைகளில் குறைந்த நீர் பயன்பாட்டிற்காக அதிக அழுத்தம் கொண்ட ஃப்ளஷ்கள் இருப்பது தான்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வீட்டில் உள்ள கழிப்பறையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்உண்மையில், கழிப்பறையில் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கழிப்பறை மூடிகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று பேடி கருதுகிறார். இதனால், மக்கள் மூடியைத் தொடுவதும், பின்னர் தற்செயலாக கழிப்பறை இருக்கையைத் தொடுவதும் தவிர்க்கப்படும்.
“மூடி உண்மையில் சரியான தீர்வு அல்ல,” என்கிறார் அவர்.
மிகவும் பயனுள்ள தீர்வுகள் உள்ளன என்கிறார் பேடி. உதாரணமாக, கழிப்பறை குழாய்க்கும் அதன் இருக்கைக்கும் இடையில் மூடிகள் (shields) உள்ள கழிப்பறைகளை உருவாக்குவது.
தற்போது, இவை பெரும்பாலும் சுகாதார அமைப்புகளில், நோயாளிகளின் ஃப்ளஷ் செய்யப்பட்ட நோய்க்கிருமிகளிலிருந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் பேடி.
காற்றையும் மேற்பரப்புகளையும் சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ஏர் ஸ்ப்ரேகளும் (air sprays) உள்ளன. இவை கழிப்பறை “தும்மல்” மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதை எதிர்க்க உதவுகின்றன.
மற்றொரு வழி, ஃப்ளஷ் செய்தவுடன் உடனடியாக அறையை விட்டு வெளியேறுவது. “நான் வழக்கமாக ஃப்ளஷ் செய்துவிட்டு ஓடிவிடுவேன்,” என்கிறார் கெர்பா.
மற்றொருவர் பயன்படுத்திய பிறகு பொது கழிப்பறைக்குள் செல்வதற்கு 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார், ஆனால் இதை நடைமுறையில் கடைபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.
கழிப்பறையில் இருக்கும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார் ராபர்ட்ஸ். ஏனெனில், நீங்கள் அதை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறீர்கள், எல்லா பகுதிகளிலும் வைக்கிறீர்கள், எப்போதும் தொடுகிறீர்கள். எனவே, அது ஏற்கனவே மிகவும் அழுக்காக இருக்கிறது. கழிப்பறைக்குள்ளும் அதனைக் கொண்டு சென்றால், அறையில் பரவியிருக்கும் கிருமிகள் ஃபோனில் ஒட்டிக்கொள்ளலாம். பின்னர், கைகளைக் கழுவிய பிறகும், அந்தக் கிருமிகளை உங்களுடன் எடுத்துச் செல்லும் ஆபத்து உள்ளது.
கழிப்பறையைப் பயன்படுத்திய உடனே கைகளைக் கழுவுவது மிக எளிய மற்றும் முக்கியமான வழி என்கிறார் கெர்பா. அரிசோனாவின் டக்ஸனில், ஒருவர் சராசரியாக 11 வினாடிகள் மட்டுமே கைகளைக் கழுவுகிறார். ஆனால், அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) 20 வினாடிகள் கழுவ வேண்டும் என பரிந்துரைக்கிறது. “ஐந்தில் ஒருவர் மட்டுமே கைகளைப் போதுமான அளவு கழுவுகிறார்,” என்கிறார் கெர்பா.
பொது கழிப்பறையில் நோய் பரவாமல் தடுக்க, கைகளை நன்றாகக் கழுவுங்கள். மேலும், கைகளைச் சுத்திகரிக்கும் திரவத்தைப் (hand sanitiser) பயன்படுத்துவது இன்னும் அதிக பாதுகாப்பைத் தரும், ஏனெனில் இவை இரண்டும் சேர்ந்து கைகளைக் கழுவுவதை விட சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
கழிப்பறைகளில் பதுங்கியிருக்கும் கிருமிகள் பற்றி அதிகமாக பயப்பட வேண்டாம்.
உங்கள் ஆபத்து (அநேகமாக) நீங்கள் நினைப்பதைவிட குறைவாக இருக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு