Friday, August 22, 2025
Home பிபிசிதமிழிலிருந்துபிரதமர் மோதியை 'வாழ்த்த மற்றும் கொண்டாட' குஜராத் அரசு ரூ.8.81 கோடி செலவு – ஆர்டிஐ தகவல் – BBC News தமிழ்

பிரதமர் மோதியை 'வாழ்த்த மற்றும் கொண்டாட' குஜராத் அரசு ரூ.8.81 கோடி செலவு – ஆர்டிஐ தகவல் – BBC News தமிழ்

by ilankai
0 comments

எழுதியவர், அர்ஜுன் பார்மர் பதவி, பிபிசி குஜராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பட மூலாதாரம், CMO Gujarat

படக்குறிப்பு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோதிகுஜராத் முதலமைச்சராக 2001ம் ஆண்டில் நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்படு 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் பொருட்டு, அவரை வாழ்த்துவதற்காகவும், ‘வளர்ச்சி வாரம்’ எனும் பெயரிலான விளம்பரங்களுக்கும் குஜராத் அரசு ரூ. 8.81 கோடி செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

2024 அக்டோபர் 7 அன்று, குஜராத் அரசு ‘வெற்றிகரமான மற்றும் திறமையான தலைமைத்துவத்தின் 23 ஆண்டுகள்’ என்று மோதியை வாழ்த்தி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிட்டது. இந்த விளம்பரங்கள், 2001 அக்டோபர் 7 அன்று மோதி குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றதை நினைவுகூர்ந்தன. ஒரு அரைப் பக்க விளம்பரத்தில், “குஜராத் வளர்ச்சியின் நம்பிக்கையைப் பெற்றது” என்று மோதியின் 2001ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சமீபத்திய புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தன. மற்றொரு முழுப்பக்க விளம்பரம், ‘வளர்ச்சி வாரம்’ என்று குறிப்பிட்டு, 23 ஆண்டுகளில் குஜராத் அரசின் ‘முன்னேற்றங்கள்’ மற்றும் ‘சாதனைகளை’ விவரித்தது.

banner

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மோதிக்கு வாழ்த்து தெரிவித்து, “வளர்ந்த இந்தியா குறித்த தொலைநோக்கு பார்வை கொண்டவர், வளர்ச்சியின் மனிதர்” என்று புகழ்ந்தார். 2024 அக்டோபர் 7-15 வரை ‘வளர்ச்சி வாரம்’ கொண்டாடப்பட்டு, ரூ. 3,500 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட்டன என்று அகில இந்திய வானொலி தெரிவித்தது.

பட மூலாதாரம், Gujarat Information/FB

படக்குறிப்பு, குஜராத் அரசு வெளியிட்ட விளம்பரங்கள் பிபிசி குஜராத்தி, ஆர்டிஐ மூலம் செலவு விவரங்களைப் பெற்றது. இதன்படி, நாளிதழ் விளம்பரங்களுக்கு ரூ. 2.12 கோடி, ‘வளர்ச்சி வார’ நாளிதழ் விளம்பரங்களுக்கு ரூ. 3.05 கோடி, மற்றும் மின்னணு, டிஜிட்டல், சமூக ஊடக விளம்பரங்களுக்கு ரூ. 3.64 கோடி செலவிடப்பட்டது.

இந்த செலவை அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்திருக்கின்றனர். மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “பிரதமரை விளம்பரப்படுத்த மக்கள் பணத்தைப் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண விரயம்” என்றார். 2015இல், ‘காமன் காஸ் வெர்சஸ் இந்திய ஒன்றியம்’ வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசு விளம்பரங்கள் பொது நலத் திட்டங்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளை மகிமைப்படுத்தக் கூடாது என்று வழிகாட்டுதல்களை வெளியிட்டது.” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விளம்பரங்கள் அந்த வழிகாட்டுதல்களை மீறுவதாகவும், இத்தகைய மீறல்கள் பல மாநிலங்களில் நடப்பதாகவும் பிரசாந்த் பூஷண் கூறினார்.

குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக், “இந்த விளம்பரங்கள் மக்கள் நலக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு அல்ல, மாறாக தலைவரை மகிழ்விக்க முயல்கின்றன” என்றார். அரசு பணம் மக்களின் நம்பிக்கையில் நிர்வகிக்கப்பட வேண்டுமே தவிர, சுய பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். “அரசு கொள்கைகள் ஒருவரின் முகத்தால் அடையாளப்படுத்தப்படுவதில்லை, அவை மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளவை என்பதே அவற்றின் அடையாளம்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் கல்ஹன்ஸ், இந்த விளம்பரங்களை “பெரிய தலைவரை புகழ மக்கள் பணத்தை வீணடிக்கும் முயற்சி” என்று விமர்சித்தார். குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் தீபால் திரிவேதி, “மக்களுக்கு பயனளிக்காத, ஒரு தலைவரை புகழும் விளம்பரங்கள் ஏற்கத்தக்கவை அல்ல” என்றார்.

குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தர்ஷன் தேசாய், “5, 10ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் புரிந்துகொள்ளத்தக்கவை, ஆனால் 23 ஆண்டுகள் என்றால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Arjun Parmar

படக்குறிப்பு, ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்

பட மூலாதாரம், Arjun Parmar

படக்குறிப்பு, ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்

பட மூலாதாரம், Arjun Parmar

படக்குறிப்பு, ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் யாக்னேஷ் தவே, “இந்த செலவு தொகை பற்றி எனக்குத் தெரியாது, அனைத்து அரசு செலவுகளும் தணிக்கை செய்யப்படுகின்றன” என்றார். குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஹிரிஷிகேஷ் படேல், இதைப் பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார். பிபிசி குஜராத்தி, அரசின் பதிலைப் பெற முயன்றது, ஆனால் இதுவரை பதில் வரவில்லை. அவர்கள் பதில் அளிக்கும் போது அது இந்த செய்தியில் சேர்க்கப்படும்.

ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட இந்தத் தகவல் அரசு நிதியின் பயன்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து விவாதங்களைத் தூண்டியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like