த.வெ.க மாநாட்டில் எம்.ஜி.ஆர், அண்ணா படங்கள் – விஜய் சொல்ல வரும் அரசியல் செய்தி என்ன?
பட மூலாதாரம், TVK/X
எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த கட்-அவுட்டில் ‘வரலாறு’ திரும்புகிறது என எழுதப்பட்டுள்ளது. 1967, 1977க்கு இடையே 2026 என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியது என, 1967, 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களை குறிப்பிடலாம். இந்த சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டின் இரு முக்கிய தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் இருவரும் மாநிலத்தில் அதற்கு முன்பிருந்த அரசியல் களச்சூழலை மாற்றி வெற்றியை தனதாக்கிக்கொண்டனர். இதேபோன்று, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்பதே தவெகவின் எண்ணமாக இருக்கிறது.
கட்-அவுட்டில் அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன்? இதற்கு முன்பு, 1967, 1977ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது எப்படி, ஏன் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
அரசியல் பயணத்தில் அண்ணா தன் தலைவராக பின்தொடர்ந்த பெரியாருடன் 1949ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்திலிருந்து விலகினார். அதே ஆண்டிலேயே தன் ஆதரவாளர்கள் பலருடன் இணைந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 18, 1949 அன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழைக்கு நடுவே திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பட மூலாதாரம், TWITTER
1949ல் அண்ணா திமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, திராவிட இயக்க அரசியலில் மிக்க அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்தார். திராவிட இயக்க கொள்கைகளை பல மேடைகளில் நின்று எடுத்துரைத்திருக்கிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
1930களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றார்.
திமுகவை ஆரம்பித்த பிறகும், தேர்தல் அரசியலில் அண்ணா உடனேயே இறங்கிவிடவில்லை. ஆட்சி, அதிகாரத்தை நோக்கிய தன் பயணத்தை மிகுந்த கவனத்துடனேயே எடுத்துவைத்தார் எனலாம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டில் நடைபெற்றபோது, திமுக அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, “அந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.” என திராவிட இயக்க வரலாறு எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார், எழுத்தாளர் ஆர். முத்துக்குமார்.
அடுத்ததாக, 1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் 15 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர், அக்கட்சி 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
அதன்பின், 1962 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் பல விஷயங்களை முன்னிறுத்தி திமுக தேர்தலை சந்தித்தது.
1962 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் 142 பேரும் நாடாளுமன்ற தேர்தலில் 18 பேரும் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத் அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியை ஆரம்பித்திருந்தார்.
1962 தேர்தலில் திமுக 50 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான இடங்கள். அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், அந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வியை தழுவினார். எனவே, அண்ணா மாநிலங்களவை உறுப்பினரானார்.
இவ்வாறாக, திமுகவின் 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அதற்கு முந்தைய தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமைந்தன.
1967 தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனை தேர்தலாக அமைந்தது. இந்த தேர்தலில் ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்’ என்ற முக்கிய வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் களம் கண்டார் அண்ணா.
முந்தைய தேர்தல்களில் படிப்படியாக வெற்றி பெற்றாலும், இத்தேர்தலில் கூட்டணி அமைத்தே திமுக களம் கண்டது. சுதந்திரா கட்சி (ராஜாஜி), ஃபார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் (மா.பொ.சி), நாம் தமிழர் (சி. பா. ஆதித்தனார்) உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து அந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியும் 49 இடங்களை மட்டுமே வென்றது. தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோற்றார்.
திமுக அந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1967 மார்ச் மாதம் முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.
1949ல் திமுகவை தொடங்கிய பின் அண்ணா ஆட்சியில் அமர 18 ஆண்டுகள் ஆகின.
பட மூலாதாரம், GNANAM
படக்குறிப்பு, வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்புஅண்ணா அமைத்த கூட்டணி
1967ல் அண்ணா வெற்றி பெற்றது எப்படி என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் கேட்டோம்.
“1967 இருந்த அரசியல் களச்சூழல், தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. எளிய மக்களை அந்த சமயத்தில் காங்கிரஸ் சென்றடையவில்லை. திமுக கட்சியாக இருப்பதற்கு முன்பாகவே கொள்கைகளை மக்களிடத்தில் சேர்த்ததால், வெகுஜன மக்களின் ஆதரவு கிடைத்தது” என்றார்.
அண்ணா அமைத்த கூட்டணியும் வெற்றிக்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.
“அண்ணா ஓர் பரந்த கூட்டணியை அமைத்தார், மா.பொ.சி, ராஜாஜி என மாற்று கொள்கை கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தார். ராஜாஜிக்கு காமராஜரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்படி காங்கிரஸுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டார்.” என்றார் சாவித்திரி கண்ணன்.
“அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தெளிவான மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கமாக திமுக இருந்தது. தேசிய கட்சி அல்லாத ஒரு மாநில கட்சி பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது” என்கிறார், அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன்
எம்ஜிஆரின் அரசியல் பயணம்
இதேபோன்று, எம்.ஜி.ஆரின் பயணமும் நீண்டதாகவே உள்ளது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 1950களின் தொடக்கத்திலேயே திமுகவில் இணைந்தார்.
தன்னுடைய திரைப்படங்களில் திராவிட இயக்கம், திமுகவின் கொள்கைகளை பேசினார். திமுகவுக்காக அப்போதிலிருந்து தேர்தல்களில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக 1967 தேர்தலில் மின்னல் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் ஒரே நாளில் 30-40 பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்துகொண்டதாகவும் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார்.
அதன் விளைவாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா.
பட மூலாதாரம், MGR FAN CLUB
படக்குறிப்பு, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் எம்ஜிஆர். இதன்பின், கட்சியின் வரவு-செலவுகள் குறித்து எம்ஜிஆர் எழுப்பிய கேள்விகளால் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.
அதன்பின், 1972ல் அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் முதல் வெற்றியாக அது அமைந்தது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்த எம்ஜிஆர், 1977ல் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.
20 தொகுதிகளில் அதிமுக, 16 தொகுதிகளில் காங்கிரஸ், 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டன. இந்த கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதிமுக 18, காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றியை பெற்றன.
அதன்பின் நடைபெற்ற 1977 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்தன. கடந்த முறை போன்று சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை.
தேர்தல் முடிவில், அ.தி.மு.க. மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 12 தொகுதிகளைப் பிடித்தது. கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எம்ஜிஆர் வெற்றி பெற்றது எப்படி?
“கருணாநிதியின் தன்னிச்சையான முடிவுகள், திமுக ஆட்சி மீதான அதிருப்தி எம்ஜிஆர் முன்னெடுத்த திமுகவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை இந்த தேர்தலில் எடுபட்டன. அதிமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பு பல காலம் திமுகவில் பயணித்தார், பல பொறுப்புகளை வகித்தார் எம்ஜிஆர். அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். புதிதாக அவர் அரசியலுக்கு வரவில்லை. அதற்கான அங்கீகாரம் தான் 1977ல் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி.” என்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.
1977ல் எம்ஜிஆர் பெற்ற வெற்றி குறித்து பேசிய முனைவர் ராமு மணிவண்ணன், “திமுகவில் இருந்தபோது அக்கட்சிக்காக உழைத்த பிரதான அடையாளம் எம்ஜிஆர். திமுகவுடன் அவருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை ரீதியானதாக மட்டுமல்லாமல், ஆளுமை ரீதியானதாகவும் இருந்ததால் அவருடை தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பு இருந்தது. இதனால், தனிநபர் அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது.” என குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், TVK
விஜய் சொல்ல வரும் செய்தி என்ன?
தற்போது 2026 தேர்தலுக்கு அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன் என கேட்டபோது, “விஜய் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வருகிறார். அதனால் 1967, 1977ல் இருந்த சூழலுடன் அவரை பொறுத்திப் பார்க்க முடியாது. எம்ஜி ஆரின் அரசியல் வாரிசாக தான் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது.” என்றார் அவர்.
விஜயிடம் இதன் மூலம் எந்த அரசியல் செய்தியும் இல்லை என தான் கருதுவதாகக் கூறுகிறார் முனைவர் ராமு மணிவண்ணன்.
“1967, 1977-ஐ முன்னிறுத்துவதற்கு என்ன காரணம் என கேட்டால், அவரிடமிருந்து எந்த அரசியல் செய்தியும் இல்லை என்பதால்தான். வலிமையான, ஆழமான கருத்துகளோ, புதிய அரசியல் பார்வையோ அவரிடம் இல்லை. பழைய பிம்பத்தை தன் அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறார்.
புதிய சிந்தனைகளை சொல்லி அடையாளப்படுத்தும் ஆழமான அரசியல் நிலைப்பாடு அவரிடம் இல்லை. புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் முன்பே வெற்றி பெற்றவர்களைத்தான் கையில் எடுப்பார்கள். தன்னையும் அவர்களோடு சேர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அது மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்கான விளம்பர உத்தியாக உள்ளது. ஆனால், அந்த விளம்பரத்துக்கான விலை என்ன என்பது தேர்தல் முடிவில் தெரியும். ” – என்றார் முனைவர் ராமு மணிவண்ணன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு