களுத்துறை – பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரி -56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட நபர், 57 வயதுடைய முன்னாள் சிறைக்காவலர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சந்தேக நபர்களைக் கைது செய்ய பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.