‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்றால் என்ன? – சட்டம் வழங்கும் தண்டனையும் அதற்கான தேவையும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகான தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை (குறியீட்டு படம்)எழுதியவர், அபினவ் கோயல்பதவி, பிபிசி செய்தியாளர்26 நிமிடங்களுக்கு முன்னர்
‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்பது கடுமையான பாலியல் குற்றங்களில் ஒன்று. டிஜிட்டல் என்ற வார்த்தையின் காரணமாக, பலர் இது ஆன்லைன் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றம் என்று நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் உண்மையில் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டது.
கடந்த சில ஆண்டுகளில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றில் ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13ஆம் நாள் புதன்கிழமை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கௌதம் புத் நகர் மாவட்ட நீதிமன்றம், ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2014ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்கு ஒன்றில் டியூஷன் ஆசிரியரின் உறவினரான பிரதீப் குமார் என்ற நபர், நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை செய்பவர்களைத் தண்டிக்க நாட்டில் விரைவு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன (குறியீட்டு படம்)2021 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சாகேத் நீதிமன்றம், பிரதீப் குமார் என்ற நபரே குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த வழக்கின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்போது, ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.
தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால், “இப்போது தண்டனையின் அம்சத்திற்கு வருகிறேன். மேல்முறையீடு செய்தவர் சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வயதுடைய ஒரு சிறுமியை ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ செய்ததைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது” என்று கூறினார் .
டெல்லி உயர் நீதிமன்றம் பிரதீப் குமார் குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, NCRB தரவுகளின்படி, 2018-2022க்கு இடையில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 27 முதல் 28 சதவிகித வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)’டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்றால் என்ன?
லத்தீன் வார்த்தையான ‘டிஜிட்டஸ்’ என்பதிலிருந்து, ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்பதில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் என்ற சொல் வந்தது.
‘டிஜிட்டஸ்’ என்றால் விரல். விரல் என்றால் அது கை விரலாகவோ அல்லது கால் விரலாகவோ இருக்கலாம்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஜோத்வானி அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான திவ்யா சிங், “டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சிறுமியின் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவர்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் விரல் அல்லது வேறு எந்தப் பொருள் மூலம் துன்பம் விளைவிப்பதை குறிக்கும் பாலியல் குற்றமாகும்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சட்டத்தின்படி, ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம் (குறியீட்டு படம்)பாலியல் வன்கொடுமைக்கும் ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும்’ உள்ள வேறுபாடு
அந்தரங்க உறுப்புகளை பயன்படுத்தப்படாமல் செய்யப்படும் பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்ட நுணுக்கங்களை சாக்குப்போக்காகச் சொல்லி தப்பித்துவிடும் நிலை இருந்துவந்தது. ஆனால், 2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கிற்குப் பிறகு, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டன.
“2013க்கு முன்பு, ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தி செய்யப்படுவது மட்டுமே பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விரல் அல்லது வேறு எந்தவொரு பொருளையும் செருகுவது, பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை தொடர்பானது) என்பதற்குப் பதிலாக, பிரிவு 354 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டது” என்று பிபிசியிடம் பேசிய திவ்யா சிங் கூறினார்.
“இந்த வழக்குகளில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவாகவே இருந்தது. ஆனால் நிர்பயா வழக்கிற்குப் பிறகு, சட்டம் மாற்றப்பட்டது. குற்றவியல் சட்ட (திருத்தம்) சட்டம், 2013 மூலம், ஐபிசியின் பிரிவு 375இல் பாலியல் வன்கொடுமைக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
“இப்போது டிஜிட்டஸ் (விரல்) ஊடுருவல் கூட, தெளிவாக பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, எந்த கருணையும் காட்டப்படுவதில்லை” என்று திவ்யா கூறுகிறார்.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) அமலுக்கு வந்ததன் மூலம், ஐபிசி சட்டப் பிரிவு 375, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63 என மாற்றப்பட்டுவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமைக்கான வரையறையை இன்னும் விரிவானதாக மாற்ற, ‘ஊடுருவாத செயல்’ (non-penetrative acts) என்பதும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)தண்டனை வழங்கல்
‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்பது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63Bஇன் கீழ் கடுமையான பாலியல் குற்றமாகும்.
இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64இன் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 65(2) வகை செய்கிறது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம். இதைத் தவிர, அபராதமும் விதிக்கப்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்று பெயர் மாற்றப்பட்டதுகாவல்துறை நடவடிக்கை
‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ வழக்குகளில், காவல்துறையினர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். தடயவியல் மாதிரிகள் எடுத்து, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசும் வழக்கறிஞர் திவ்யா, “பல சந்தர்பங்களில் மருத்துவ அறிக்கையில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இல்லை என்று எழுதப்படுவது வழக்கை பலவீனப்படுத்துகிறது. ஆனால் சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருக்க வேண்டியது அவசியமில்லை.”
“ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தாமலேயே பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்பதையும், அதற்கும் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு வழங்கப்படும் அதே அளவிலான கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை சமூகத்தில் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்
‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ வழக்குகளில் ஏற்படும் மன மற்றும் உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவை பிற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உள்ளதைப் போன்றது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.
“பல நேரங்களில் மக்கள் ‘டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, ஆனால் சட்டத்தின்படி, அது பாலியல் வன்கொடுமை மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63இன் கீழ் வருகிறது” என்று அவர் கூறுகிறார்.
“பாலியல் கல்வி என்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமல்ல, வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சரியான தொடுகை, தவறான எண்ணத்தில் தொடுதல் என்ன போன்றவற்றை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்” என்கிறார் காமினி ஜெய்ஸ்வால்.
“இதுபோன்ற குற்றங்களை சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு